search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brij Bhushan Sharan Singh"

    • பிரிஜ் பூஷன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
    • வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    பா.ஜ.க. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. எனினும், பிரிஜ் பூஷன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

    இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டத்திற்கு பலத்தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விசாரணையில் ஆஜர் ஆவதற்காக பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் இன்று டெல்லி நீதிமன்றத்திற்கு வந்தார். இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. 


    • புதிய மல்யுத்த தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் விருதுகளை திருப்பி அளிக்க போவதாக கூறியுள்ளார்.
    • மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சாக்‌ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த 21-ந் தேதி நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றனர். அவரது நெருங்கிய கூட்டாளியும், உத்தரபிரதேச மல்யுத்த சங்க துணைத்தலைவருமான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் தங்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் கிடைக்கப்போவதில்லை, பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்று மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர்.

    மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தார். மற்றொரு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் இல்லத்திற்கு கடிதத்துடன் அனுப்பினார். வீரேந்திர சிங் யாதவும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கப்போவதாக அறிவித்தார்.

    புதிய தலைவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் புதிய நிர்வாகிகளை கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. இதன் நிர்வாக பணியை கவனிக்க இடைக்கால கமிட்டி அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்ைத அறிவுறுத்தியது.

    இந்த நிலையில் பஜ்ரங் பூனியா, வீரேந்திர சிங் யாதவ் வரிசையில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மல்யுத்த வீராங்கனை 29 வயதான வினேஷ் போகத்தும் இணைந்துள்ளார். அவர், விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை அரசாங்கத்திடம் திருப்பி அளிக்க இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தை தனது 'எக்ஸ்' தளத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், 'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு இப்போது மங்கி விட்டது. இந்த கனவு அடுத்து வரும் வீராங்கனைகளுக்கு நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புவார். கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருது சுமையாகி விடக்கூடாது என்பதால் அதை திருப்பி அளிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லி ஜந்தர் மந்தரில் ஜன 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்தனர்.

    2023 ஜனவரியில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI)தலைவராக இருந்த போது, பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டி இது தொடர்பாக விசாரினை நடத்த வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர்.

    மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜன 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், அன்ஷு மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும்,பெண் மல்யுத்த வீரர்களிடையே ஒரு பயம் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல ஆண்டுகளாக வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேற்பார்வைக் குழுவை ஒன்றை அமைப்பதாக அரசு உறுதியளித்தது. அரசு நியமித்த குழுவில் விசாரணைக்கு ஆஜரான பூஷன் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

     


    ஜன 21, 2023 அன்று மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்ததுடன் சட்டப்பூர்வ வழிகளில் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்கள். பூஷன் பா.ஜ.க.-வைச் சேர்ந்தவர், ஆளும் கட்சியைச் சேர்ந்த பூஷனை பாதுகாக்க அரசு முயற்சிப்பதாக பல அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. பூஷனுக்கு எதிரான குற்ற சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு அரசு அழுத்தம் கொடுப்பதாக எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்ததாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டனர்.

    அதன்பின், மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்த பிறகு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அதன் தேர்தல் தேதியை மே 7 என்று அறிவித்தது. எனினும் அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. மல்யுத்த வீரர்கள், அதிகாரிகளின் செயலற்ற தன்மையைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2023 இல் தங்கள் எதிர்ப்பைத் மீண்டும் தொடர்ந்தனர்.

     


    டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பூஷண் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய இந்திய சட்டம் கட்டாயப்படுத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பூஷண் மீது POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பூஷன் நார்கோ தேர்வை மேற்கொள்ள வேண்டும் என்று வீரர்கள் விலியுறுத்தினர்.

    பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களும் மற்ற போராட்டக்காரர்களும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அனைத்து மல்யுத்த வீரர்களும் அந்நாளின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மற்றும் யுனைடெட் வேர்ல்டு மல்யுத்தம் (UWW) மல்யுத்த வீரர்களை காவல்துறை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தன. அதன்பின் பூஷனுக்கு எதிராக போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாததால் யுனைடெட் வேர்ல்டு மல்யுத்தம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது. அதனால் தேர்தலை டிசம்பர் 21 அன்று நடத்த திட்டமிடப்படது.

    இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பூஷனின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் போட்டியிடக் கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருக்கமான நண்பரான சஞ்சய் சிங் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்தார்.

     


    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரனுடன் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரரான சாக்ஷி மாலிக் மல்யுத்ததை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். நாட்டுக்காக பதக்கத்தை வென்று கொடுத்து பெருமைப்படுத்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், சாதாரணப் பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்"என்று வருத்ததுடன் கூறினார்.

    புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்தெடுக்கப்பட்டதால் பெண் வீராங்கனைக்கு தொடர்ந்து இந்த மாதிரியான அநியாயங்கள் நடக்கும், மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளில் இருக்கிறது. நாங்கள் இன்னும் போராடுவோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார் மற்றொரு வீராங்கனையான வினேஷ் போகத்.

    • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வுக்கான போட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி நடத்துகிறது. ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணி வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பி வைக்க ஜூலை 15-ந் தேதி கடைசி நாளாகும்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து இருப்பதுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியை தங்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சத்யவார்த் காடியன், ஜிதேந்தர் கின்ஹா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளது. அவர்கள் தங்கள் எடைப்பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுடன் ஆகஸ்டு 5 முதல் 15-ந் தேதிக்குள் நடைபெறும் தகுதி போட்டியில் ஒரு முறை மோதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரிஜ் பூஷன் சிங் மீது சிறுமி அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
    • முழு அரசு எந்திரமும் பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முடுக்கி விடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

    டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராடி வந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், 18 வயதுக்குட்பட்ட சிறுமி, பிரிஜ் பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

    இன்று இந்திய விளையாட்டுத்துறைக்கு ஒரு, "கருப்பு தினம்". இந்த நாட்டின் சட்ட அமைப்பு பா.ஜ.க.வின் அரசியல் புல்டோசரின் கீழ் நசுக்கப்பட்டு, இந்திய மகள்களின் நீதிக்கான கூக்குரல் குப்பைதொட்டியில் போடப்பட்டு புதைக்கப்பட்டு விட்டது. முழு அரசு எந்திரமும் ஒரு சர்வாதிகாரிக்கு வேண்டிய பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சட்டத்தால் தொட முடியாதவர்கள் என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதிமன்றம் அந்த மகள்களுக்கு தகுந்த நீதியை வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா சிரினாடே கூறியிருப்பதாவது:

    ஒரு சிறுமி, மிகப் பெரிய பதவியில் உள்ள இந்திய மல்யுத்த பயிற்சியாளரான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் புகார் அளித்திருக்கிறார். இதற்காக டெல்லியில் ஒரு நீண்ட போராட்டம் நடைபெற்று, மோடி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருந்ததால் போராட்டத்தையும் கைவிட்டனர்.

    இந்நிலையில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் சிறுமி அளித்த புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்து அவர் மீது போக்சோ சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.

    புகார் அளித்த உடனேயே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதற்கு மாறாக அவர் 45 நாட்கள் சுதந்திரமாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். காவல்துறை, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள என அனைவரும் அந்த சிறுமிக்கு எதிராகவும், பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு அவரை பாதுகாத்திருக்கின்றனர். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இது குறித்து வாயே திறக்கவில்லை. பா.ஜ.க. வின் தற்போதைய முழக்கம், "பெண் குழந்தையை தொந்தரவு செய்வோம், பூஷனை காப்பாற்றுவோம்" என்பதாக மாறியிருக்கிறது.

    45 நாட்களாக ஏன் பூஷன் விசாரிக்கப்படவில்லை என்றும், குற்றவியல் நடுவர் முன்பு வாக்குமூலம் எந்த சூழ்நிலையில் மாறியது என்றும் நீதிமன்றங்கள் விசாரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போதெல்லாம் குற்றவாளிக்கு ஆதரவாகத்தான் பா.ஜ.க. செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தினர்.
    • சாக்சி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

    புதுடெல்லி:

    மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள 7 மல்யுத்த வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னணி மல்யுத்த வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் சாக்சி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது பிரிஜ் பூஷன் சிங் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மல்யுத்த வீரர்களுக்கு அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும், சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில் சாக்சி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்த செய்தியுடன், போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்சி மாலிக், போராட்டத்தில் இருந்து விலகியதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவலை சாக்சி மாலிக் மறுத்துள்ளார்.

    "நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை. போராட்டத்துடன், ரெயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன், நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்பவேண்டாம்" என சாக்சி கூறியிருக்கிறார்.

    • பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு
    • வீரர்- வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் இருக்கிறார். பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படாததால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கொதித்தனர்.

    கடந்த 28-ந் தேதி புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அத்து மீறியதாக கூறி போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.

    இதனால் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். விவசாயிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். பல்வேறு தரப்பில் இருந்து மல்யுத்த நட்சத்திரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் ஷாக்ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு 11 மணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.

    பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

    இந்த சந்திப்புக்கு பிறகு பஜ்ரங் புனியா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    "பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரினோம். அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அமித்ஷா எங்களிடம் உறுதியளித்தார். சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் எங்களிடம் தெரிவித்தார்" என்றார்.

    • அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக போராடுவது என்பது கடினமான விஷயம்.
    • ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்

    மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி உள்ள மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என கூறி உள்ளனர்.

    மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீண்ட காலமாக அதிகாரத்தையும் பதவியையும் தவறாக பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நபருக்கு எதிராக போராடுவது என்பது கடினமான விஷயம் என்றார்.

    வினேஷ் போகத் மேலும் கூறியதாவது:-

    நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு, ஒரு அதிகாரியை சந்தித்தோம். அப்போது, விளையாட்டு வீராங்கனைகள் எப்படி பாலியல் ரீதியாகயும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை எல்லாம் அவரிடம் கூறினோம். நடவடிக்கை எடுக்காத நிலையில், தர்ணாவில் அமர்ந்தோம்.

    மத்திய விளையாட்டுத் துறை மந்திரியுடன் (அனுராக் தாக்கூர்) பேசியபிறகு போராட்டத்தை முடித்துக் கொண்டோம். அப்போது பாலியல் துன்புறுத்தல் பற்றி அவரிடம் அனைத்து விளையாட்டு வீரர்களும் கூறியிருந்தனர். ஆனால் அவரோ ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றார். அந்த சமயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர்.
    • கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் 3 மாதங்களுக்கு பின் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    டெல்லியில் கடந்த ஜனவரி 18-ந்தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட, ஒலிம்பிக் உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனைகளை படைத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பினர்.

    இந்த சூழலில், டெல்லி போலீசார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கிறார்கள். போராட்டக்காரர்கள் சாலையில் படுத்து உறங்குங்கள் என அவர்கள் கூறினர் என மல்யுத்த வீரர் பூனியா குற்றச்சாட்டு தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

    இந்நிலையில், டெல்லி போலீசார் கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீரர்கள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள்.

    பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் வழக்கறிஞர் நரேந்திர ஹூடா கூறும்போது:-

    ஐ.பி.சி.யின் பிரிவு 354, 354 (ஏ), 354 (டி) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். மற்றொரு எப்.ஐ.ஆர்.ரின் நகல் எங்களுக்கு வழங்கப்படவில்லை (அது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மட்டுமே வழங்கப்படும்) என்று கூறியுள்ளார்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். இதன்படி, கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். இதேபோன்று, டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் அதில் பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வரும் சூழலில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், நீண்ட காலம் அதிகாரம் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தி வரும் நபரை எதிர்த்து நிற்பது என்பது மிக கடினம் என கூறியுள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிகாரி ஒருவரை முதன்முறையாக சந்தித்து பேசினோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    3 முதல் 4 மாதங்களுக்கு முன், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடும் முன்பு, அதிகாரி ஒருவரை சந்தித்து அவரிடம், வீராங்கனைகள் எப்படி பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர் மற்றும் மனதளவில் சித்ரவதை செய்யப்படுகின்றனர் என்று ஒவ்வொரு விசயம் பற்றியும் கூறினோம். எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம் என அவர் கூறியுள்ளார்.

    • பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று முன்தினம் டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டகளத்துக்கு முன்னாள் வீரர்-வீராங்கனைகள் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அங்கு பல வீரர்-வீராங்கனைகள் குவிந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடுவிதித்துள்ளது.

    இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் நேற்று இரவு மத்திய மந்திரி அனுராக்தாகூர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தை அனுராக்தாகூரின் இல்லத்தில் நடந்தது. இதில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், ரவி தகியா உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது.

    பேச்சுவார்த்தையின் போது இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ்பூஷன் ஷரன்சிங்கை நீக்க வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மல்யுத்த சம்மேளனத்தை கூண்டோடு கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வீரர்-வீராங்கனைகள் முன் வைத்தனர்.

    மல்யுத்த சம்மேளனத்திடம் விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டு இருப்பதால் காத்திருக்குமாறு மத்திய மந்திரி அனுராக்தாகூர் தெரிவித்தார்.

    மேலும் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படும் என்றும் விசாரணை குழுவை அமைக்க அரசு தயாராக இருப்பதாகவும் மந்திரி தெரிவித்தார்.

    ஆனால் பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர். இதனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது. இன்று மதியம் மீண்டும் வீரர்-வீராங்கனைகளுடன் மந்திரி அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று 3-வது நாளாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் தொடர்ந்தது. அங்கு 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டக்காரர்கள் கூறும்போது, 5 முதல் 6 வீராங்கனைகள், சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது போலீசில் புகார் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். வீராங்கனை வினேத்போகத் கூறும்போது, எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். பிரிஜ்பூஷனை சிறைக்கு அனுப்பும் வரை போராட்டம் நீடிக்கும் என்றார்.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரிஜ்பூஷன், தனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது என்றும் இது மல்யுத்த வீராங்கனைகளையும், விளையாட்டையும் கேவலப்படுத்த நடக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இன்று பேட்டி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே பிரிஜ்பூஷனிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×