search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EU chief"

    • ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ராஜ்காட் மகாத்மா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • இந்தப் பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய தலைமையில் ஒன்றியத்தின் 26 ஆணையாளர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

    அதன்படி, டெல்லி வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், அவர் டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவருடைய இந்தப் பயணம் அமைந்துள்ளது.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் இடையே, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று நீண்டகாலத்திற்கு கையெழுத்திடப்படாமல் உள்ளது. இதனை விரைவுப்படுத்தும் நோக்கில் இருதரப்பும் முனைப்பில் உள்ளன. இந்தப் பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், உர்சுலா வான் டெர் லெயன் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய குழுவினர் மற்றும் இந்திய அதிகாரிகள் தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடந்த உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், வெளிவிவகார மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிற மந்திரிகள் கலந்துகொண்டனர்.

    • மத்திய பிரசெல்சில் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
    • இந்தச் சம்பவத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

    பிரசெல்ஸ்:

    ஐரோப்பா நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் நேற்று இரவு பெல்ஜியம்-சுவீடன் கால்பந்து அணிகள் மோதிய, யூரோ சாம்பியன்ஷிப் தகுதி சுற்று போட்டி நடந்தது.

    இப்போட்டி நடந்த மைதானத்தில் இருந்து சிறிது தூரத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடினர். பின்னர் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் சுவீடனைச் சேர்ந்த 2 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பயங்கரவாத தாக்குதல் என்பது தெரிய வந்தது. தாக்குதல் நடத்திய நபர், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, "எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி. நான் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாம் விரும்புகிறோம். நம்மை வெறுப்பவர்களை வெறுக்கிறோம். நான் சுவீடன் நாட்டவரை கொன்றுள்ளேன்" என்று கூறினார்.

    இதனால் பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாத தாக்குதலையடுத்து பெல்ஜியம்-சுவீடன் மோதிய கால்பந்து போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. அப்போது மைதானத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் மைதானத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    சிறிது நேரத்துக்கு பிறகு ரசிகர்கள் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். மேலும் சுவீடன் கால்பந்து அணி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது.

    தாக்குதல் நடத்திய நபர், துனிசியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், பிரசெல்சில் வசித்து வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    இதுதொடர்பாக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டிகுரூ கூறும்போது, "பிரசெல்சில் நடந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. சுவீடன் குடிமக்கள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து சுவீடன் பிரதமருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். மேலும் உயர்மட்ட அமைச்சர்களின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், பிரசெல்சில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர், ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இந்த தாக்குதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல். இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    ×