search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery verdict"

    அ.தி.மு.க. அரசின் சட்ட போராட்டத்தால் காவிரி வழக்கில் சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பபாடி பழனிசாமி கூறினார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    கிட்டத்தட்ட 38 ஆண்டு காலம் நடைபெற்ற காவிரி பிரச்சினைக்கு இன்றைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அம்மாவின் அரசினால் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளது.

    ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல, 38 ஆண்டுகள் காவிரி நீரை பெற தமிழக விவசாயிகள், பல்வேறு கட்சி தலைவர்கள் போராடினர். அதில் முக்கியமாக போராடியது அ.தி.மு.க. என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். யார் வேண்டுமானாலும் போராடலாம். ஆனால் யார் போராடினால் தீர்வு கிடைக்கும் என்பது மக்களுக்கு தெரியும். அந்த தீர்வை பெற்றுத்தந்தது அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும் தான்.

    சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்ற தலைவி ஜெயலலிதா. இதற்காகத்தான் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ‘பொன்னியின் செல்வி’ என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு கொடுத்தார்கள். அப்போது நானும் ஒரு விவசாயி என்று மகிழ்ச்சியுடன் ஜெயலலிதா கூறினார். இது வரலாற்று சாதனை.

    ஒரு முதல்-அமைச்சர் எப்படி இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று வரலாற்று சாதனையை பெற்றார். ஆனால் அதன் பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதனை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதினார். எந்த தீர்வும் கிடைக்காததால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்றைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. சட்டபோராட்டத்தின் மூலமாகத்தான் இந்த தீர்ப்பை ஜெயலலிதா பெற்று தந்திருக்கிறார்.

    விவசாயிகளின் ஒட்டுமொத்த பிரச்சினையும் தீர்த்து வைத்த அரசு அ.தி.மு.க. அரசு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரிநீர் ஒழுங்காற்று குழுவுக்கும் உறுப்பினரை நியமித்துள்ளது. கேரளா, புதுச்சேரி அரசும் உறுப்பினரை நியமித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு உறுப்பினரை நியமிக்காமல் மறுத்து வருகிறது.

    இதுகுறித்து டெல்லியில் நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். பருவ காலம் தொடங்கி விட்டது. விவசாயிகள், தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே இரண்டு குழுக்களின் கூட்டத்தை உடனே கூட்டி அந்த கூட்டத்தின் வாயிலாக 38 ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மத்திய மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தினேன். காவிரி பிரச்சினையை கையாண்டு அ.தி.மு.க. அரசு தீர்த்து வருகிறது. தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது காவிரி பிரச்சினைக்காக என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறதா?.

    விவசாயிகளின் உரிமைக்காக போராடிய அரசு அ.தி.மு.க. அரசு தான். தமிழகத்தின் உரிமையை பெற, விவசாயிகளின் உரிமையை பெற மாவட்டந்தோறும் உண்ணாவிரதம் இருந்து விவசாயிகளின் குரலை ஒலிக்க செய்தோம்.

    ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். எல்லோருக்கும் தெரியும் அணையில் தண்ணீர் இருந்தால் திறக்க முடியும் என்று. அணையில் தண்ணீர் இல்லை. யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தால்தான் திறக்க முடியும். போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால், யார் ஆட்சியில் இருந்தாலும் திறக்க முடியாது. 5 ஆண்டுகள் அணை திறக்க வாய்ப்பில்லை என்றாலும் சரியான நேரத்தில் குறுவை சாகுபடி செய்ய வேண்டும் என்பதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு ரூ.115 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆட்சி பட்ஜெட் போடும் வரை நீடிக்குமா? என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். பட்ஜெட் போட்டு விட்டோம். மானிய கோரிக்கையை நிறைவேற்றும் வரை தாக்குப்பிடிக்குமா? என்றார். மானிய கோரிக்கையையும் நிறைவேற்றினோம்.

    6 மாத காலத்தில் ஆட்சி கலையும் என்றார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் கழிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது. 16 மாதங்களாக அம்மா அரசு வெற்றிகரமாக வீறுகொண்டு செயல்பட்டு வருகிறது. ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் முளைத்து வந்தாலும் அ.தி.மு.க. அரசை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

    கட்சியை உடைக்க மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் முடியவில்லை. சில பேரிடம் ஆசைவார்த்தை காட்டி, மூளை சலவை செய்து சில எம்.எல்.ஏ.க்களை எங்களிடம் இருந்து பிரித்தீர்கள். அதற்கு சில விஷமிகள் துணைபோனார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் டி.டி.வி.தினகரன் எப்படியெல்லாம் கொடிகட்டி பறந்தார். அவர் யார்? கட்சிக்கு உழைத்தாரா? எதுவும் செய்யவில்லை.

    ஒருவரின் சொந்தக்காரர் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வளவு ஆட்டம் போட்டார். எப்படியெல்லாம் ஆட்டி படைத்தார். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. கட்சிக்காரர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×