என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket World Cup"

    • 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.
    • இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது:-

    2023 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும். எப்போதும் 2-3 வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன்வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
    • முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன.

    ஹராரே:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன. அந்த அணிகள் தகுதி சுற்றில் விளையாடுகிறது.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    ஜூலை 9-ந் தேதி வரை நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாளம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்று உள்ளன.

    இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக் கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். நாளைய தொடக்க ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-நேபா ளம், வெஸ்ட்இண்டீஸ்-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    • நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.
    • என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இஸ்லாமாபாத்:

    50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

    10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமான மகிழ்ச்சியுடன் இருக்கும். இதில் ஒட்டு மொத்த அழுத்தமும் வித்தியாசமானது. நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.

    ஆனால் நாங்கள் அங்கு உலக கோப்பையில் விளையாட செல்கிறோம். எனவே அதுபற்றிதான் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டு உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் அதில் எந்த பலனும் இல்லை.

    என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் எப்போது அனுப்புவது என்பதை அமைச்சகம் முடிவு செய்யும்.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்பு குழு இந்தியா செல்கிறது.

    லாகூர்:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு குழு இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி செல்ல அரசாங்கம் அனுமதி வழங்குவதற்கு முன்பு மைதானங்களை ஆய்வு செய்வதற்காக அக்குழு அனுப்பப்பட உள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பாதுகாப்பு குழுவை இந்தியாவுக்கு எப்போது அனுப்புவது என்பதை வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும். பாகிஸ்தான் விளையாடும் இடங்கள் மற்றும் அணிக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, பிற ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்பு குழு இந்தியா செல்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.
    • கடந்த உலக கோப்பையில் ரோகித் சர்மா 5 சதம் அடித்தார்.

    கொல்கத்தா:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    இந்தநிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான கங்குலி விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பை போட்டி எல்லா அணிகளுக்கும் நெருக்கடியாகவே இருக்கும். கடந்த உலக கோப்பையில் ரோகித்சர்மா 5 சதம் அடித்தார். இதனால் இந்த உலக கோப்பையிலும் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதேபோல் நியூசிலாந்து அணியையும் சாதாரணமாக கருத முடியாது.

    பாகிஸ்தானும் அரையிறுதிக்கான வாய்ப்பில் இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியில் மோத வேண்டும் என்று விரும்புகிறேன். உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தை நடத்தும் வாய்ப்பு கொல்கத்தாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1987-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதேபோல 1996-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. தற்போது இந்த உலக கோப்பையிலும் அரையிறுதி வாய்ப்பு கொல்கத்தாவுக்கு கிடைத்துள்ளது.

    • டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை www.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் வருகிற 15-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ந் தேதி விற்பனையாகிறது.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு காரணங்களுக்கான சில போட்டிகள் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடப்பட்டது.

    இந்த நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நேற்று வெளியிட்டது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் போட்டி உள்ள 9 ஆட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் மோதும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந் தேதி நடக்கிறது. இதேபோல இந்தியா-நெதர்லாந்து அணிகள் நவம்பர் 12-ந் தேதி மோத இருந்த போட்டி நவம்பர் 11-ந் தேதியில் நடக்கிறது.

    மேலும் பாகிஸ்தான்-இலங்கை, பாகிஸ்தான்-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா போட்டிகளின் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன.

    உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ந் தேதி தொடங்கும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்தியா அல்லது மற்ற அணிகளுக்கான டிக்கெட்டுகள் அன்று முதல் விற்பனையாகிறது.

    இந்தியா மோதும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31 முதல் விற்பனையாகும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8-ந் தேதி எதிர் கொள்கிறது. அதை தொடர்ந்து 11-ந் தேதி ஆப்கானிஸ்தானுடனும், (டெல்லி), 19-ந் தேதி வங்காளதேசத்துடனும் (புனே) மோதுகிறது. இந்த 3 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 31-ந் தேதி விற்பனையா கிறது.

    இந்திய அணி அக்டோபர் 22-ந் தேதி நியூசிலாந்துடனும் (தர்மசாலா), இங்கிலாந்துடன் 29-ந் தேதியும் (லக்னோ), இலங்கையுடன் நவம்பர் 2-ந் தேதியும் (மும்பை) மோதுகின்றன. இந்த 3 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் நவம்பர் 5-ந் தேதி (கொல்கத்தா), நவம்பர் 12-ந் தேதி நெதர்லாந்துடன் (பெங்களூர்), மோதவுள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 2-ந் தேதி விற்பனையாகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14-ந் தேதி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ந் தேதி விற்பனை ஆகும்.

    அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ந் தேதி விற்பனையாகிறது. இந்திய அணி திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தியில் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் வருகிற 30-ந் தேதி விற்பனை செய்யப்படும்.

    டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை www.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் வருகிற 15-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இது டிக்கெட் வாங்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    • தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 நாடு கள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்தப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ஆபரேசன் செய்து கொண்ட கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரது உடல் தகுதியை சோதிக்காமலேயே தேர்வானது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

    அதோடு செப்டம்பர் 2-ந் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் கே.எல்.ராகுல் ஆடுவது சந்தேகம் என்றும் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் முழு உடல் தகுதி இல்லாமல் இருக்கும் கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்? என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கே.ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவரை தேர்வு செய்தது ஏன்? தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது. இதுதான் எங்களின் கொள்கையாக இருந்தது.

    தேர்வு செய்யப்படும் நாளில் ஒரு வீரர் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் அவரை தேர்வு செய்யக் கூடாது. நீங்கள் அவரை (கே.எல்.ராகுல்) உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால் அதற்காக மட்டும் தேர்ந்து எடுக்கவும். தேர்வு குழுவினர் விளக்கம் சரியாக இல்லை.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

    • விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
    • விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.


    புதுடெல்லி:

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.

    ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

    இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.

    4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

     

    ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.

    அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.

    விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.

    காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.

    • ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்து உள்ளார்.
    • யசுவேந்திர சாஹல் ஏற்கனவே ஆசிய கோப்பை அணியில் இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி எது? அரைஇறுதிக்கு முன்னேறு வது யார்? என்று முன்னாள் வீரர்கள் பலர் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறப்போவது யார் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்து உள்ளார்.

    அவர் தேர்வு செய்த அணியில் குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹலுக்கு இடமில்லை.

    மேத்யூ ஹைடன் தேர்வு செய்த உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-

    ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், வீராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன்.

    யசுவேந்திர சாஹல் ஏற்கனவே ஆசிய கோப்பை அணியில் இடம்பெற வில்லை.

    இதேபோல இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்த அணியில் யசுவேந்திர சாஹல் இடம் பெறவில்லை. மேலும், திலக் வர்மாவுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை.

    • உலகக் கோப்பை போட் டிக்கான 15 பேர் கொண்ட அணியை வருகிற 5-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருந்தது.
    • இஷான் கிஷன் 2-வது விக்கெட் கீப்பராக உலகக் கோப்பைக்கு தேர்வாகிறார். சூர்யகுமார் யாதவும் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன், இங்கிலாந்து முன்னாள் சாம்பியன்கள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கா னிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலகக் கோப்பை போட் டிக்கான 15 பேர் கொண்ட அணியை வருகிற 5-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்திருந்தது.

    மேலும் காயம் ஏதேனும் ஏற்பட்டால் செப்டம்பர் 28-ந் தேதிக்குள் கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்யும் பணி நேற்று நடந்தது. இது தொடர்பாக தேர்வுக் குழு தலைவர் அஜீத் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இலங்கையில் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட பிறகு இந்த ஆலோசனை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகும் 15 வீரர்கள் இறுதி செய்யப்பட்டனர். அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

    தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து முழு உடல் தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டதால் கே.எல்.ராகுல் அணியில் இடம் பெறுகிறார். அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்.

    இஷான் கிஷன் 2-வது விக்கெட் கீப்பராக உலகக் கோப்பைக்கு தேர்வாகிறார். சூர்யகுமார் யாதவும் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.

    லோகேஷ் ராகுல் அணியில் இடம் பெறுவதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை. அவர் அணியில் இடம் பெறமாட்டார்.

    இதே போல பேட்ஸ்மேன்களில் திலக் வர்மாவும் வேகப் பந்து வீரர்களில் பிரஷித் கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.

    வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் சுழற்பந்து வீரர்களில் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அல்லது செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணி வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்ஷர் படேல், இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 26 அத்தியாயங்களில் 24 அத்தியாயங்களை இரு தரப்பும் இறுதி செய்துவிட்டன. சில விஷயங்களில் உள்ள வேறுபாடுகளை களைவதன் மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளனர்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இந்திய பயணத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.

    மேலும் 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதில் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.
    • விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    முதலில் 'டாஸ்' வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

    இதன் காரணமாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இந்த போட்டியின் போது பல நேரங்களில் ரசிகர்கள் 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினார்கள்.

    மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் 'ரிஸ்வான்' 49 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பப்பட்டது.

    இதனை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் 'விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.

    விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

    விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    ×