என் மலர்
முகப்பு » camp in courtallam
நீங்கள் தேடியது "camp in courtallam"
தகுதிநீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #TTVDhinakaran
குற்றாலம்:
ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு சிக்கல்களை அ.தி.மு.க. சந்தித்து வருகிறது. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
அன்றைய தினமே சபாநாயகர் ப.தனபாலை சந்தித்த அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், “அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக 19 பேரின் செயல்பாடு உள்ளது” என்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
19 பேரில் ஜக்கையன் (கம்பம் தொகுதி) மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஏனைய 18 பேரும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி), பி.வெற்றிவேல் (பெரம்பூர்), வி.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), கே.கதிர்காமு (பெரியகுளம்), டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி), ஆர்.ஆர்.முருகன் (அரூர்), எஸ்.முத்தையா (பரமக்குடி), சோ.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), மு.கோதண்டபாணி (திருப்போரூர்), ஆர்.சுந்தரராஜ் (ஒட்டப்பிடாரம்), எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), சி.ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), கே.உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகிய 18 பேர் உள்ளானார்கள்.
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதனால், இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்திய நாராயணன் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி முதல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சென்னை அசோக்நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், அரூர் ஆர்.ஆர்.முருகனை தவிர ஏனைய 17 பேரும் கலந்து கொண்டனர். அவர்களுடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று சொன்னாலும், முக்கியமாக 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, தீர்ப்பு எப்போதும் வெளியாகலாம் என்ற நிலை இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெற்றிவேலை தவிர மீதமுள்ள 17 பேரையும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றாலத்தில் சென்று தங்கியிருக்குமாறு டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக நேற்று மாலை தங்க தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி, கதிர்காமு ஆகிய 3 பேரும் விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து காரில் குற்றாலம் சென்றுள்ளனர். அங்குள்ள ‘இசக்கி ரிசார்ட்’ சொகுசு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘இசக்கி ரிசார்ட்’ சொகுசு விடுதி, முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இவர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பி.வெற்றிவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வராத சூழ்நிலையில் தங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கி இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம்?.
பதில்:- கட்சியின் சார்பில் எந்த உத்தரவும் போடவில்லை. நேற்று துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வந்தபோது 2, 3 பேர் வெளிநாடு செல்வதற்கு திட்டம் போட்டனர். அது அவர் காதுக்கு சென்றது. அதற்கு அவர் தீர்ப்பு வர உள்ளது. அதனால் தமிழ்நாட்டிலேயே இருங்கள் என்றார். இதில் விருப்பப்பட்டவர்கள் அங்கே செல்கின்றனர்.
கேள்வி:- வழக்கில் எந்தமாதிரி தீர்ப்பு வரும்?. வெளிநாடு செல்ல வேண்டும் என்று கூறிய காரணம் என்ன?.
பதில்:- வெளிநாடு சென்றால் திருப்பி வர வேண்டிய சூழல் இருக்கும். வெளிநாட்டில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வரமுடியாது என்பதால் அவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கேள்வி:- எத்தனை பேர் குற்றாலம் செல்ல திட்டமிட்டுள்ளனர்?. எத்தனை நாள் குற்றாலத்தில் தங்க வாய்ப்பு உள்ளது?.
பதில்:- எல்லோரும் செல்ல வாய்ப்பு உள்ளது. 2, 3 நாட்கள் தங்கலாம். அது அவர்கள் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. அதை கழித்து பார்க்கும்போது தற்போதைய எண்ணிக்கை 232 ஆகும். இதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கழித்தால் 214 வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது அ.தி.மு.க. அரசுக்கு 108 மெஜாரிட்டி தேவையாக உள்ளது. ஆனால், மேலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் இல்லை. இதை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 111 என்ற நிலைக்கு குறைகிறது.
தற்போதைய நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 111 ஆக இருந்தாலும், மெஜாரிட்டியை கணக்கிடும்போது 4 எண்ணிக்கையில் தான் அதிகமாக உள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால், அ.தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி தேவை 116 ஆக உயர்ந்துவிடும். அந்த நிலை வந்தால், அ.தி.மு.க. ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகும்.
இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் தான் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்துவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டு வருகின்றனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TTVDhinakaran
×
X