search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Firecrackers Explosion"

    • ஆலையில் பட்டாசு தயாரிப்புக்காக வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
    • வெடிவிபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பட்டாசு ஆலைகள் தேவையான மருந்தை அதகளவில் வாங்கி இருப்பு வைப்பது வழக்கம்.

    சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சாத்தூர் அருகே உள்ள முத்தல் நாயக்கன்பட்டியில் திருமுருகன் என்ற பெயரில் சொந்தமாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூர் உரிமம் பெற்று இந்த ஆலை வளாகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது.

    சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் பேன்சி ரக பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்காக வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் வேலையை முடித்து விட்டு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதனால் எழுந்த வெண்ணிற புகைமூட்டம் விண்ணை தொடுமளவுக்கு இருந்தது. அடுத்தடுத்த எழுந்த பயங்கர சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    வெடிவிபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் அவர்களால் உடனடியாக அருகில் செல்ல முடியவில்லை.

    இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணிக்காக முன்னேற்பாடாக மருந்து கலவை தயாரிக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது உராய்வினால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் பட்டாசு ஆலையே அடையாளம் தெரியாத வகையில் தரைமட்ட மாகியது.

    சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர், வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். முழுமையாக வெடிகள் வெடித்து பின்பு தான் விபத்து பகுதிக்கு செல்ல முடியும் என்பதால் உயிர்பலி குறித்து உடனடியாக தெரியவில்லை.

    • பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை பணிக்கு வந்த அவர்களில் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் பரவி வெடித்துச்சிதறியது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து சக தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தியை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சிவகாசி அருகே உள்ள சிறு குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே உள்ள சேது ராமலிங்கபுரம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 80-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு பட்டாசுக்கு பவுடர் செலுத்தும் பணி செய்து கொண்டிருந்த மேலாண் மறைநாடு அருகே உள்ள துரை சாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (50) பணி முடிந்ததும் ஆலை வளாகத்தில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக குளிப்பதற்கு முன்பாக புகை பிடித்தபோது உடலில் இருந்த பவுடர் கலவை காரணமாக தீப்பிடித்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதுகுறித்து விஜயரங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது.
    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது. வழக்கம் போல இன்று பட்டாசு ஆலையில் சிலர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சத்தம் அருகில் இருந்தவர்களுக்கு கேட்டது.

    இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அங்கு தீக்காயத்தில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கும், வாழப்பாடி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் படுகாயம் அடைந்த சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (55), சின்னனூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (30), முத்துராஜ் (29), சுரேஷ் ஆகிய 4 பேரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு வெடித்த ஆலை முழுவதும் தண்ணீரை ஊற்றி பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

    போலீசாரின் விசாரணையில் ஜெயராமன் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்க முற்படும்போது ஏற்பட்ட உரசலில் மருந்து வெடித்து சிதறியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
    • மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

    • இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. நேற்று காலை ஆலையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் தரைமட்டமானது. கன்னி சேரி புதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இனாம் ரெட்டிய பட்டியை சேர்ந்த சுந்தர மூர்த்தி (18), தம்ம நாயக்கன் பட்டியை சேர்ந்த சரவண குமார் (25) ஆகியோர் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    வெடி விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் முத்துக்குமார், மேலாளர் கருப்பசாமி(50) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்ப சாமி கைது செய்யப்பட்டார்.

    • சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார்.
    • இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசின் அனுமதி பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வந்தபோதிலும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோதமாகவும் பட்டாசு தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளில் விலையில்லா உயிர்கள் பறிபோவது தடுக்க முடியாததாகி வருகிறது. அதேபோல் இன்று காலை நடந்த வெடிவிபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சாத்தூரை அடுத்த சின்ன கொல்லப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தற்போது விவசாயம் எதுவும் செய்யப்படாத நிலையில் அவர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    மேலும் சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார். அங்கு ரகசியமாக விவசாய வேலை பார்ப்பதற்கு ஆட்களை அழைத்து வருவது போன்று சிலரை அழைத்து வந்து இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை நடத்தி வந்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறை முழுவதுமாக இடிந்துவிழுந்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதும், அதில் சிக்கி பலியானது சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியை சேர்ந்த அஜித் (வயது 27) என்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜ கோபாலை தேடி வருகிறார்கள்.

    • வெடி விபத்து ஏற்பட்ட அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
    • பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்டவைகளுக்காக மீண்டும் இந்த ஆலைகள் பட்டாசு உற்பத்தியை தொடங்கின.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்திருந்த ஆர்டர்களின் பேரில் பட்டாசு உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியது. இதற்காக அதிகப்படியான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே ஊழியர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். ஆலையில் உள்ள மருந்து சேமிக்கும் அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அறையில் 'திடீர்' வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். வெடி விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஆனாலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்ட அந்த அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதில் மற்ற 3 அறைகள் உள்பட 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இருந்தபோதிலும் அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.

    இந்த பயங்கர விபத்தில் கன்னிசேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய இருவரும் தரைமட்டமான அறைகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (18), தம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானோர் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.
    • ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் கிராமத்தில் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே கனிஷ்கர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடையும் வைத்திருந்தார்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கடையின் பின்புறம் அனுமதி பெறாமல் விதிகளை மீறி தகர செட் அமைத்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்து வந்தார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் அங்கு பட்டாசு வாங்க வந்த வெளியூரை சேர்ந்த நபர்கள் சரவெடி ஒன்றை பரிசோதனை முறையில் கடையின் முன்பாக வெடித்து பார்த்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்து தீப்பொறி பறந்து விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கிருந்த அனைத்து வெடிகளும் வெடித்து சிதறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ முழுமையாக அணைப்பட்ட பிறகே பலியானவர்களின் உடலை மீட்கும் பணி நடந்தது.

    இதில் அங்கு பணியாற்றிய வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த முனீஸ்வரி (32), அழகாபுரியைச் சேர்ந்த தங்கமலை (33), அனிதா (45), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் (35), குருவம்மாள் (55), இந்திரா (45), லட்சுமி (28), செல்லம்மாள் (40), முத்துலட்சுமி (36) ஆகிய 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் படுகாயம் அடைந்த சின்னத்தாய் (35), பொன்னுத்தாய் (55) ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கரிக்கட்டையாக மீட்கப்பட்ட பலியான 13 பேரின் உடல்களும் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது.

    அதேபோல் சிவகாசி அருகே மாரனேரி கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நதிக்குடியை சேர்ந்த வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். ஒரே நாளில் பட்டாசு ஆலை விபத்துகளில் 14 பேர் பலியாகினர்.

    12 பெண்கள் உள்பட 13 பேரை உயிரை பலி வாங்கிய ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, போர்மேன் கனகு என்ற கனகராஜ் (41), மேலாளர் ராம்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பட்டாசு தயாரிக்கும் வெடி மருந்துகளை முறையாக கையாளாதது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது, பட்டாசுகளை பாதுகாப்பின்றி விதிகளை மீறி வைத்திருந்தது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

    • விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கடந்த 7-ந்தேதி, நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 14 இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (17) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கர்நாடக மாநிலம் முல்பாகலை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்ற வாலிபரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, பட்டாசு கடை தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.

    • தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
    • புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிவகாசி, விருதுநகர், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாகங்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் ஒன்று சேர்த்து பின்னர் அவர்கள் யார்? யார்? என அடையாளம் கண்டனர்.

    தொடர்ந்து காயம் அடைந்த 13 பேரில் 7 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியிலும், 6 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடி பொருட்களை வைத்து இருந்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில மாதங்களாக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு வேகமாக வேலை நடைபெற்று வந்த நிலையில், இவர்களுக்கு அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என தெரியாமல் அமோனியம் பாஸ்பேட் இருந்த பெட்டியை வேகமாக இழுத்ததாக தெரிகிறது. அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு வேலை செய்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரும் உறுதி செய்துள்ளார். மேலும் இங்கு பாதுகாப்பு இல்லாமல் குப்பைகளை போல வெடி மருந்துகளை குவித்து வைத்திருந்ததும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும்.
    • விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில ஆர்ச் அருகில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி,10 பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. கடந்த 7-ந் தேதி மாலை, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நடந்த பயங்கர தீ விபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடி விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த வழக்கை சி.ஐ.டி. பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று அவர் அறிவித்தார்.

    அதன்படி கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்தனர். அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, டூவீலர்கள் மற்றும்கட்டிட சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் கூறியதாவது:-

    அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும். இங்கு எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசின் 25 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதில் எதையும் இங்கு கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடத்தில் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள் வைத்திருக்க வேண்டும்.

    தீ தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். அவசர கால வழிகள் இருக்க வேண்டும். இதில் எதுவும் இந்த பட்டாசு கடையில் இல்லை. காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என்று பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
    • அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

    பொதுவாக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து நடந்தால் தீ வேகமாக பரவுவதாலும், வெடிகள் வெடிப்பதாலும் அருகில் சென்று தீயை அணைப்பது சிரமமானதாகும். இதனால் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. பட்டாசு ஆலைகளை இயக்குவதற்கு அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படாததாலும் விபத்துகள் நிகழுகின்றன.

    கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

    ×