search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "feeder"

    • வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வருகிறது.
    • வாகனஓட்டிகள் கரடியை வீடியோ பதிவு செய்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவாரங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகி விட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களில் கைகாட்டி-மஞ்சூர் சாலை வழியாக ஊட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது பெங்கால் மட்டம்-கேரிகண்டி சாலையில் ஒரு கரடி சாலையோரம் நடந்துசென்றது.

    தொடர்ந்து அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் அந்த கரடியை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர்.

    இதனை பார்த்த கரடி "நான் சும்மா தானே போய்கிட்டு இருக்கேன், என்னை ஏன்டா தொந்தரவு பண்றீங்க" என்பதுபோல் கையெடுத்து கும்பிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    குன்னூர் கிளண்டல் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வாசு என்பவரின் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் புகுந்தன. பின்னர் அவை சமையல் அறையில் இருந்த சமையல் எண்ணெயை ஆசை தீர குடித்து தீர்த்தன.

    அப்போது வாசு தற்செயலாக சமையல் அறைக்கு வந்தார். அங்கு 2 கரடிகள் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தங்களை காட்டி வீட்டுக்குள் நின்ற கரடிகளை விரட்டினார். இருப்பினும் அந்த கரடிகள் சமையல் அறையில் இருந்த எண்ணை கேனையும் எடுத்துச் சென்றன.

    • ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன.
    • பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் தேயிலை, மலை காய்கறிக்கு அடுத்தபடியாக சீச்சீஸ், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழவகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இதற்கிடையே ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சோலூர், எல்லநள்ளி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இவை குளிர் மற்றும் பனிக்காலத்தில் செழிப்பாக வளரும். அங்கு தற்போது மழை பெய்து வருவதால் அங்கு விளைவிக்கப்பட்டு உள்ள ஸ்ட்ராபெர்ரி செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.

    நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழசீசன் தொடங்கி உள்ளதால், அங்கு விவசாயிகள் தற்போது பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டு இருக்கும் விவசாயிகள் கூறியதாவது:-

    ஸ்ட்ராபெர்ரி பயிரிட்ட 3 மாதங்களுக்கு பிறகு பழங்களை அறுவடை செய்ய முடியும். ஒருநாள்விட்டு ஒருநாள் பழங்களை அறுவடை செய்யலாம். ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்திருந்து, ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்களை ரூ.300 வரை கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர்.

    அவை நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பயிர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
    • வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் நீர்பனியின் தாக்கம் தொடங்கி, பின்பு உறைபனியின் தாக்கம் தலைதூக்க ஆரம்பிக்கும்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் உறைபனி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூரில் பனியின் தாக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று காலை 2.5 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீர்ப்பனி மற்றும் உறைபனியின் தாக்குதல் ஒருபக்கம் நீடித்து வரும் நிலையில் இன்னொருபுறம் பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

    எனவே ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல்தரைகளிலும் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியே தற்போது வெள்ளை கம்பளி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்தது. மேலும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

    எனவே வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா, லவ்டேல் பட்பயர், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் பச்சைபசேல் என காணப்படும் புற்கள் மீதும் உறை பனி படர்ந்து காணப்பட்டது.

    குன்னூரில் வழக்கத்தை விட தற்போது கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ள தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    குன்னூரில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து உள்ளனர். இதனால் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    அதிகாலை நேரத்தில் தேயிலை பறிப்பதற்காக தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் நடு நடுங்க வைக்கும் உறைபனி காரணமாக ஹோட்டல் மற்றும் காட்டேஜ்களில் முடங்கிப் போய் உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நீர்ப்பனி, உறைபனி என சீதோசன நிலை மாறி மாறி காணப்படுவதால் உள்ளூர் வாசிகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    • 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
    • 50 நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை பனிக்காலம் ஆகும்.

    மிச்சாங் புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நவம்பரில் துவங்க வேண்டிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது.

    மழை முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அத்துடன் உறைபனியும் கொட்டுகிறது.

    50 நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம், படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல் தரைகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காட்சியளித்தது.

    இதுதவிர கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மீதும் உறைபனி கொட்டி யிருந்தது.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்சமாக 7.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில் இன்று 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    கொட்டும் உறைபனி காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகின்றனர். இன்னும் வரக்கூடிய நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தேயிலை செடிகள் மட்டுமின்றி புல் வெளிகள், செடி, கொடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற நாட்களில் வெப்பநிலையானது 0 டிகிரிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×