search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food in Hotel"

    • மதுரை: ஓட்டல்-பேக்கரிகளில் உணவு பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
    • உணவுத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்ளவதில்லை.

    மதுரை

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதுரை இடம் பிடித்துள்ளது. தென்மாவட்டங்களின் தலைநகர்போல் மதுரை கருதப்படுகிறது. தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மதுரைக்கு வந்து செல்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ராமேசுவரம் உள்பட பல்வேறு புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. அங்கு சென்று தரிசனம் செய்ய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரையில் செயல்பட்டு வரும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அரிசிக்கு ஜி.எஸ்.டி. விதித்த பின்னர் தங்கள் இஷ்டத்துக்கு அவர்களே நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். ஒரு இட்லி ரூ.10 முதல் 16 வரை விற்பனை செய்யப்படுகிறது. காபி, டீ வகைள் ரூ.14 வரை விற்கப்படுகிறது. சாப்பாடு ரூ.90 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் அளவும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் குடும்பத்துடன் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஓட்டல்களில் சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பார்சல் வாங்கி சென்றால் அதற்கும் தனி கட்டணம் வசூலிக்கின்றனர்.

    பெரும்பாலானோர் சாலையோர கடை களுக்கு சென்று சாப்பிடுகின்றனர். அங்கு தரமற்ற அரிசி மற்றும் எண்ணையை பயன்படுத்தி சமைத்து கொடுகின்றனர். அங்கும் ஓட்டல்களுக்கு நிகராக விலை உள்ளது. வெளியூர் பயணிகளுக்கு ஒரு விலை கூறுகின்றனர்.

    கண்டு கொள்ளாத அதிகாரிகள்

    ஓட்டல்களில் விலை உயர்வு செய்வதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். அவர்கள் இஷ்டத்துக்கு விலையை நிர்ணயம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இதனால் பலர் பட்டினி கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. உணவுத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்ளவதில்லை.

    இதேபோல் பேக்கரி மற்றும் சுவீட்ஸ் ஸ்டால்களிலும் அவ்வப்போது விலையை உயர்த்தி விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட பப்ஸ் தற்போது ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில இனிப்பு வகைகள் கிலோ ரூ.ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் கிலோ ரூ.200 விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை பிரபல கடைகளில் ரூ.600-க்கு மேல் விற்பனை செய்கின்றனர்.

    அபராதம்

    இதற்கான அனுமதியை யார் கொடுத்தது என்பது தெரியவில்லை. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு ஓட்டல்களின் தரத்துக்கு ஏற்ப உணவுகளின் விலையை நிர்ணயம் செய்து அதன் அளவையும் அதிகரிக்க செய்து விலை பட்டியல் வைக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு விலை பட்டியல் வைக்காத ஓட்டல், பேக்கரி, சுவீட்ஸ் ஸ்டால் ஆகியவைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் உணவு பொருட்களின் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறும்போது, மதுரையில் சாதாரண ஓட்டல்களிலும் உணவு பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. 3 நேரம் சாப்பிட வேண்டும் என்றால் ரூ.300 தேவைப்படுகிறது. இது கூலி தொழிலாளர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே இதில் உயர் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×