search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahmotsavam In Tirupati"

    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.
    • நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் உற்சவங்களில் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கருட சேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கும் கருட சேவை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் கருட சேவை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதற்காக திருப்பதி மலையில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தங்க வைர நகை அலங்காரத்துடன் ஏழுமலையான் எழுந்தருளினார். 4 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு இருந்தனர்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். முதலில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் மாட வீதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் பக்தர்கள் அனைவரும் சிரமம் இன்றி கருட சேவையை தரிசனம் செய்தனர். கருட சேவை முதல் முறையாக நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால் மனமுருக ஏழுமலையானை தரிசித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு 4 லட்சம் இளநீர் பாட்டில்கள், 3 லட்சம் மோர் பாட்டில்கள் மற்றும் 3 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 82,043 பேர் தரிசனம் செய்தனர். 30,100 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா.
    • திருப்பதி மலை மேல் தனியார் வாகனங்கள் செல்ல தடை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் எழுந்திருளினார். இன்று இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. நாளை காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நாளை நடக்கிறது. இந்த ஆண்டு கருட சேவை வழக்கத்தை விட 30 நிமிடம் முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இரவு 11 மணி வரை மாட வீதிகளில் தங்க கருட வாகனத்தில் பல்வேறு நகை அலங்காரங்களுடன் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

    கருட சேவையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே திருப்பதி மலைக்கு வர தொடங்கினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை திருப்பதி மலை மேல் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



    மாலை 6 மணி க்கு மேல் இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ் திருப்பதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எந்தெந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தலாம் என்பதை பக்தர்கள் அறிந்து கொள்ள கியூஆர் கோடு வசதியுடன் கூடிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் சென்னை மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருட சேவையொட்டி ஆந்திர மாநில போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இது தவிர மாட வீதியில் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்தும் நின்றபடியும் கருட சேவை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் மாடவீதிகளில் உள்ள கேலரிகளுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    மேலும் கூடுதல் இடங்களில் அன்னதானம் பால் போன்றவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடப்பதால் பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 13-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரையும், 2-வது பிரம்மோற்சவம் (நவராத்திரி) அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடக்கிறது.

    முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி கருடவாகனம், 18-ந் தேதி தங்கத்தேர், 20-ந்தேதி மரத்தேர், 21-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகியவையும், 2-வது பிரம்மோற்சவத்தின்போது அக்டோபர் 14-ந் தேதி கருடவாகனம், 17-ந் தேதி தங்கத்தேர், 18-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் வாகன சேவைகள் நடக்கிறது. வழக்கமாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கருடசேவை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. 13-ந் தேதி ஆந்திரா மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்.



    பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி அனில்குமார்சிங்கால் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரம்மோற்சவ விழாவுக்காக ரூ.4½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதிக்குள் சிறப்பு ஏற்பாடு பணிகளை முடிக்கவேண்டும். பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. 6,800 கார்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 165 சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கருடசேவையின்போது வி.ஐ.பி.தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 10 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான துணை அதிகாரிகள் பாலபாஸ்கர், சீனிவாசராஜி, பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் ரெட்டி, என்ஜினீயர் சந்திரசேகர் ரெட்டி, கோவில் அதிகாரி அரிந்திரநாத், சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா, போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மகந்தி பங்கேற்றனர். #TirupatiTemple

    ×