என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Airport"

    • துபாயிலிருந்து சென்னை வந்த விமான பயணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.16.49 லட்சம் என தகவல்.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    கடந்த 23.11.2022 அன்று, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் எண் மூலம் துபாயிலிருந்து வந்த ஒரு ஆண் பயணியை விமான சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது பொருட்களை சோதனையிட்டனர். அப்போது ஸ்ட்ரோலர் சூட்கேஸின் கைப்பிடி கம்பியின் உள்ளே துருப்பிடிக்காத இரும்புக் குழாய்க்குள் வெவ்வேறு அளவுகளில் தங்கக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    345 கிராம் எடையுள்ள 15 தங்க கம்பிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 16 லட்சத்து 43 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மஸ்கட்டில் இருந்து 284 பயணிகளுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், கடும் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாக தெரியாததால், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
    • குவைத்தில் இருந்து 182 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    இன்று காலை 6:30 மணிக்கு மஸ்கட்டில் இருந்து 284 பயணிகளுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், கடும் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாக தெரியாததால், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    இதே போல் காலை 6.55 மணிக்கு குவைத்தில் இருந்து 182 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது.

    பின்னர் அந்த விமானம் ஐதராபாத்துக்கு திருப்பி தரையிறங்க வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது.

    இதே போல் சென்னையில் இருந்து புறப்படும் ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மதுரை, மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

    • ரூ.12.33 லட்சம் வெளிநாட்டு கரன்சியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை
    • குடல் பகுதியில் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிப்பு.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    கடந்த 25.11.2022 அன்று துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ஆண் பயணி ஒருவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 66 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 

    மேலும் நடத்ப்பட்ட சோதனையின்போது, குடலுக்குள் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 5 தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்ற பட்ட தங்கத்தின் மதிப்பு 25 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாகும்.

    இதேபோல் 21.11.2022 அன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த ஆண் பயணி ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த நபரின் உடைமைகள் மற்றும் குடல் பகுதியில் இருந்து 12 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி இருப்பது கண்டறியப்பட்டது. 

    அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓடுபாதையில் சென்ற போது சரியான நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்து நிறுத்தியதில் 144 பயணிகள் உயிர் தப்பினர்.
    • விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3.20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த விமானம் தினமும் அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதேபோல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு கத்தார் விமானம் வந்தது.

    இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்ல 144 பயணிகள் அனைத்து பரிசோதனைகளும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

    அதிகாலை 3.50 மணிக்கு விமானம் புறப்பட்டு, ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விட்டு விமானத்தை ஓடு பாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். விமான என்ஜினை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி வரை விமானத்தை சரி செய்ய முடியவில்லை. விமான பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது.

    விமானத்தின் என்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு பின்னர் விமானம் கத்தார் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஓடுபாதையில் சென்ற போது சரியான நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்து நிறுத்தியதில் 144 பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் இன்று காலை சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    • வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

    இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400 பைக்குகள் நிறுத்த முடியும். இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    மேற்கு பகுதியில் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய 5 பாயிண்டுகள் உள்ளன. மேலும் இங்கு மாற்று திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த கார் பார்க்கிங்கிற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும், தரை தளத்தில் உள்ள பிரதான வழியாக தான் நுழைய வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும்போது, வாகனம் வந்த நேரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது.

    உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். டோக்கன்களை தவறவிட்டால், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.150, கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    இந்த புதிய கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்தாலும், ஏற்கனவே பயணிகளை ஏற்றி இறக்கி வரும் வாகனங்களுக்கு 10 நிமிடங்கள் இலவச நேரம் உள்ளது. அந்த இலவச நேரம் தொடரும்.

    விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோரின் வாகனங்கள், தற்போதைய கார் பார்க்கிங்கில் இலவசமாக நிறுத்தப்படுகின்றன.

    ஆனால் இந்த புதிய கார் பார்க்கிங்கில் அவர்களுக்கு 100 கார்கள், 100 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இலவசமாக நிறுத்த முடியும். அதற்கு மேலான வாகனங்களுக்கு சலுகை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதோடு விமான நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு தற்போது மாதாந்திர கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படுகிறது.

    அந்தக் கட்டணம் அதிகரிக்கப்படுமா அல்லது அதே கட்டணம் வசூலிக்கப்படுமா என்பதை இந்த புதிய கார் பார்க்கிங்கை நிர்வகிக்கும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள்.

    மேலும் சென்னை விமான நிலையத்திற்குள் நிரந்தரமாக இயங்கி வரும் பிரீபெய்ட் டாக்சிகள், பார்க்கிங் கட்டணம் குறித்து, அதையும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக வரும் வாகனங்களில் சொந்த வாகனங்களில் வருபவர்கள் விமான நிலைய போர்டிகோ வரையில், ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலை தொடரும்.

    ஆனால் வாடகை கார்களில் வருபவர்கள், போர்டிகோ வரையில் வருவதற்கு, உள்ளே நுழையும் போதே ரூ.40 டோக்கன் வாங்கி விட்டு வர வேண்டும்.

    அந்த வாகனங்கள் 10 நிமிடங்களில் சென்று விட்டால், அதற்கு மேலான கட்டணம் கிடையாது. அதையும் தாண்டி தாமதமாக சென்றால், அவர்கள் 30 நிமிடம் பார்க்கிங் கட்டணமான ரூ.75 செலுத்த வேண்டியது வரும்.

    இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள் நிறுத்தலாம். அதில் 700 கார்கள் உள்நாட்டு முனையத்திற்கான கிழக்கு பகுதியிலும், 1,450 கார்கள் சர்வதேச முனையத்திற்கான மேற்குப் பகுதிகளிலும் நிறுத்த வேண்டும். அதை போல் இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு முனையும் கிழக்குப் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம்.

    இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, பழைய கார் பார்க்கிங் பகுதி முழுவதுமாக மூடப்படுகிறது.

    இனிமேல் அங்கு எந்தவிதமான வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. அந்த பகுதியை முழுவதும் புல் தரைகளாக மாற்றி, பூங்காக்கள் திட்டங்களை இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்த உள்ளது.

    விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி செல்வதற்காக வரும் வெள்ளை போர்டுகளுடன் கூடிய சொந்த வாகனங்கள் போர்டிகோ பகுதி வரையில் வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, 10 நிமிடத்திற்குள் இலவசமாக சென்று விடலாம்.

    ஆனால் வாடகைகார்கள் போர்டிகோ பகுதிக்கு வர முடியாது. வாடகை கார்கள் பிக்கப் பாய்ண்டிலிருந்து தான் பயணிகளை ஏற்றி செல்ல முடியும்.

    கார்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு பயணிகள் உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையத்திற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் வழியாக நடந்து செல்லலாம்.

    அந்த நடை மேம்பாலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது.
    • அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது.

    ஆலந்தூர்:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

    இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதே போல் நேற்று 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

    மேலும் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 2 மணி நேரம் ஓடு பாதையும் மூடப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மலேசியா, மும்பை, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன.

    இந்த நிலையில் தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது.

    இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "சென்னை விமான நிலையத்தில் விமான சேவை வழக்கம் போல் உள்ளது. கடினமான நேரத்தில் உறுதுணையாக இருந்த அரசு மற்றும் விமான நிலையங்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நிலைமையை புரிந்து ஒத்துழைப்பு அளித்த அனைத்து பயணிகளுக்கும் நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.

    • எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அவரது உடைமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த கூடையை திறந்து பாா்த்தனா்.

    அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தென் கிழக்கு ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காணப்படும் 8 பறக்கும் அணில் என்ற சுகர் கில்டர் குட்டிகள், தென் அமெரிக்கா, பிரேசில் நாடு வனப்பகுதியில் இருக்கும் மர்மோசெட் என்ற வகை 3 சிறிய குரங்கு குட்டிகள், தென் அமெரிக்கா வனப்பகுதியில் வசிக்கும் தேகு லிசார்ட் என்ற 3 ராட்சத பல்லி குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை விலங்கு குட்டிகள் என்பதாலும், அவற்றை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் என்பதாலும் தாய்லாந்தில் இருந்து எடுத்து வந்திருப்பதாக கூறினார்.

    ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்க்கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்கா, அமேசான் வனப்பகுதியில் வசிக்க கூடியது என தெரிவித்தனர்.

    இதையடுத்து வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.

    ஆலந்தூர்:

    சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து, மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், 378 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

    அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஜமீலா பிந்தி (வயது58) என்ற பெண், அவரின் குடும்ப உறுப்பினர்கள் 2 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஜமீலா பிந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

    இதையடுத்து விமானத்திற்குள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் விமானி, உடனடியாக ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் விமானம், சென்னை வான்வெளியை கடந்து சென்று கொண்டிருந்து. உடனே விமானி அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக, விமானத்தை அவசரமாக தரை இறங்க அனுமதி கேட்டார்.

    இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, அந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சைக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிட்டனர்.

    இதையடுத்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது.

    சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், விமானத்திற்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், ஜமீலா பிந்தி மற்றும் அவருடன் வந்த 2 பயணிகள் ஆகியோருக்கு அவசரகால மருத்துவ விசாக்கள் வழங்கினர்.

    அதன்பின்பு 3 பேரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • போதைப் பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்த நாய்.
    • போதை பவுடர் கடத்தலில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு பெண் கைது,

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 18ந் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த உகாண்டா நாடு பெண் பயணி வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

    அப்போது மோப்ப நாய் ஓரியோ, பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த போதை பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது. இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து சோதனையிட்ட அதிகாரிகள் அதில் இருந்து 1,542 கிராம் எடையுள்ள மெத்தகுலோன் மற்றும் 644 கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.அதன் மதிப்பு ரூ.5.35 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து போதை பவுடரை கடத்தியதாக உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2467 கோடி ஒதுக்கி உள்ளது.
    • 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில மாதத்தில் அது திறக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையம், வெளிநாட்டு விமான நிலையம் என 2 முனையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு இந்திய விமான இயக்குனரகம் முடிவு செய் தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது சர்வதேச விமான நிலையம் என்பதால் நவீன வசதிகளுடன் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்கும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

    தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2-ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3-ல் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது.

    சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2467 கோடி ஒதுக்கி உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையத்திற்கு இடையே டெர்மினல்-2 விரிவாக்க பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில மாதத்தில் அது திறக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    இது பயன்பாட்டிற்கு வந்த பின், தற்போது சர்வ தேச வருகை பகுதியாக செயல்பட்டு வரும் டெர்மினல்-3 முழுவதுமாக இடிக்கப்பட்டு அதற்கான வேலை தொடங்கப்படும். இதனை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க இந்திய இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

    அதன் பின்னால் டெர்மினல்-1 மற்றும் டெர்மினல்-4 ஆகிய இரண்டு டெர்மினலும் உள்நாட்டு விமான நிலையமாகவும், டெர்மினல் இரண்டு மற்றும் மூன்று சர்வதேச விமான நிலையமாகவும் செயல்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "சென்னை விமான நிலையத்தில் 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கும்போது அதில் சுமார் 33 தானியங்கி நுழைவாயிலும், 20 ஏரோ-பிரிட்ஜ்களும் இருக்கும். இது பயணிகளை கையாளுவதற்கு எளிதாகவும், வேகமாகவும் அமையும். இந்த பணிகள் தாமதமாவதற்கு காரணம் விமான நிலையம் எல்லையை ஒட்டியுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமும் கொரோனா தொற்றும் ஆகும்.

    கடந்த 2 ஆண்டுகளாக மழையின் காரணமாகவும் இந்த பணிகளை சரியாக செய்து முடிக்க முடியவில்லை. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு ஆண்டுக்கு 3½ கோடி பயணிகளை கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சென்னை விமான நிலையம் திறக்கப்படும்" என்றார்.

    • குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன.
    • இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    ஆலந்தூர்:

    உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையம் சர்வதேச முனையம் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை தமிழக சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது.

    இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.

    அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 2 சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 600 பயணிகளுக்கு புதிய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    விமானங்களில் வரும் போது, இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் இருக்கும் பயணிகளை 2 சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக, தேர்வு செய்கின்றனர்.

    குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு, இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன. இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது.

    ஆனால் அவர்களில் யாருக்காவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    அதோடு அந்தப் பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    ஆலந்தூர்:

    உருமாறிய கொரோனா வைரஸ் (பி.எப்.7) தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இதன் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    இதே போல ஜப்பான், தைவான், தென்கொரியா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடந்த 24-ந்தேதி முதல் விமான நிலையத்திலேயே மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தமிழகத்திலும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகள், மருந்து கையிருப்பு உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நேற்று உருமாறிய கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ பயிற்சி ஒத்திகையும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளில் சிலருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இவை புதிய வகை கொரோனாவா? என்பதை கண்டறிய மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே அவர்களுக்கு வந்திருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு நோய் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், தங்களை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.

    ×