search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr Ramadoss"

    • 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.
    • 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்கக்கோரி போராட்டம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.

    கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.

    திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. பணிநிலைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும்.

    ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக மாநில திட்ட இயக்குநர் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆசிரியர்களின் பிரச்சினை குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்குகூட நேரம் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் எவரும் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் பணிநிலைப்புப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.

    ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழை ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. திமுக அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை.

    நூறு நாட்கள் என்று கூறி, இன்றைக்கு ஆயிரம் நாட்களையும் கடந்து, இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. இதுகுறித்து அவர்கள் குடும்பத்துடன் இன்றைக்கு, கோட்டையை நோக்கி பேரணி நடத்தியபோது கைது செய்து, காவல் துறையை வைத்து அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர்.

    பகுதி நேர ஆசிரியர்களைக் கைது செய்ததை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப்படுத்தாமல், கண்ணீர் மல்க வாழந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
    • அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.

    • நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
    • முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக வருகிற 28-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்கிறார். 29-ந்தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    அரசு சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.

    விழுப்புரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 21 சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியும் அப்போது நடைபெறுகிறது.

    29-ந் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சமூக நீதி போராளிகள் குடும்பத்தினர் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சியினர் என முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராம தாஸ் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்ப ஏற்பாடு கள் நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், சமூக நீதி போராளிகள் மணிமண்ட பம் திறப்பு விழாவில் பங்கேற்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அவருக்கும் மற்ற பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.

    தற்போது பா.ம.க., பா.ஜனதா கூட்டணியில் இருந்து வருகிறது. தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பா.ம.க.க்கும் தலைவர்கள் தி.மு.க. அரசு விடுத்துள்ள அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து பா.ம.க. நிர்வாகி கூறியதாவது:-

    சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் நிகழ்ச்சி இது. பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கையும் கூட. அதனால் இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள போவாரா? இல்லையா? என்பது இனி மேல் தான் தெரியவரும். ஆனால் இதில் அன்புமணி ராமதாசை பங்கேற்குமாறு கண்டிப்பாக அனுப்பி வைப்பார்.

    அடுத்து ஆளப்போகும் கட்சியுடன்தான் கூட்டணி என்று அன்புமணி தொடர்ந்து கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பா.ம.க. பங்கேற்க இருப்பது அரசியலுக்கான கூட்டணி அச்சாரம் என்று பலர் பேசுவார்கள். அது போக போகத்தான் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராக களமாட நினைத்தார்கள்.
    • பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தைலாபுரம் அரசியல் பயிலரங்கத்தில் பாட்டாளிகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ராமதாஸ், அரசியல் அறியாமல் அரைவேக்காடாய் அறிக்கை விட்டிருக்கிறார். செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு விவரத்தை அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    செந்தில் பாலாஜி மீது 2015, 2017 மற்றும் 2018-ல் மூன்று வழக்குகள் பதியப்பட்டன. 2015-ல் பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி குறித்துப் பேசினார்.

    ஆனால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த போது, தான் குற்றமற்றவன். தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னார். இந்த உண்மைகள் ராமதாஸ் அவர்களுக்குத் தெரியும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர இசை ஆணைக் கேட்டு வந்த கோப்பில், எந்த தாமதமும் இல்லாமல் முதல்வர், ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற நிலையில் கோப்புகளில் உள்ள அம்சங்களை மட்டுமே கவனித்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து கடமையாற்றியது எல்லாம் ராமதாசுக்குப் புரியவில்லையா? இல்லை புரியாமல் நடிக்கிறாரா?

    செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டு சிறை செல்லவில்லைதான். ஆனால், பொய் வழக்குகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கில், ஒன்றிய அரசின் எதேச்சாதிகார போக்கால் அவரை கைது செய்து, அழுத்தம் தந்து துன்புறுத்தி வாக்குமூலம் பெற்று, திமுகவின் மீது மேலும் பொய் வழக்குகள் போடலாம் என்ற கனவை அவர் பொய்யாக்கினார். அதற்காக 471 நாட்கள் சிறையில் இருந்தார்.

    பா.ஜ.க.வில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராகக் களமாட நினைத்தார்கள். அதற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது நல்லெண்ணம் கொண்டோருக்கு மட்டுமே புரியும்.

    1989 ஜூலை 16-ந்தேதி நினைவிருக்கிறதா? அன்று தான் டாக்டர் ராமதாஸ் 5 சத்தியங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான், 'என் வாரிசுகள் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார்கள்' என்றார்.

    இப்போது அன்புமணி கட்சியின் கடைக்கோடி உறுப்பினரா? 'சத்தியம் தவறாத உத்தமர் போல' நடிக்கும் ராமதாஸ் எதற்கெடுத்தாலும் அறிக்கைவிடுவார். ஏன் அமலாக்கத்துறையின் அடாவடிகளைக் கண்டித்து அறிக்கை விடத் தயங்குகிறார்?

    மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய அன்புமணி ராமதாசுக்கு ஏன் தொடர்ச்சியாக ராஜ்ய சபா சீட் தரப்படுகிறது? பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?

    "ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது, அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது'' என முன்பு ராமதாஸ் சொன்னார். அந்த பினாமிகளோடுதான் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ராமதாஸ் கூட்டணி வைத்தார். பா.ம.க-வின் பாவங்களை கழுவிவிட்டு, வந்து ராமதாஸ் திமுகவை விமர்சிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது.
    • ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே யுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கையை சூழலுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அனுராக் திசநாயக் அதிபராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

    இவர் சிங்களர்களையும், தமிழர்களையும் இணைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.

    ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார். அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர்.

    இடது சாரி இயக்கம் என்று கூறிகொண்டாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக் அரசு 1½ லட்சம் தமிழர்களுக்கு நீதி பெற்று எதுவும் செய்ய மாட்டார் என கூறினார்.

    இந்தியா-இலங்கை உறவை வலுபடுத்த திசநாயக் இருப்பார் என்பது ஐயமாக தான் உள்ளது. சீன அரசுக்கு சாதகமாக திசநாயக் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.

    தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துதல், ஈழத்தமி ழர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

    தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது. மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுகடை திறப்பது, மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள போது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை.

    மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் முத்துசாமி மத்திய அரசு தேசிய அளவில் கொள்கை உருவாக்க கூறுவது அபத்தமானது.

    மது ஆலைகளை வைத்துள்ள தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடாது. 2 ஆட்சி பணிகள் அதிகாரிகள் வீட்டில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தியதற்கு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

    பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்கள் போராட்டம் செய்வதாக அறிவித்தனர்.

    அதன் பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கைவிட்ட ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    லோக் ஆயுக்தா வலுபடுத்தபட வேண்டும். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா வலிமையானதாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை.

    முதல்வரை விசாரிக்கும் அதிகார லோக் ஆயுக்தாவிற்கு இல்லை என்பதால் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் முதல்-அமைச்சரை விசாரிக்கும் அதிகாரத்தினை கொண்டு வர வேண்டும்.

    செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துக்களின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
    • உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

    வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.

    பத்திரப்பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது.

    சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப்பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத்துறை செயல்படக்கூடாது.

    உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு அபகரித்த சொத்துகளை ஒருவர் இன்னொருவருக்கு விற்க முயலும் போது, அதை எதிர்த்து சொத்தின் உண்மையான உரிமையாளர் வழக்கு தொடரும் நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை சொத்தை பதிவு செய்யாமல் இருப்பது தான் சரியானத் தீர்வு ஆகும். மாறாக, அந்த சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும்.

    வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து 5 துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளது.
    • துணைவேந்தர்கள் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இவை தவிர மேலும் இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய துனைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களுக்கும் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

    இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 அக்டோபர் மாதம் முதலும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 நவம்பர் மாதம் முதலும் சுமார் இரு ஆண்டுகளாக காலியாக உள்ளன. இப்போது இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது.

    துணைவேந்தர்கள் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களை விட அண்ணா பல்கலைக் கழகம் மிகப்பெரியது. அதிக பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கக் கூடியது. அத்தகைய பல்கலைக்கழகம் தலைமை இல்லாமல் இருந்தால் அதன் செயல்பாடுகள் அடியோடு முடங்கி விடும் ஆபத்து உள்ளது.

    இவை தவிர புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாததால் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

    நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையவிருக்கிறது.

    புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டிற்குள் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இன்றி தடுமாறும் நிலை உருவாகும். உயர்கல்வி வளர்ச்சிக்கு இது நல்லதல்ல.

    பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே துணைவேந்தர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எந்த பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்பட வேண்டுமோ, அந்த பல்கலைக்கழகத்தின் விதிகள் மதிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தின் விதிகளிலும், பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற பிரிவு இல்லாததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைதான் சரியானது.

    அதுமட்டுமின்றி, வேந்தர் என்ற முறையில் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும்தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தேடல் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.

    மாறாக, தேடல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசிதழில் வெளியிடும் அதிகாரம் உயர்கல்வித்துறை செயலாளருக்கு உண்டு. அதை ஆளுனரால் தடை செய்ய முடியாது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதால்தான் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்று 5 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்குழு, ஆட்சிக்குழு, பேரவைக்குழு ஆகியவற்றை நியமிக்கும் முறைகள், அதிகாரம் ஆகியவை குறித்த விதிகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுவதால், அனைத்துப் பல்கலைக்கழகளுக்கும் ஒரே மாதிரியான விதிகளை உருவாக்கும் வகையில் பொது பல்கலைக்கழக சட்டம் இயற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை.
    • நீட் தேர்வை நடத்துவதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 (98 சதவீதம்) மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர், அம்மாநில தேர்வு வாரியம் நடத்திய 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை இரு முறை எழுதியும் வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்துள்ளார். நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

    கடந்த மாதம் நடத்தப்பட்ட துணைத் தேர்வுகளை மீண்டும் எழுதிய அந்த மாணவி வேதியியல் பாடத்தில் சரியாக 33 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஆனால், இயற்பியல் பாடத்தில் 22 மதிப்பெண்களை மட்டுமே எடுத்த அந்த மாணவி மீண்டும் தோல்வி அடைந்துள்ளார்.

    கடினமான நீட் தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவி, மிகவும் எளிதான 12-ம் வகுப்புத் தேர்வில் 33 மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியவில்லை என்பதில் இருந்து நீட் தேர்வை நடத்துவதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    எனவே நம்பகத்தன்மை யற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.
    • ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    கல்லூரிகளின் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.20,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    அவர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு கடந்த 28.1.2019-ம் நாள் ஆணையிட்டது.

    உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி கவுரவ விரி வுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டிய தமிழக அரசு, அவர்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.

    இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் சமூகநீதியை வழங்கும் வகையில், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்தவும் தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

    • குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
    • சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுர தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 35 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விஷச்சாராயத்தால் பலியான அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லாடி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.

    எனவே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன்.
    • தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொடடி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பே ரவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்று வது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன்.

    வன்னியர்களுக்கு தமிழகத் தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ம் ஆண்டு நடந்த போது பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது.

    அப்போதும் கொலைப் பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தி யாகம் செய்தனர்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகு தியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பி னராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ம் நாள் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும்.

    இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க. அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னி யர்களுக்கான இட ஒதுக் கீட்டை வென்றெடுக்க விக்கி ரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×