என் மலர்
நீங்கள் தேடியது "Dead Chickens"
- வள்ளியூர் அருகே உள்ள வடமலையான் கால்வாயில் நேற்று பல்வேறு இடங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடந்தது.
- இந்த கோழிகளை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் இழுத்துச்சென்று சாலைகளில் போட்டு செல்கிறது. இதனால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது ஆ.திருமலாபுரம். இந்த ஊருக்கு வெளிப்புறத்தில் வடமலையான் கால்வாய் உள்ளது. இதில் நேற்று பல்வேறு இடங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடந்தது.
இந்த கோழிகளை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் இழுத்துச்சென்று சாலைகளில் போட்டு செல்கிறது. இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசி, அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கால்வாயில் இறந்த கோழிகளை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இந்த கோழிகள் நோய்கள் தாக்கி இறந்ததால் அதனை இங்கு வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.
இறந்த கோழிகளால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக சுகாதார துறையினர் கோழிகளை அகற்றி அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றனர்.
- திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியில் செத்த கோழிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
- அவர்களிடம் இருந்து 22 கிலோ செத்த கோழிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அழித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியில் செத்த கோழிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, மாநகர அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் பாண்டியன்நகர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பெண்கள் சாலையோரம் அமர்ந்து சிக்கன் என்ற பெயரில் கோழிகளை விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அந்த இருவரும் செத்த கோழிகளை மஞ்சள் நிற பவுடர் மற்றும் மஞ்சள் பூசி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 22 கிலோ செத்த கோழிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அழித்தனர். மேலும் இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறும்போது "பொதுமக்கள் பொதுவாக கோழிகள் வாங்கும்போது தங்கள் கண்முன்பே கோழியை உரித்து புதிதாக வாங்க வேண்டும். கோழியின் தோல் கடினமாகவும், வெளுத்து போயும் இருந்தால் அது செத்த கோழி என்று அறிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற செத்த கோழிகள் விற்பனை மற்றும் உணவு தொடர்பான எந்த புகாராக இருந்தாலும் 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.