search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishing Prohibition Period"

    • விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
    • கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது.

    ராயபுரம்:

    தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்வதில்லை. குறைந்த தூரத்தில் மட்டும் பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளது. பெரிய வகை மீன்கள் வருவதில்லை. இதனால் மீன்விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. வார இறுதி நாளான நேற்று காசிமேட்டில் மீன்விலை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.1400 வரையும், வவ்வால் மீன் ரூ. 750 வரையும் விற்கப்பட்டன. இதேபோல் சிறியவகை மீன்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. பெரியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வரவில்லை. எனினும் விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.

    கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரத்தில் ரூ.260 விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்து இருக்கிறது.

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை விபரம் வருமாறு:-

    வஞ்சரம் - ரூ.1400

    சங்கரா - ரூ.400

    வவ்வால் - ரூ.750

    கொடுவா - ரூ.600

    நண்டு - ரூ.350

    காணங்கத்தை - ரூ.200

    ஷீலா - ரூ.500

    இறால் - ரூ.400.

    மீன்விலை உயர்வு குறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகாலம் அடுத்தமாதம் 14-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்து அதிக அளவில் மீன்கள் வரும். தற்போது மழை எச்சரிக்கையால் அங்கும் மீன்பிடிப்பது பாதிக்கப்பட்டு உள்ளதால் மீன்கள் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் மீன்விலை உயர்ந்து உள்ளது. மீன்பிடி தடைகாலம் முடியும் வரை விலை உயர்வு இருக்கும் என்றார். 

    • 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
    • 22 பேரை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த வாரம் முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். 58 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் கடலுக்கு செல்லும் தங்களுக்கு அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    நேற்று முன்தினம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற விசைப்படகு நெடுந்தீவு அருகே பழுதாகி நடுக்கடலில் நின்றது. உதவிக்கு கூட யாரும் இல்லாமலும், படகை செலுத்த முடியாமல் அவர்கள் தவித்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தத்தளித்த படகில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைப்பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். படகு பழுதானதால் அவர்களை கோர்ட்டு விடுதலை செய்து படகையும் திரும்ப ஒப்படைத்தது.

    இந்நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவமாக இன்று அதிகாலை மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 121 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. அதில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை நெடுந்தீவு பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்திய எல்லைக்குள் மீன்பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாக கூறி தாக்குதல் நடத்துவார்களே என்று கருதி கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனாலும் 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற காளிமுத்து (45), அர்ச்சுணன் (50), குமார் (42), குருமூர்த்தி (27), அருண் (22), தமிழரசன், பாஸ்கர், அமரன், ஜெகநாதன், ரவீந்திரன், லோகநாதன், வைத்திநாதன், அருள்நாதன், குமரேசன் மற்றும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த படகில் இருந்த மீனவர்கள் உள்பட மொத் தம் 22 பேரை கைது செய்தனர்.

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறிய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    தாங்கள் எல்லை தாண்டி வரவில்லை என்று கூறிய மீனவர்களின் விளக்கத்தை கூட ஏற்க மறுத்த சிங்கள கடற்படையினர் 22 பேரையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்களின் 4 விசைப்படகுகளையும் இழுத்து சென்றனர்.

    இன்று காலை இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் அறிந்த சக மீனவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். 58 நாட்கள் வாழ்வாதாரம் இழந்து, ஆங்காங்கே கடன் வாங்கி படகுகள், வலைகளை பழுதுபார்த்து கடலுக்கு சென்றால் இப்படி இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுகிறார்களே என்று கொந்தளித்தனர்.

    காலங்காலமாய் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப் படாததால் மீனவர்கள் மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    உடனடியாக தாமதிக்காமல் சிறைபிடிக்கப் பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×