search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buliding"

    • ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது.

     ஊட்டி

    ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரசபை தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் காந்திராஜன், துணைத் தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    ஜாா்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில், இருந்த கால்வாயை மறைத்து ஏற்கனவே ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இரு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தில் கால்வாயை மறைத்து கட்டிடங்கள் கட்டுவதற்கு எவ்வாறு நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது?

    மேலும், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள உத்தரவு வழங்கிய போதிலும், பணி செய்வதற்கான ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளதால், நகரில் எந்த ஒரு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். நகராட்சியே அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    துணைத் தலைவா் ரவிக்குமாா்:

    ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் 1,500 சதுர அடிக்குள் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஊட்டி நகராட்சியிலேயே அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேல் கட்டிடங்கள் கட்ட மற்ற துறைகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. ஆனால், ஊட்டி நகரில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    அதன்பின் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி முறையாக கிடைப்பதில்லை. எனவே 1,500 சதுரடிக்குள் கட்டிடங்கள் கட்ட நகராட்சியே அனுமதி அளிக்கும் முறையை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து கவுன்சிலா்களும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும், மாஸ்டா் பிளான் சட்டத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

    முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட பட்பயா் நிலத்தை டைடல் பாா்க் அமைக்க மாவட்ட நிா்வாகத்துக்கு ஒப்படைக்க கூடாது. இந்த தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி நகராட்சி மாா்க்கெட் கட்டிடங்களை இடித்து கட்டும்போது, தற்போது அங்கு கடை வைத்துள்ளவா்களுக்கே மீண்டும் கடைகள் வழங்க வேண்டும்.

    ஆணையா் காந்திராஜன்: ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டின் ஒரு பகுதி ரூ.29 கோடியில் இடித்து கட்டப்படுகிறது. கீழ் தளத்தில் கடைகளும், மேல் தளத்தில் பாா்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

    தம்பி இஸ்மாயில் (திமுக): எனது வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய்களை தூா்வார வேண்டும். மழைக் காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும், எனது வாா்டில் நாய்கள் மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    அபுதாகீா் (மநேம): ஊட்டி நகராட்சிப் பணியாளா்களுக்கு காந்தல் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இவை மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் பணியாளா்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் அந்த குடியிருப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

    ரஜினி (காங்கிரஸ்): எனது வாா்டுக்கு உள்பட்ட அலங்காா் பகுதியில் மழை நீா் செல்லும் கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு விவாதங்கள் நடந்தது. தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    ×