search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்யுத்தத்தின் எதிர்காலமே இருளில்.. கொந்தளிக்கும் வீராங்கனைகள்
    X

    மல்யுத்தத்தின் எதிர்காலமே இருளில்.. கொந்தளிக்கும் வீராங்கனைகள்

    • டெல்லி ஜந்தர் மந்தரில் ஜன 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்தனர்.

    2023 ஜனவரியில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI)தலைவராக இருந்த போது, பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டி இது தொடர்பாக விசாரினை நடத்த வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர்.

    மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜன 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், அன்ஷு மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும்,பெண் மல்யுத்த வீரர்களிடையே ஒரு பயம் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல ஆண்டுகளாக வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேற்பார்வைக் குழுவை ஒன்றை அமைப்பதாக அரசு உறுதியளித்தது. அரசு நியமித்த குழுவில் விசாரணைக்கு ஆஜரான பூஷன் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.


    ஜன 21, 2023 அன்று மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்ததுடன் சட்டப்பூர்வ வழிகளில் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்கள். பூஷன் பா.ஜ.க.-வைச் சேர்ந்தவர், ஆளும் கட்சியைச் சேர்ந்த பூஷனை பாதுகாக்க அரசு முயற்சிப்பதாக பல அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. பூஷனுக்கு எதிரான குற்ற சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு அரசு அழுத்தம் கொடுப்பதாக எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்ததாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டனர்.

    அதன்பின், மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்த பிறகு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அதன் தேர்தல் தேதியை மே 7 என்று அறிவித்தது. எனினும் அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. மல்யுத்த வீரர்கள், அதிகாரிகளின் செயலற்ற தன்மையைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2023 இல் தங்கள் எதிர்ப்பைத் மீண்டும் தொடர்ந்தனர்.


    டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பூஷண் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய இந்திய சட்டம் கட்டாயப்படுத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பூஷண் மீது POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பூஷன் நார்கோ தேர்வை மேற்கொள்ள வேண்டும் என்று வீரர்கள் விலியுறுத்தினர்.

    பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களும் மற்ற போராட்டக்காரர்களும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அனைத்து மல்யுத்த வீரர்களும் அந்நாளின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மற்றும் யுனைடெட் வேர்ல்டு மல்யுத்தம் (UWW) மல்யுத்த வீரர்களை காவல்துறை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தன. அதன்பின் பூஷனுக்கு எதிராக போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாததால் யுனைடெட் வேர்ல்டு மல்யுத்தம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது. அதனால் தேர்தலை டிசம்பர் 21 அன்று நடத்த திட்டமிடப்படது.

    இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பூஷனின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் போட்டியிடக் கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருக்கமான நண்பரான சஞ்சய் சிங் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்தார்.


    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரனுடன் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரரான சாக்ஷி மாலிக் மல்யுத்ததை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். நாட்டுக்காக பதக்கத்தை வென்று கொடுத்து பெருமைப்படுத்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், சாதாரணப் பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்"என்று வருத்ததுடன் கூறினார்.

    புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்தெடுக்கப்பட்டதால் பெண் வீராங்கனைக்கு தொடர்ந்து இந்த மாதிரியான அநியாயங்கள் நடக்கும், மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளில் இருக்கிறது. நாங்கள் இன்னும் போராடுவோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார் மற்றொரு வீராங்கனையான வினேஷ் போகத்.

    Next Story
    ×