என் மலர்
நீங்கள் தேடியது "Chennai-Kaniyakumari"
- கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை.
- பணிகள் முடிந்து 5 மாதங்கள் ஆகியும் இன்னும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
நெல்லை:
தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளில் மிக முக்கியமான ஒன்றாக ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது.
இதில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களுக்கு எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது.
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் சிக்னல்களில் பலமணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டியிருந்ததால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில், கனவு திட்டமான சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி இரட்டை ரெயில்பாதை திட்டத்தை பயணிகள் மிகவும் எதிர்பார்த்தனர்.
இதில் சென்னையில் தொடங்கி மதுரை வரையிலும் கடந்த 2021-ம் ஆண்டு இரட்டை ரெயில் பாதை பணி முடிக்கப்பட்டு சேவைகள் நடைபெற்று வந்தது. எனினும் தென்மாவட்டங்களில் அதிக வருவாயை ஈட்டித்தரும் மதுரை, நெல்லை, குமரி ரெயில் வழித்தடங்கள் இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்படாமல் இருந்த வந்தது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.
அடுத்த கட்டமாக மதுரை-நெல்லை-நாகர்கோவில்-குமரி இடையே இரட்டை பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டுக்கு முடிக்க திட்டமிட்டிருந்தது.
ஆனால் கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக சற்று பணிகள் தாமதமாகி கடந்த ஆண்டு அக்டோபரில் பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது சென்னையில் இருந்து குமரி வரை இரட்டை ரெயில்பாதை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் மூலம் தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு அதிக வருவாய் கிடைத்து வரும் நிலையில், இரட்டை ரெயில் பாதை திட்டம் பயன்பாட்டுக்கு வந்ததால் இனி கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் விரைவு ரெயில்கள் போதுமானதாக இல்லை. பயணிகளுக்கான ரெயில்களை அதிகமாக இயக்க வேண்டும்.
இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்து 5 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படாதது பயணிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்டிகை காலக்கட்டங்கள், விடுமுறை காலகட்டங்களில் வழக்கமான ரெயில்களை தவிர தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டாலும் அவையும் 5 நிமிடங்களில் நிரம்பி விடுகிறது.
தற்போது இரட்டை ரெயில் பாதை அமைந்த பின்னர் ரெயில்களின் பயண நேரம் குறைந்துவிட்டது. இது மகிழ்ச்சி தான் என்றாலும், கூடுதலாக விரைவு ரெயில்களை இயக்கினால் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும்.
பெரும்பாலான ரெயில் நிலையங்களில் அழகுப்படுத்தும் பணிகளை மத்திய ரெயில்வே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக நடைமேடைகள் அமைப்பது, கூடுதல் பணிமனைகள், கூடுதல் இணைப்பு ரெயில் பாதைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரெயில்வே கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இரட்டை ரெயில் பாதை பணி முடிந்துள்ளதால் விரைவு ரெயில்களின் பயண நேரம் 20 நிமிடம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும்போது பயண நேரம் மேலும் குறையும்.
நெல்லை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதில் சிக்கல் இருக்கிறது. பணிகள் முடிந்ததும் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.