என் மலர்
நீங்கள் தேடியது "breast cancer"
- நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனது.
- சில சமயங்களில் உடலில் தேவையற்ற புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன.
நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ('செல்'கள்) ஆனது. இந்த உயிரணுக்கள் பிரிந்து வளர்ச்சி அடைந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான புதிய உயிரணுக்களை உருவாக்குகின்றன. சில சமயங்களில் உடலுக்கு தேவையற்ற புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. அதேசமயம், உடலில் உள்ள வயதான பழைய உயிரணுக்கள் இறக்க வேண்டிய நேரத்தில் செத்து வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகின்றன.
இப்படி புதிதாக உருவாகும் தேவையற்ற உயிரணுக்களும், இறந்து வெளியேறாமல் இருக்கும் உயிரணுக்களும் சேர்ந்து உடலுக்கு கேடு தரும் கட்டியாக (கழலை) உருவெடுக்கின்றன. இப்படி உருவாகும் கட்டி தீங்கு இல்லாத கட்டியாக இருக்கும் பட்சத்தில், அதை உடலில் இருந்து நீக்கிவிடலாம். அப்படி நீக்கிய பின்பு, பெரும்பாலும் அவை மீண்டும் உருவாவது இல்லை.
ஆனால் சில சமயங்களில் உயிரணுக்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து மீண்டும் கட்டி உருவாவதோடு, உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதைத்தான் புற்றுநோய் என்கிறோம். இதனால்தான் உடலில் ஏதாவது கட்டி இருந்து அதை ஆபரேஷன் செய்து அகற்றினால், அந்த கட்டி சாதாரண கட்டிதானா? அல்லது புற்றுநோய் கட்டியா? என்பதை தெரிந்து கொள்ள டாக்டர்கள் பரிசோதனைக்கு ('பயாப்சி') அனுப்பி வைக்கிறார்கள்.

உடலின் எந்த பகுதியிலும் புற்றுநோய் வரலாம். அது வரும் இடத்தை பொறுத்து நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய், ரத்த புற்றுநோய், தோல் புற்றுநோய் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு பொதுவாக மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகிய இடங்களில் புற்று நோய் உண்டாகிறது. இதில் ரத்த புற்றுநோய் தவிர மற்ற புற்றுநோய்களில் பொதுவாக கட்டிகள் தோன்றும்.
புற்றுநோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் தெரிவது இல்லை. உடலில் கட்டிகள் தோன்றும் ஆரம்ப நிலையில் வலி இருக்காது. ஆனால் நோய் தீவிரம் அடையும் நிலையில் தான், அந்த இடத்தில் வலி தெரியும். அந்த கட்டி புண்ணாகும் பட்சத்தில் அதில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படலாம். நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருந்தால் இருமும் போது ரத்தம் வரும்.
இதேபோல் பெருங்குடலில் புற்றுநோய் கட்டி இருந்தால் மலம் கழிக்கும் போதும், சிறுநீர்ப் பையில் புற்றுநோய் இருக்குமானால் சிறுநீர் கழிக்கும் போதும் ரத்தம் வரலாம். கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டி இருந்தால், ரத்தப்போக்கு ஏற்படும்.
உடலில் உண்டாகும் கட்டிகளில் அதிக அளவில் ஏற்படும் ரத்தப்போக்கு, நீண்ட நாட்களாக இருக்கும் இருமல், காரணம் தெரியாமல் திடீரென்று உடல் எடை குறைதல், மலம் கழிப்பதில் ஏற்படும் சிரமம் ஆகியவை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். ஆனால் எந்த வகையான புற்றுநோய் என்பதற்கு ஏற்ப இந்த அறிகுறிகளும் மாறக்கூடும்.
எந்த வயதிலும் புற்றுநோய் ஏற்படலாம் என்றபோதிலும், வயதான காலத்தில் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்து இருக்கிறது.
புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல், உடல் பருமன், தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, எச்.ஐ.வி., ஈரல் அழற்சி மற்றும் சில வகையான தொற்று நோய்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன. 22 சதவீத புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவது காரணமாக அமைந்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.
இதேபோல் 10 சதவீத புற்றுநோய்க்கு உடல் பருமன், திட்டமிடப்படாத உணவு முறை, அதிக மதுப்பழக்கம் ஆகியவை காரணமாக இருப்பதாகவும், 5 முதல் 10 சதவீத புற்று நோய் மரபு ரீதியாக வருவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

புகைப்பிடிப்பதையும், புகையிலைப் பொருட்களையும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதையும் தவிர்ப்பது, மது அருந்தாமல் இருப்பது, சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பது, உரிய தடுப்பூசிகளை போட்டு தொற்றுநோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது, உடல் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வருவதை தவிர்க்க முடியும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை உரிய பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் மீண்டுவிடலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக கர்ப்பப்பை புற்றுநோய் மாதவிடாய் நின்ற 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களையே அதிகம் தாக்குகிறது. குறைந்த வயதில் பருவமடைவது, தாமதமாக திருமணம் செய்து கொள்வது, குழந்தை பிறப்பை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடுவது, தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது ஆகியவை பெண்களிடையே புற்றுநோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
ஒருவருக்கு வந்துள்ள புற்றுநோய் எந்த வகையானது? அது எந்த இடத்தில் வந்துள்ளது? எந்த நிலையில் இருக்கிறது? அவருக்கு எந்த வகையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை பொறுத்துத்தான் அவரை குணப்படுத்த முடியுமா? இயலாதா? என்பதை சொல்ல முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
இருவருக்கு ஒரே மாதிரியான புற்றுநோய் வந்தாலும் அவர்களில் ஒருவரை குணப்படுத்தவும், மற்றொருவரை குணப்படுத்த முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது என்றும், எல்லா புற்றுநோய்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடியாது என்றும் ஒவ்வொரு வகைக்குமான சிகிச்சை முறை மாறுபடுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
நோயாளிக்கு சிறுநீரக விதைப்பை, தைராய்டு சுரப்பி, மார்பகம், தோல் ஆகிய இடங்களில் வரும் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருக்கும் பட்சத்தில் அதை குணப்படுத்த முடியும் என்றும், கணிசமான ஆண்டுகள் அந்த நபர் உயிர்வாழ முடியும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.
புற்றுநோயால் ஏற்படும் 50 சதவீத மரணங்களுக்கு நுரையீரல், மூச்சுக்குழாய், பெருங்குடல், கணையம், மார்பகம் ஆகிய இடங்களில் ஏற்படும் புற்றுநோயே காரணமாக உள்ளது.
கணையத்தில் வரும் புற்றுநோய்தான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் புற்றுநோய் வந்தால் விரைவில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், 4 பேரில் ஒருவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவதாகவும், 4 பேரில் 3 பேர் ஓர் ஆண்டுக்குள் இறந்துவிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- ரத்த தானம் செய்வது மிகவும் ஆரோக்கியமான செயல்.
- அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும்.
ரத்தம் என்பது திரவ இணைப்பு திசு ஆகும். இது `எரித்ரோசைட்டுகள்' (ஆர்.பி.சி.) 'லூகோசைட்டுகள்' (டபிள்யூ.பி.சி.), `துரோமோசைட்டுகள்' (பிளேட்லெட்டுகள்) மற்றும் புரதம், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை உள்ளடக்கிய 'பிளாஸ்மா' போன்ற பல்வேறு உயிரணுக்களால் ஆனது. இது ஊட்டச்சத்து, ஹார்மோன்கள், சுவாச வாயுக்கள் போன்றவற்றை எடுத்துச்செல்கிறது.
ரத்த புற்றுநோய் முக்கியமாக மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது குறைபாடுகளால் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், அதிகப்படியாக மது அருந்துதல் மற்றும் சில வகையான ரசாயனம், கதிர்வீச்சு பாதிப்பு இந்த நோய்க்கு காரணமாக அமைகிறது. பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவில் ரத்த புற்றுநோய் உண்டாகிறது. பொதுவாக வேறு ஏதேனும் ஒரு நோய்க்காக ரத்த பரிசோதனை செய்யும் போதுதான் தற்செயலாக இது கண்டறியப்படுகிறது.
ரத்த புற்றுநோய் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் `பிளாஸ்மா' செல்களை தாக்கி அழிக்கிறது. இது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி அவற்றின் செயல்பாடுகளை முடக்குகிறது.
ரத்த புற்றுநோயில் `லூகேமியா', 'லிம்போமா', `மைலோமா' என்று 3 வகைகள் உள்ளன. 'லூகேமியா'வில் எலும்பு மஜ்ஜையை அசாதாரண வெள்ளை அணுக்கள் தாக்கி அழிக்கின்றன. தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் நிணநீர் மண்டலங்களையும், மண்ணீரலையும் பாதிக்கும் ரத்த புற்றுநோய் `லிம்போமா' எனப்படுகிறது. 'மைலோமா' வகை புற்றுநோய் செல்கள் பிளாஸ்மா செல்களில் பாதிப்பை உண்டாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்கின்றன.
ரத்த புற்றுநோய் ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும். சிலருக்கு உடல் சோர்வு, மூட்டு வலி, காரணமின்றி உடல் எடை குறைதல், இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை, லேசாக காயம் ஏற்பட்டாலும் அதிக அளவில் ரத்தம் வெளியேறுதல், தோலில் தடிப்புகள் ஏற்படுவது, அடிக்கடி உண்டாகும் தொற்று நோய் போன்றவை ரத்த புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
ரத்த புற்றுநோய் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாவதால் அதை எளிதில் தடுக்க இயலாது. ரத்த தானம் செய்வதால் ரத்த புற்றுநோய் ஏற்படும் என்று சிலர் கருதுவது தவறானது என்றும், ரத்த தானம் செய்வது மிகவும் ஆரோக்கியமான செயல் என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
புற்றுநோயின் வகை, அதன் தீவிரத்தன்மை, நோயாளியின் வயது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை, கீமோதெரபி ஆகிய 3 வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
- புற்றுநோயை பற்றிய சில தவறான தகவல்கள் உள்ளன.
- புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல.
புற்றுநோயை பற்றிய சில தவறான தகவல்கள் உள்ளன என்றும், அவற்றை நம்பக்கூடாது என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள். `புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. எனவே குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவரை ஒதுக்கி வைக்காதீர்கள். அவர்களை பரிவுடன் கவனித்துக் கொள்ளுங்கள்' என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆரம்ப நிலையிலேயே இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால், இந்த நோயை குணப்படுத்திவிடலாம். எனவே சிகிச்சையும், மாத்திரைகளும் மட்டுமல்ல; பரிவான கவனிப்பும், நம்பிக்கையூட்டும் கனிவான வார்த்தைகளும் நோயாளிகளுக்கு மிகப்பெரிய மருந்து என்பதை மறந்து விடாதீர்கள்...
புற்றுநோயாளிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு, அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் வண்ண ரிப்பன்கள் (பட்டைகள்) அடையாளமாக பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் 1990-களில் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட சார்லோட் ஹேய்லி என்ற 68 வயது பெண் இந்த ரிப்பன் முறையை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் ஒவ்வொரு வண்ண ரிப்பன் பயன்படுத்தப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய்க்கு வெள்ளை நிறமும், மூளை புற்றுநோய்க்கு சாம்பல் நிறமும், மார்பக புற்றுநோய்க்கு இளஞ்சிவப்பு நிறமும், கணைய புற்றுநோய்க்கு ஊதா நிறமும், எலும்பு புற்றுநோய்க்கு மஞ்சள் நிறமும், சிறுநீரக புற்றுநோய்க்கு ஆரஞ்சு நிறமும், கல்லீரல் புற்றுநோய்க்கு பச்சை நிறமும், பெருங்குடல் புற்றுநோய்க்கு அடர் நீலமும், தோல் புற்றுநோய்க்கு கருப்பு நிறமும் என பல நிறங்களில் வண்ண ரிப்பன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- நவீன அறுவை சிகிக்சை மூலம் அகற்றும் வசதி உள்ளது.
- `டார்கெட்டட் தெரபி' என்ற அதிநவீன சிகிச்சை முறை உள்ளது.
புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சைகள் குறித்தும், நோய் வருவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் புற்றுநோய் மருந்தியல் சிகிக்சை நிபுணர் டாக்டர் அருண் ரமணன் கூறியதாவது:-
உலகில் புற்றுநோய் எந்த அளவுக்கு வேகமாக பெருகி வருகிறதோ, அந்த அளவுக்கு அதை கட்டுப்படுத்துவதற்கான புதிய மருந்துகளும், மருத்துவ சிகிச்சைகளும் வந்துள்ளன. அமெரிக்காவில் கிடைப்பது போன்ற உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சை நம் நாட்டிலும் கிடைக்கிறது. தமிழகத்தில் சென்னையில் கிடைக்கும் சிகிச்சை வசதி தென் மாவட்டங்களிலும் உள்ளது. பரிசோதனையின் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் வசதியும் வந்துவிட்டது.
டாக்டரிடம் வரும் புற்று நோயாளிகளில் பலர், ''நான் நன்றாகத்தானே இருந்தேன் சார்... எனக்கு எப்படி இந்த நோய் வந்தது?'' என்று கேட்பார்கள். பொதுவாக இந்த நோய் தாக்கினால் ஆரம்பநிலையில் எந்த அறிகுறியும் தெரியாது. புற்றுநோய் தாக்கி, அது முற்றிய நிலைக்கு வரும் போதுதான் உடல்நிலை பாதிக்கும். அப்போதுதான் தெரியவரும்.
நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பது மிகவும் நல்லது. எனவே ஆரோக்கியமாக இருந்தாலும் 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அப்படி செய்து கொள்ளும்பட்சத்தில், நோய் தாக்கி இருந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினம்.
இப்போதெல்லாம் புற்றுநோய் தாக்கிய முழு உறுப்பையும் அகற்றாமல், பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நவீன அறுவை சிகிக்சை மூலம் அகற்றும் வசதி உள்ளது. ஏதாவது ஒரு உறுப்பை புற்றுநோய் தாக்கி இருந்தால், அந்த உறுப்பு பாதிக்காத வகையில் தாக்குதலுக்கு உள்ளான குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் `டார்கெட்டட் தெரபி' என்ற அதிநவீன சிகிச்சை முறை உள்ளது. மேலும் புற்றுநோய் கிருமியை எதிர்த்து போராடும் `இம்மியூனோ தெரபி' சிகிச்சையும் வந்து இருக்கிறது.
புற்றுநோய் சிகிச்சைக்கு புதிதாக `டோஸ்டார்லிமாப்' என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மருந்தை, அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில் அவர்கள் குணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கும் இந்த மருந்து, பல கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டுக்கு வரும்.
10 சதவீத புற்றுநோய் மரபு ரீதியாக, அதாவது தாத்தா-பாட்டி, அப்பா-அம்மாவுக்கு இருந்து பிள்ளைகளுக்கு வந்தாலும், மீதி 90 சதவீதம் வாழ்க்கை முறை, காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவே வருகிறது.
நாம் உண்ணும் உணவு, காய்கறி, பழங்கள், அருந்தும் தண்ணீர், பால் என எல்லாவற்றிலுமே ஏதாவது ஒருவகையில் ரசாயனம் கலந்து இருக்கிறது. பயிர்கள், செடிகளுக்கு பூச்சிமருந்து தெளிக்கப்படுகிறது. இதுபோன்ற ரசாயனம் ஏற்படுத்தும் பாதிப்பால் நோய் உண்டாகும் ஆபத்து இருக்கிறது. எனவே காய்கறிகளை நன்றாக கழுவிய பிறகே சமைக்கவேண்டும். பழங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகே சாப்பிட வேண்டும்.
மேலும் எண்ணெயில் அதிகம் பொறித்த உணவு, செயற்கையாக அதிக நிறம் கலந்த உணவு ஆகியவையும் புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் `கார்ட்னோஜென்' என்ற ஒருவகை ரசாயனம் உருவாகும்.
இது நம் உடலுக்குள் புற்றுநோயை உண்டாக்குவதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்துவிடும். எனவே இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக பொறித்த உணவை தவிர்த்து ஆவியில் வேகவைத்த, புரதச்சத்து நிறைந்த உணவையே உண்ண வேண்டும், கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.
ரசாயன கலவை காரணமாக, அதிகம் மேக்கப் (ஒப்பனை) போட்டுக் கொள்வது, தலைக்கு சாயம் பூசுவது ('டை அடிப்பது'), அதிக சாயம் கொண்ட ஆடைகளை அணிவதுகூட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
இதேபோல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கி குடிப்பது, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உண்பது கூட தீங்கு விளைவிக்கக்கூடியதுதான்.
நல்ல தூக்கம், நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சுறுசுறுப்பாக இருப்பது, சத்தான உணவு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி மற்ற நோய்களையும் தவிர்க்கலாம்.
இவ்வாறு டாக்டர் அருண் ரமணன் கூறினார்.
- இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள்.
- ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது.
அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் தான். நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… அதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.
இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு. பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளைம் கூறுகிறது.
இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள். இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக்கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது. பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பக புற்று ஏற்பட வாயப்பு இருக்கிறது. ஆனால் முன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களை போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குதலினால் இறக்கின்றனர்.
ஏற்கனவே ஏ.எச்.ஏ எனபடும் அமெரிக்கன் இதய சங்கம் (அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்) இது குறித்து எச்சரித்துள்ளது. அத்துடன் இதற்காகவே மகளிர் இதயநோய் செயற்குழு ஒன்றினையும் அமைத்துள்ளது.
நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக் கோளாறுகளில் அக்கறை காட்டபடாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.
பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரபில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார். அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத் தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.
அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது. இப்போதில் இருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.
கொழுபையும், கொலஸ்ட்ராலைம் முடிந்த அளவுக்கு உணவில் இருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைம், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்ப்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடைபயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருபவர்கள் இளமைடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எவராலும் எபோதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக்கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.
பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் முன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது.
பாஸ்டனில் உள்ள பெண்கள் மருத்துவமனை, மெட்ரோபாலிடன் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், சராசரி எடையை விட அதிகமான எடை கூடியுள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்புகள் மற்றவர்களைவிட 80 சதவீதம் அதிகமாக இருந்தது அறியபட்டது.
சி.டி.சி. எனப்படும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாயப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும்.
- லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும். பொதுவாக இந்த பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், சில சூழ்நிலைகளில் ஆண்களும் இந்த பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். சிகிச்சையில் தாமதம் மற்றும் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாததால் மார்பக புற்றுநோய் தீவிரமடைகிறது.
மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதிக உயரம் உண்மையில் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறதா? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மார்பகப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை தவிர, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள், உடல் அமைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
NCBI -ல் வெளியிடப்பட்ட சில ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் உயரமான உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
மார்பக புற்றுநோயைத் தூண்டும் காரணிகளில் உயரமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், உயரம் மட்டுமே மார்பக புற்றுநோயை ஏற்படுத்தாது. மார்பகப் புற்றுநோய்க்கு உயரத்தைத் தவிர, வேறு பல காரணங்களும் காரணமாக இருக்கலாம்.
உடல் உயரம் அதிகரிக்கும் போது, ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படுகின்றன. இது மார்பக திசுக்களை பாதிக்கிறது. இது தவிர, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி (IGF-1) ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக, செல்கள் வளரும் அபாயமும் அதிகரிக்கிறது.
- குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம்.
- கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
மார்பகப் புற்றுநோய் குறித்த தகவல்கள் இல்லாததாலும், இணையத்தில் தவறான தகவல்கள் கிடைப்பதாலும், அது தாமதமாகக் கண்டறியப்படுகிறது. இந்த நோயை சரியாகக் கண்டறிவதன் மூலம், அதிலிருந்து விரைவாக மீட்க முடியும். ஹார்மோன் மாற்றங்கள், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மரபணு காரணங்கள் போன்ற பல காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
* குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம்.
* BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
* ஹார்மோன் மாற்று சிகிச்சையின் (HRT) பயன்பாடும் ஆபத்தை அதிகரிக்கலாம்.
* மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
உணவில் அதிகப்படியான கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
தடுப்பு நடவடிக்கைகள்
மார்பக புற்றுநோயை தடுக்க, உணவு, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள்
* பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் சாப்பிடுங்கள்.
* கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்கவும்.
* உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்
* தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான-தீவிர ஏரோபிக் செயல்பாட்டைப் பெறுங்கள்.
* எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
மது அருந்துதல் மற்றும் புகைத்தல்
மது அருந்துவதை கட்டுப்படுத்துங்கள். மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.
புகை பிடிக்காதீர்கள். புகைபிடித்தல் மார்பக புற்றுநோயை மட்டுமல்ல, பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும்.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்க, 40 வயதிற்குப் பிறகு வழக்கமான மேமோகிராபி செய்ய வேண்டும். மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய மேமோகிராபி உதவுகிறது.
இது தவிர, உங்கள் மார்பகத்தை நீங்களே சரிபார்த்து, மடிப்புகளில் ஏதேனும் மாற்றத்தைக் காணலாம். மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகி, பரிசோதனைக்குப் பிறகு, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
- இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான்,
- அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டார்.
இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான், அவர் `யே ரிஷ்டா கியா கேலடா ஹை' சீரியலில் அக்ஷரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வீட்டில் ஒரு பெண்ணாக மக்கள் மனதில் பதிந்தார். அதைத் தொடர்ந்து கசௌட்டி சிந்தகி கே 2 என்ற சீரியலில் கோமோலிகா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில மாதத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் இருந்து விலகினார்.
அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். சின்னத்திரை மட்டுமல்லாமல் ஹேக்கட், ஸ்மார்ட்ஃபோன், லைன்ஸ், விஷ்லிஸ்ட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹினா கான் அவருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 36 வயது ஆகும் ஹினா கானுக்கு மார்பக புற்று நோய் மூன்றாம் நிலையை எட்டியுள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர வெளியிட்ட அறிக்கையில் " எல்லாருக்கும் வணக்கம், நான் தற்பொழுது நலமாக இருக்கிறேன், நான் இந்த புற்று நோயை மீண்டு வருவதற்கான அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் இன்னும் அதிக வலிமையுடன் வருவேன். இந்த நிலைமையை புரிந்துக் கொண்டு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும். உங்கள் ஆசிர்வாதமும், வேண்டுதலும் நான் குணமடைய கண்டிப்பாக தேவை எனக்காக பிரார்தனை செய்யுங்கள் " என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பல திரைப்பட நடிகைகள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
- உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேலே உயர்த்தி, அதே மாற்றங்களைக் கவனிக்கவும்.
உலகளவில் அதிகளவு மக்களை பாதித்திருக்கும் நோய் என்றால் அது புற்றுநோய்தான். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகளவு பெண்களை பாதிக்கும் ஒரு பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் ஒரு பிரபலமான நபர் ஒரு நோயால் கண்டறியப்பட்டால், அதைச் சுற்றி நிறைய சலசலப்பு ஏற்படுகிறது. அந்த நோய் பற்றி தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல திரைப்பட நடிகைகள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

மார்பக புற்றுநோய் என்பது மார்பக செல்களின் அசாதாரண வளர்ச்சியாகும், இது கட்டிகளை உருவாக்குகிறது. சரியான நேரத்தில் பரிசோதிக்கப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவி உயிரிழக்க நேரிடும். "மார்பக புற்றுநோய் செல்கள் பால் குழாய்கள் அல்லது மார்பகத்தின் பால் உற்பத்தி செய்யும் மடல்களுக்குள் தொடங்குகின்றன. இதன் ஆரம்பநிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல மற்றும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். புற்றுநோய் செல்கள் அருகிலுள்ள மார்பக திசுக்களுக்கும் பரவலாம். இது கட்டிகள் அல்லது தடிப்பை ஏற்படுத்தும் கட்டிகளை உருவாக்குகிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியது. மார்பக புற்றுநோயின் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வும், சுய மார்பகப் பரிசோதனையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் காலத்தின் தேவையாகும். வீட்டிலேயே சுய மார்பக பரிசோதனை செய்வது எப்படி என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
• ஒவ்வொரு மாதமும் ஒரு சீரான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும், உங்கள் மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு சில நாட்களுக்குப் பிறகு செய்வது நல்லது.
• உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்து கண்ணாடி முன் நிற்கவும். அளவு, வடிவம் அல்லது தோல் அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என கவனமாக பார்க்கவும்.

• உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேலே உயர்த்தி, அதே மாற்றங்களைக் கவனிக்கவும்.
• உங்கள் முதுகை கீழ்வைத்துப் படுத்து, நீங்கள் பரிசோதிக்கும் பக்கத்தில் உங்கள் தோள்பட்டைக்குக் கீழே ஒரு சிறிய தலையணை அல்லது மடிந்த துண்டை வைக்கவும். மார்பகப் பகுதியை முழுவதுமாக மறைக்கும் வகையில், ஒரு வட்ட வடிவில், கடிகார திசையில் மார்பகத்தை உணர எதிர்பக்கம் உள்ள கையைப் பயன்படுத்தவும்.
• அக்குள் பகுதியையும் பரிசோதிக்க மறக்காதீர்கள். கட்டிகள், தடித்தல், வலி அல்லது அசாதாரண மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்.
அசாதாரண மாற்றங்கள் எதையும் நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகவும். வீட்டிலேயே சுய பரிசோதனை செய்வதற்கான சில எளிய வழிகள் இவை. இருப்பினும், இன்னும் சந்தேகங்கள் இருந்தால், ஒரு மருத்துவரிடம் உங்களைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஏனெனில் சரியான நோயறிதலை ஒரு மருத்துவ நிபுணரால் மட்டுமே செய்ய முடியும்.
- உடல்நல ஆரோக்கியத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.
- அதனை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் CSAIL மற்றும் ஜமீல் மருத்துவமனை சார்பில் கடந்த 2021 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆக துவங்கியுள்ளது. மார்பக புற்றுநோய் அபாயத்தை கணிக்கும் மமோகிராஃபி சார்ந்த மாடல்கள் குறித்த தகவல்களை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது தான் இதற்கு காரணம் ஆகும்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஒருவேளை இது கச்சிதமாக இருப்பின், ஏஐ நாம் கற்பனை செய்தது மற்றும் ஏற்கனவே கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக மாறிவிடும்," என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவாக மனித உடலில் உள்ள மரபணுக்களில் சுமார் 9 ஆயிரம் மரபணு மாற்றங்கள் நிகழும். இந்த பிறழ்வுகளில் பெரும்பாலானவை தீங்கற்றவைதான். இவை நம் உடல்நல ஆரோக்கியத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.
சில பிறழ்வுகள் புரத செயல்பாட்டை சீர்குலைத்து புற்றுநோய் ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், அதனை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். ஆனால், காலதாமதமாக கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது சிக்கலான காரியம் ஆகும்.
உலகளவில் தாமதமாக கண்டறியப்படுவதாலேயே புற்றுநோய் சார்ந்த உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மார்பக புற்றுநோய் பாதிப்பை அதிகபட்சம் சில ஆண்டுகள் முன்பே கண்டறிந்து தெரிவிக்கும் ஏஐ தொழில்நுட்பம் இருந்தால் எப்படி இருக்கும்?
இதைத் தான் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் (CSAIL - Computer Science and Artificial Intelligence Laboratory) மற்றும் ஜமீல் கிளினிக் ஃபார் மெஷின் லெர்னிங்-ஐ சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். இவர்கள் 2021 ஆம் ஆண்டு உருவாக்கி இருக்கும் டீப் லெர்னிங் சிஸ்டம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பாதிப்பை வெறும் எக்ஸ்-ரே அல்லது மாமோகிராம் பரிசோதனை மூலமாகவே கணித்து விடும்.
மிராய் (MIRAI) என அழைக்கப்படும் புது ஏஐ சிஸ்டம் நோயாளிகளின் உடல்நிலை விவரங்களை கொண்டு எதிர்கால மாற்றங்களை கணிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த சிஸ்டத்தை ஆய்வாளர்கள் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையின் சுமார் 2 லட்சம் நோயாளிகளிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
- கீமோதெரபியின் மற்றொரு பக்க விளைவு மியூகோசிடிஸ் ஆகும்.
- உங்களில் யாராவது அதை அனுபவித்திருந்தால் அல்லது ஏதேனும் பயனுள்ள வைத்தியம் தெரிந்திருந்தால் தயவுசெய்து பரிந்துரைக்கவும்.
நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன் ஹினா கான் மார்பக புற்றுநோயால் இறந்துவிட்டதாக பொய்யான வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில், நடிகை ஹினா கான் தனது மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு இடையே மியூகோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மேலும் அதற்கான தீர்வு அளிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "கீமோதெரபியின் மற்றொரு பக்க விளைவு மியூகோசிடிஸ் ஆகும். இருப்பினும் அதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களின் அறிவுரைகளை நான் பின்பற்றுகிறேன். உங்களில் யாராவது அதை அனுபவித்திருந்தால் அல்லது ஏதேனும் பயனுள்ள வைத்தியம் தெரிந்திருந்தால் தயவுசெய்து பரிந்துரைக்கவும். நீங்கள் சாப்பிட முடியாதபோது மிகவும் கடினமாக உள்ளது. இது எனக்கு பெரிதும் உதவும்" என கூறியுள்ளார்.
- YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
- டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் [என்ஜிஓ] சர்சசை ஒன்றில் சிக்கியுள்ளது. YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் மார்பக புற்றுநோய் குறித்த விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த விளம்பரத்தில் கையில் 2 ஆரஞ்சு பழங்களுடன் சேலை அணிந்த பெண் ஒருவர் பேருந்தில் நின்றுகொண்டிருக்கும் சித்திரம் உள்ளது. அவருக்கு அருகே கூடை நிறைய ஆரஞ்சு பழங்களுடன் முதிய பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். 'மாதத்துக்கு ஒரு முறை உங்களின் ஆரஞ்சுகளை பரிசோதனை செய்யுங்கள்' என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் மார்பங்கள் ஆரஞ்சுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் 25 வயதை எட்டியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம் ஆகும். ஆனால் அதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறை தவறாக முடிந்துள்ளது.
இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் டெல்லி மெட்ரோ சேவை நிர்வாகம் இந்த போஸ்டர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.