என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Business tax"

    • வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
    • லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் பிலோமினா நகரில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்தவர் குணசேகர். இவரிடம் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி தஞ்சை வணிக வரி அலுவலர்கள் 6 பேர் விசாரணை நடத்தினர்.

    அப்போது உங்கள் மீது புகார் வந்துள்ளது. வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் குணசேகரிடம் அலுவலர்கள் கூறினர்.

    லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நாளை திரும்பவும் வந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரி போடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகர் இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரித்து கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவர்களில் சிங்காரவேலு ஏற்கனவே இறந்துவிட்டார்.

    • மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் நடவடிக்கை.
    • திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் தொழில் வரி செலுத்தாமல் இருந்த 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி அந்த வருமானத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.

    நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க திமுக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. கைத்தறி மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்த ஸ்டாலினின் திமுக ஆட்சியில் தாறுமாறாக நூல் விலை உயர்ந்ததுடன், விலையில்லா சீருடை, விலையில்லா வேட்டி, சேலை போன்ற திட்டங்களுக்கான பணிகளை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்காதது போன்ற நிகழ்வுகளால், முதலாளிகளாக சொந்தத் தொழில் செய்து வந்த நெசவாளர்கள், தங்களது தறிகளை பழைய இரும்புக் கடைகளுக்கு விற்றுவிட்டு வேறு தொழில்களுக்கு பணியாட்களாக இடம் மாறி தங்களது வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் சேலை ரகங்களைப் போன்றே, வெளி மாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் நெசவாளர்கள் தயாரிக்கும் சேலைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல், ஜவுளி தேக்கமடைந்துள்ளன.

    பல்லாயிரக்கணக்கான தறிகள் இரவு பகலாக இயங்கி வந்த நிலையில், இன்று மூன்றில் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் வாரம் முழுவதும் வேலை செய்து வாரக் கூலி பெற்று தினசரி வாழ்க்கையை நடத்தி வந்த நெசவுத் தொழிலாளர்கள், இன்று குறைந்த நாட்களே பணிபுரிந்து மாதக் கூலி பெறுகின்றனர்.

    இதனால், தினசரி செலவுக்கு நெசவுக் கூலியை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சரியான சம்பளம் இன்றி, தங்களுக்குத் தெரிந்த நெசவுத் தொழிலை விட்டு, வேறு வேலைகளைத் தேடி அலையும் அவல நிலை அதிகரித்துள்ளது.

    நெசவாளர்களில் பலர், தாங்கள் வாழும் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி அந்த வருமானத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.

    இந்நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீட்டில், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், தறிகள் உள்ள இடங்களைக் கணக்கீடு செய்து அப்பகுதிகளுக்கு வணிக ரீதியில் தொழில் வரி விதிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

    குறிப்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இது போன்ற குடிசைத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின் வீடுகளில் உள்ள தறிக் கூடங்களின் அளவை மாநகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்து வருவதாகவும்; சதுர அடிக்கு 27 ரூபாய் தொழில் வரி விதிக்க உத்தேசித்துள்ளதாகவும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தெரிவித்த செய்தி, நெசவாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் வருகின்றன.

    அம்மா ஆட்சியில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களி வாழ்வாதாரம் பாதிப்படையக்கூடாது என்று, 200 யூனிட் மற்றும் 750 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கியது அம்மாவின் அரசு. நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன.

    மேலும், பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளில், 10 சதவிகிதம் வீடுகள் நெசவாளர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்து, பிப்ரவரி 2018 முதல் கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மானியத்துடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

    ஆனால், கடந்த 42 மாதகால விடியா திமுக ஆட்சியில் இதுவரை நெசவாளர்களுக்கு எந்தத் திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டித் தரப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத்தை உடனடியாக வழங்குமாறு ஏற்கெனவே நான் வலியுறுத்தி இருந்தேன்.

    ஆனால், இந்த அரசு இதுவரை மொத்த மானியத் தொகையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே நெசவாளர்களுக்கு வழங்கி உள்ளதாகவும், மீதமுள்ள 90 சதவீதத்தை இதுவரை விடுவிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அம்மாவின் அரசில் விலையில்லா வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கான சீருடை போன்றவை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த விடியா திமுக ஆட்சியில் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழக நெசவாளர்களுக்கு குறித்த நேரத்தில் தரமான நூல்கள் வழங்கப்படுவதுமில்லை.

    பட்டுத் தறி நெசவு செய்பவர்களுக்கு, அம்மா ஆட்சிக் காலத்தில் எத்தனை தறி வைத்துள்ளனரோ, அத்தனை தறிகள் மூலம் நெய்யும் பட்டுப் புடவைகளுக்கும் முழுமையாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தறிக்கேற்றவாறு முழுமையாக ஆர்டர்கள் வழங்கப்பட்டது. ஆனால், விடியா திமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் ஆர்டரே தருவதில்லை.

    நெசவாளர்கள் வைத்திருக்கும் அனைத்து ததிகளிலும் நெய்த பட்டுப் புடவைகளுக்கான ஊக்கத் தொகையும் வழங்குவதில்லை என்று பட்டு நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, தொடர்ந்து பட்டு நெசவாளர்கள் நெய்த பட்டுப் புடவைகள் அனைத்திற்கும் ஊக்கத் தொகை வழங்குமாறு வலியுறுத்துகிறேன்.

    அம்மாவின் அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களினால், தமிழகத்தில் நெசவுத் தொழில் காக்கப்பட்டது. ஆனால் இன்று. குடிசைத் தொழில்போல் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து நெசவுத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின் தலையில் இடி விழுந்தது போல், தறிக் கூடங்களை அளவெடுத்து தொழில் வரி விதிக்க முனைந்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த அரசு, நெசவாளர்களாகிய தங்களுக்கு உதவி செய்யாவிடினும், உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் என்று மிகுந்த மன வேதனையுடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே, உடனடியாக தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும்; நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும்; கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு வரி விதிப்பில் விலக்கு பெற்று, மீண்டும் தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும்
    • நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

    "சென்னை பெருநகர மாநகராட்சி சென்னைவாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    44 மாத கால விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, வடபழனி-போரூர் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, என்று அனைத்து முக்கிய சாலைகளுமே குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

    அனைத்து முக்கியச் சாலைகளின் நிலையே இப்படியெனில், மாநகரில் உள்ள மற்ற சாலைகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.

    ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும், இவற்றோடு குப்பை வரி, கட்டிட வரைபட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று சுமார் 75 சதவீத மக்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

    மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் தொழில்வரி செலுத்தாத 25 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சிக்கு முறைப்படி வரி செலுத்தாத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

    வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், கண்ணதாசன்நகர் பகுதியில் உள்ள சில கடைகள், நிறுவனங்கள் முறைப்படி லைசென்சு எடுக்காமலும், தொழில் வரி, சொத்து வரி செலுத்தாமலும் நடத்தப்படுவது தெரிய வந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ஏற்கனவே நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி 4-வது மண்டலத்தை சேர்ந்த அதிகாரிகள் அனிதா, சுரேஷ், பாஸ்கர், திருநாவுக்கரசு உள்பட 10 பேர் முறைப்படி வரி செலுத்தாத கடைகளில் இன்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் அந்த கடைகளை மூடி சீல் வைப்பதற்கான நோட்டீசையும் வழங்கினார்கள். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகள், “மாநகராட்சிக்கு வந்து முறைப்படி வரி செலுத்தினால் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும்” என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

    இதையடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த பகுதியில் மொத்தம் 25 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கொடுங்கையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×