என் மலர்
நீங்கள் தேடியது "flood littoral"
நிலக்கோட்டை:
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 67 அடி வரை தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகம் மூலம் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
68 அடியை நெருங்கியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் விரைவில் 68 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட விளாம்பட்டி, சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி, போடியகவுண்பட்டி, குல்லிசெட்டிபட்டி, எஸ்.வாடிப்பட்டி, நடக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலமும் ஆட்டோவில் மைக் செட் வைத்தும் எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு வருகிறது.
தாசில்தார் நவநீத கிருஷ்ணன் தலைமையில் ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரையோரப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டால் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மணல் மூடைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு எண் 0451-1077, மற்றும் நிலக்கோட்டை தாசில்தார் அலுவலக எண் 04543- 233631 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ள நீர் செல்லும்போது அதில் இறங்கவோ, குளிக்கவோ, கரையோரத்தில் செல்பி எடுக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #VaigaiDam