search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drizzle"

    • சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதும்.
    • பொதுமக்கள் குடை பிடித்த படியே சாலைகளில் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் ஏற்காட்டில் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதும்.

    இந்த நிலையில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது. இன்று காலையும் சாரல் மழையுடன் கடும் பனி மூட்டமும் ஏற்காட்டில் நிலவுகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    மேலும் தொடர் பனி மூட்டத்தால் சற்று தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வந்து செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எறிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன.

    மேலும் ஏற்காட்டில் இருந்து வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஏற்காடு பஸ் நிலையத்தில் குடைகள் பிடித்த படி காத்து நின்று பஸ்களில் ஏறி சென்றனர். சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தால் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் ஏற்காட்டில் கூலி வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    இதேபோல டேனீஸ்பேட்டை, கரியகோவில், ஆத்தூர், ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் இன்று காலை மழை தூறிய படியே இருந்தது. இதனால் பொதுமக்கள் குடை பிடித்த படியே சாலைகளில் சென்றனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 12.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 0.8, ஆனைமடுவு 5, ஆத்தூர் 4.4, கரியகோவில் 7, மேட்டூர் 4.6, டேனீஸ்பேட்டை 11 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45.4 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    ×