என் மலர்
நீங்கள் தேடியது "Dudiyalur"
- குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானை கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம்.
- குட்டி யானை ஒன்று ஊருக்குள் சுற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கவுண்டம்பாளையம்:
கோவை, துடியலூர் அருகே பன்னிமடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியையொட்டி சில கி.மீட்டர் தூரங்களில் வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி, இந்த பகுதிக்குள் நுழைந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.
நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய யானை கூட்டங்கள் நேராக பன்னிமடை பகுதிக்குள் நுழைந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானை கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.
இந்த நிலையில் இன்று காலை, அந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று ஊருக்குள் சுற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறையினர் வந்து, குட்டியானையை மீட்டு, அதனை அதன் தாயுடன் சேர்ப்பதற்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது பன்னிமடை பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்தில், பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் காணப்பட்டது. எந்தவித அசைவுமின்றி இருந்ததால் வனத்துறையினர் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த யானை அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து உயிரிழந்த யானையை பார்வையிட்டனர். யானை இறந்து கிடந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர்.
இந்த யானை எப்படி இறந்தது? யானை இறப்பிற்கான காரணம் என்ன? இறந்த யானை தான் குட்டி யானையின் தாயா? யானையை தேடி வந்தபோது இறந்ததா? அல்லது யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த வேறு யானையா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்
உயிரிழந்த யானையை வனப்பணியாளர்கள் மற்றும் வன கால்நடை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு பிரேத பரிசோதனை செய்தனர்.