search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dam drowning"

    கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎன்.பாளையம்:

    திருப்பூரை சேர்ந்தவர் முகமது சேக் அப்துல் மகன் முகமது சதாக் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று அரசு விடுமுறை என்பதால் முகமது சதாக், அதே பகுதியை சேர்ந்த டெய்லர் பிலால் (29) என்பவருடன் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்தார். கொடிவேரி அணையில் இருவரும் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முகமது சதாக் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை பங்களா புதூர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மாணவனின் உடலை தேடி வந்தனர்.

    இதற்கிடையே அணையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் அணையில் மூழ்கி பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குடியாத்தம் மோர்தானா அணை கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் மோர்தானா அணையில் 13வது முறையாக கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குடிநீர் பாசனத்திற்காக கவுண்டன்ய ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி வீதமும், வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்களில் வினாடிக்கு தலா 70 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    வரும் 5-ந் தேதி காலை 8 மணி வரை 10 நாட்களுக்கு நாள்தோறும் 240 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளதால், வலது, இடது புற கால்வாய்கள் மற்றும் கவுண்டன்ய ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்வாய், ஆற்றில் இளைஞர்கள், பொதுமக்கள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர்.

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் சத்யராஜ் (வயது 31) என்ற கட்டிடத் தொழிலாளி, நேற்று மாலை தனது பைக்கில் கிராமத்திற்கு அருகே ஓடும் மோர்தானா இடதுபுற கால்வாயில் குளிக்க சென்றார். பைக்கை நிறுத்தி விட்டு கால்வாயில் வேகமாக ஓடிய தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தார்.

    அவர், குளித்து கொண்டு இருந்த இடத்தின் அருகில் கொட்டாற்றின் கீழே 150 மீட்டர் தூரத்திற்கு சுரங்க கால்வாய் உள்ளது. இடதுபுற கால்வாயில் குளித்த சத்ய ராஜ் சுரங்க கால்வாயில் சிக்கினார். தகவலறிந்ததும், குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அதிகாரி சிதம்பரம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து சத்யராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு 10 மணி வரை மீட்பு பணி நடந்தது. தண்ணீர் வந்துக் கொண்டே இருந்ததாலும், இருள் சூழ்ந்ததாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இதையடுத்து, நீர்வள ஆதார துறை உதவி பொறியாளர் ரவி, பணி ஆய்வாளர் சிவாஜி உதவியுடன் இடது புறக்கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தண்ணீர் ஓட்டம் நின்றதையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் சுரங்க கால்வாயில் இருந்து சத்யராஜின் உடல் வெளியே வந்தது.

    போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

    ×