search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child trafficking"

    • சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் கைது.
    • குழந்தைகளையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

    தாம்பரம்:

    சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்களில் பிச்சை எடுக்கும் பல பெண்களை காணலாம். அவர்கள் பெரும்பாலும் வடமாநில பெண்களாக இருப்பார்கள். கையில் கைக் குழந்தை ஒன்றை வைத்து இருப்பார்கள்.

    அந்த குழந்தைகள் சரியான உணவு, பராமரிப்பு இல்லாமல் பரிதாபமாக இருக்கும். அதேபோல் அந்த பெண்களும் இளம் வயதினராக இருப்பார்கள்.

    அவர்களும் சரியான உணவு கிடைக்காமல் கந்தலான உடையில் பார்க்க பரிதாபமாக இருப்பார்கள். இந்த மாதிரி வரும் பெண்கள் ஓடும் ரெயில்கள், மக்கள் கூடும் இடங்கள், சிக்னல்களில் நின்று பொதுமக்களிடம் 'அய்யா பசிக்குதுய்யா.... ஏதாவது குடுங்கய்யா...' என்று கையேந்துவார்கள்.

    அவர்களின் நிலைமையை பார்த்து இரக்க மனம் கொண்ட பலர் பணம் கொடுத்து உதவுகிறார்கள். இந்த மாதிரி நடமாடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த மாதிரி பிச்சை எடுத்து வரும் பெண்களை தாம்பரம் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் கண்காணித்து சிலரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் வைத்து இருந்தது அவர்களின் குழந்தைகள் அல்ல என்பதும் அவர்கள் திருடிய குழந்தைகள் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்தது குழந்தைகளையும் பறிமுதல் செய்தார்கள்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு நலவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. முகாம்களில் இருக்கும் குழந்தைகளை மீட்க எந்த பெண்ணும் ஆர்வம் காட்டவில்லை.

    இதன் மூலம் அவர்கள் பெற்றெடுக்காத குழந்தைகள் என்பது மேலும் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைத்தும் பச்சிளம் குழந்தைகள் என்பதால் அவர்களால் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை. அவர்களின் பெற்றோர் யார் என்பதை கண்டு பிடிக்கவும் முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் பொதுமக்களை உஷார்படுத்தி இருக்கிறார்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த மாதிரி பிச்சை எடுக்கும் பெண்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    மேலும் இந்த மாதிரி குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களை ரெயில்களிலோ, பொது இடங்களிலோ பார்க்க நேர்ந்தால் உடனடியாக போலீஸ் உதவி எண். 139-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

    • போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
    • குழந்தைகள் ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஜெகநாத சாமி கோவில் அருகே உள்ள ஹார்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தையை விற்க உள்ளதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.

    அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் இருந்து 15 மாத குழந்தையை விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அனக்கா பள்ளி, அச்யுதா புரம், பெத்தாநாவா,ஒரிசாவில் ஜெய்பூர் ஆகிய இடங்களில் இருந்து 17 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 6 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி வரும் கும்பல் டெல்லி மும்பை ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களை குழந்தை விற்பனை சந்தையாக கொண்டு செயல்பட்டது தெரியவந்தது.

    கடத்தி வரப்படும் குழந்தைகள் ரூ 5 முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

    குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ஆந்திராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் முழுவதும் கேமராக்களை பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார்.
    • குழந்தைகளை கடத்தி விற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவருடைய மனைவி அஞ்சலி தேவி. இவர்கள் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்தனர்.

    இவர்கள் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் மகேஷ்குமார், அஞ்சலி தேவி ஆகியோரை சூலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆண் குழந்தை, பெண் குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி, மீட்கப்பட்ட பெண் குழந்தையை விலை கொடுத்து வாங்கியதாக திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக அஞ்சலி தேவியின் தாயார் பூனம் தேவி(61), தங்கை மேகாகுமாரி(21) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

    மகேஷ்குமாரும், அஞ்சலி தேவியும், தனது தாய் பூனம் தேவி மற்றும் தங்கை மேகாகுமாரி உதவியுடன், பீகாரில் வறுமையில் தவித்த குடும்பத்திடம் இருந்து அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதாக கூறி ரூ.1500 கொடுத்து வாங்கியுள்ளனர்.

    பின்னர் அந்த குழந்தையை கோவைக்கு கொண்டு வந்து தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து, விஜயனிடம் ரூ.5 லட்சம் வரை பேரம் பேசியுள்ளனர். கடைசியாக இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விஜயனுக்கு விற்பனை செய்துள்ளனர்.

    இதேபோல மற்றொரு ஆண் குழந்தையையும் குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இவர்கள் மேலும் சில குழந்தைகளை கடத்தி விற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    • குழந்தையை கடத்திய திலகவதி என்ற பெண்ணையும் அவரது கணவர் பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.
    • குழந்தையை மீட்க அழைத்து சென்றபோது, திலகவதி மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ். இவரது மனைவி ரதி. இவர்களது 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ்.

    முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அப்போது அவர்களுடன் 40 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். பின்னர் அதனை பயன்படுத்தி அந்த பெண், கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை கடத்தி சென்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ரதி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண்ணுடன், ஒரு வாலிபரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை திருடிச் சென்றது தெரியவந்தது.

    பின்னர், குழந்தையை கடத்திய திலகவதி என்ற பெண்ணையும் அவரது கணவர் பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், குழந்தையை கடத்தப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் கோவையில் பாண்டியன்- திலகவதி தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், திலகவதி உயிரிழந்துள்ளார்.

    குழந்தையை மீட்க அழைத்து சென்றபோது, திலகவதி மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர், திலகவதியை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • விழிப்புணர்வு கூட்டத்திற்கு சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமை தாங்கினார்.
    • குழந்தை கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை களம் மற்றும் குழந்தை உரிமையும் நீங்களும் என்ற நிறுவனம் மூலம் குழந்தை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தார். மனித உரிமைகள், குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து இயக்குனர் பரதன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு தென்காசி தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இந்த அமைப்புகளை சேர்ந்த லோகமாதா, நிஷா, சுப்புலட்சுமி, மாரியம்மாள் மற்றும் பள்ளி மாணவிகள் 800 பேர் கலந்து கொண்டனர்.

    மேலும் குழந்தை கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு குழந்தை உரிமை நிறுவனம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலை பள்ளிகளிலும் கிராமப்புற பெண்களிடமும் விழிப்புணர்வு நடத்தப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவிகள் குழந்தை கடத்தல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் ராதா நன்றி கூறினார்.

    • மதுரையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது.
    • தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி நிர்வாகி விஜயசரவணன் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், முத்துமாரி என்பவரிடம் சையது ஆரிப், மனைவி சஹானா பானு ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக குழந்தையைப் பெற்று உள்ளனர்.

    இதற்கு ஷமீம்பானு என்பவர் புரோக்கராக இருந்து செயல்பட்டு உள்ளார். மேற்கண்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட முத்துமாரி, ஷமீம்பானு, சையது ஆரிப், அவரது மனைவி சகானா பானு ஆகிய 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை கடத்தல் பீதியில் பழவேற்காட்டில் மேலும் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இருந்து குழந்தைகளை கடத்தி செல்வதற்காக வட மாநிலங்களில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட கும்பல் ஊடுருவி இருப்பதாக “வாட்ஸ்-அப்”பில் சமீபத்தில் தகவல் பரவியது.

    முதலில் இது வதந்தி என்று மக்கள் நினைத்தனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இந்த தகவல் பெரிய அளவில் பகிரப்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

    கோடை விடுமுறை காரணமாக சிறுவர்-சிறுமிகள் வீட்டை விட்டு வெளியில் வந்து விளையாடுவார்கள் என்பதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட மாநில கும்பல்கள் கண்காணித்து கடத்தலில் ஈடுபட உள்ளனர் என்று மக்கள் மத்தியில் பீதி பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இந்த பீதியின் தாக்கம் அதிக அளவு உள்ளது.

    இதனால் தமிழக கிராமங்களில் உள்ளவர்கள், வட மாநில மக்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். வட மாநிலங்களைச் சேர்ந்த பிச்சை எடுப்பவர்கள், மன நோயாளிகள், திருநங்கைகள் மீது மக்களின் பார்வை கோபத்துடன் திரும்பியுள்ளது.

    பீதி, சந்தேகம் காரணமாக ஊருக்குள் வரும் அடையாளம் தெரியாத புதிய நபர்கள் மீது கடந்த சில தினங்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் வட மாநிலத்தவர்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல்கள் நடந்தன. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    ஆனால் குழந்தை கடத்தல் பீதிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட பரிதாபம் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட சென்றபோது தம்புகொட்டான்பாறை என்ற ஊரில் வழி கேட்ட போது அந்த ஊர் மக்களால் “குழந்தையை கடத்த வந்திருப்பவர்” என்று தவறாகக் கருதப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

    உறவினர்களுடன் கோவிலுக்கு சென்ற அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் நெஞ்சை பதறச் செய்யும் வகையில் உள்ளது. வாட்ஸ்அப் பீதியை உண்மை என நினைத்து ஒரு ஊரே காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டது தமிழக மக்களிடம் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ருக்மணி அம்மாள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பரபரப்பு ஓயும் முன்பே நேற்று குழந்தையை கடத்த வந்தவர் என்ற பீதி காரணமாக மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பரிதாப சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-


    பழவேற்காடு பகுதிக்கு நேற்று காலை அடையாளம் தெரியாத ஒரு நபர் வந்தார். அவர் பல்வேறு தெருக்களில் சுற்றித் திரிந்தார். இதனால் அவர் குழந்தையை கடத்திச் செல்ல வந்து இருக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அந்த மர்ம நபரைப் பிடித்து மக்கள் விசாரித்தனர். அதற்கு அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. சரமாரியாக அவரை அடித்து உதைத்தனர்.

    ஏற்கனவே பலவீனமாகக் காணப்பட்ட அந்த நபர் அடி தாங்காமல் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். அவரது உடலை கயிற்றில் கட்டி பழவேற்காடு ஏரி குறுக்கே கட்டப்பட்ட மேம்பால சுவரில் கட்டித் தொங்கவிட்டனர்.

    இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. அவர்கள் பழவேற்காடு ஏரி பாலம் பகுதிக்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபர் கடந்த சில தினங்களாக பழவேற்காடு பகுதியில் சுற்றித் திரிந்ததாக தெரிய வந்தது.

    மேலும் அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் சிலர் கூறினார்கள். அவர் சரியான பதிலை சொல்லாததால்தான் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பாலைவனம் போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    பழவேற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் பொன்னேரிக்குள் சில வட மாநில குழந்தை கடத்தல்காரர்கள் புகுந்து இருப்பதாக பீதி பரவியது. பொன்னேரியில் சில குறிப்பிட்ட இடங்களில் அவர்கள் பதுங்கி இருப்பதாகவும் வதந்தி பரவியது. இது பொன்னேரியில் உள்ளவர்களிடம் பதட்டத்தை அதிகரிக்கச் செய்தது.

    பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள தேவமாநகர் வாணியங்குளத்தில் அப்பகுதி மக்கள் புதர் மறைவில் குழந்தை கடத்தல்காரர்கள் பதுங்கி இருப்பதாக பரவிய தகவலால் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். குளத்தினுள் இறங்கிய இளைஞர்கள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டை நடத்தினர்.

    போக்கஸ் லைட் கட்டி தேடினார்கள். மேலும் குளத்தை சுற்றிலும் பெட்ரோல் ஊற்றி செடிகள் புதருக்கு தீ வைத்து தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து கிராமத்திற்குள் வரும் புதியவர்களை அடித்து உதைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

    இதையடுத்து குழந்தை கடத்தல் பீதி பரவியுள்ள மாவட்டங்களில் மக்கள் மத்தியில் வட மாநிலத்தவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வட மாநில மக்கள் ஊருக்குள் வந்தால் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கும்படியும் போலீசார் வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

    என்றாலும் சமூக வலைத் தளங்களில் பரவியுள்ள குழந்தை கடத்தல் பீதி இன்னும் ஓயவில்லை.
    ×