search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DRDO"

    • அக்னி 4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் நான்காவது ஆகும்.
    • அக்னி 4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    புவனேஷ்வர்:

    இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

    அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    • கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார்.
    • அப்துல் கலாம் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளார்.

    இந்தியாவின் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் [84] நேற்று [ஆகஸ்ட் 15] காலமானார். ஐதராபத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 1940 ஆம் ஆண்டு பிறந்த பிறந்த ராம் நாராயண், சென்னை, கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார். பின்னர் பெங்களூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் -இல் தனது டாக்டர் பட்டதைப் பெற்றார்.

    1983 ஆம் ஆண்டு இந்தியாவால் தொடங்கப்பட்ட அக்னி ஏவுகணைத் திட்ட இயக்குனராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்க கடும் உழைப்பை செலுத்தினார். எனவே, ஏவுகணை உருவாக்கத்துக்கு அடித்தளமிட்ட ராம் நாராயண், அக்னி ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுத்துகிறார்.

    டி.ஆர்.டி.ஓ. [DRDO] எனப்படும் ராணுவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வக இயக்குநராகவும் ராம் நாராயண் அகர்வால் பணியாற்றியுள்ளார். ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ மற்றும் 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. ராம் நாராயண் மறைவுக்கு டிஆர்டிஓ அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

    மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தனது சுயசரிதை புத்தகமான அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
    • ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    புவனேஸ்வர்:

    பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படுகின்றன.

    இந்நிலையில், டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

    ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதுதொடர்பாக டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், சூப்பர்சானிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு உள்பட பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் இந்திய கடற்படை திறனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

    • ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
    • இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் இருந்து ஆகாஷ்-என்ஜி ஏவுகணை இன்று காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சுமார் 80 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இது வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பாகும். இன்றைய சோதனையின்போது, ஆகாஷ்-என்ஜி ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஏவுகணையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை கண்டறியும் கருவி, லாஞ்ச்சர், ரேடார், கட்டுப்பாடு மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள் ஆகியவை உள்ளது.

    இந்நிலையில், ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ, இந்திய விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

    • புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
    • அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலசோர்:

    இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏவுகணை இன்று காலை ஒடிசா கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

    இந்த ஏவுகணை தாக்கும் எல்லை 1,000 கிமீ முதல் 2,000 கிமீ வரை பயணம் செய்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • வான் வழியாக வரும் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கக்கூடிய நவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
    • தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானது.

    பாலசோர்:

    ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது.

    தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானது. எதிரிகள் வானில் இருந்து செலுத்தும் ஏவுகணைகளை அடையாளம் கண்டு, உடனடியாக செயல்பட்டு வானிலேயே அதை தாக்கி அழிக்கும் திறன் உடையது இந்த ஏவுகணை.

    நம் ராணுவத்தின் படை செல்லும்போது, வானில் இருந்து தாக்குதல் நடத்தினால், அதை முறியடிக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    தரையில் பயணம் செய்யும்போதும், வாகனத்தில் இருந்து இதை ஏவ முடியும். மொத்தம் 6 வகையான சோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் துல்லியமாக, வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ., கூறியுள்ளது. இந்த முயற்சிக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    • இந்திய கடற்படை கப்பலில் இருந்து குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.
    • ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

    ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

    இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

    • புறப்பாடு, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக அமைந்தது.
    • ஆளில்லா விமானங்களில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் சாதனை.

    சித்ரதுர்கா:

    மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தானியங்கி முறையில் பறக்கும் தொழில் நுட்ப செயல் விளக்க விமானத்தை இன்று பரிசோதனை செய்துள்ளது.

    இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வான் கட்டுப்பாட்டு சாதனங்களும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வான்சோதனை தளத்தில் முதல்முறையாக நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது.  முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய இந்த விமானத்தின், புறப்பாடு, பறக்கும் வழி, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக நடைபெற்றன. 


    வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்த சோதனை ஓட்டம் மாபெரும் சாதனையாக அமைந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்தியா தற்சார்பு அடைந்துள்ளதற்கு இது உதாரணமாக உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    டிஆர்டிஓ வி்ஞ்ஞானிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், தானியங்கி ஆளில்லா விமான தயாரிப்பில் இது ஒரு பெரும் சாதனை என்றும் கூறியுள்ளார்.

    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள என்ஜீனியரை உ.பி பயங்கரவாத தடுப்பு பிரிவு 3 நாள் காவலில் எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    லக்னோ :

    மராடிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தது.

    பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய தனிப்பட்ட லேப்-டாப்பில் அதிகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அவர் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என தெரியவந்துள்ளது.

    மராட்டிய மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்த் அகர்வாலை காவலில் அனுப்ப உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தொடர்பாக முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து நிஷாந்த் அகர்வாலை 3 நாட்களில் காவலில் எடுக்க உத்தரபிரதேச பயங்கரவாத பிரிவுக்கு அனுமதி வழங்கியது.

    நேகா சர்மா மற்றும் பூஜா ராஜன் என்ற பெயர்களிலான பேஸ்புக் கணக்குகளுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த கணக்குகள் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இவை பாகிஸ்தான் உளவுத்துறையால் இயக்கப்பட்டு உள்ளது என சந்தேகிக்கிறோம் என விசாரணை பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆசைவார்த்தையில் சிக்கி உளவு பார்த்த ராணுவ வீரர் ஒருவர் செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பெண்கள் பெயரிலான போலியான பேஸ்புக் கணக்குகளை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு சோதனையிட்டது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் கணக்குகள் இந்தியாவின் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களுடன் தொடர்பு உள்ளது தொடர்பாக கண்காணித்தது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    ×