என் மலர்
நீங்கள் தேடியது "Fuel shortage"
- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு :
இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டது. இதனல், அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. அத்துடன், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்துக்கிடந்ததால், கிட்டத்தட்ட 20 பேர் சோர்வு காரணமாக இறந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை தலா 20 ரூபாய் நேற்று குறைத்தது, கடந்த பிப்ரவரி முதல், ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது.
அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நேற்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மே மாத இறுதியில் ரூ.50 மற்றும் 60 ஆக உயர்த்தப்பட்டது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு .50 உயர்ந்துரூ.470க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்குரூ.100 உயர்ந்து ரூ.550க்கும், சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து ரூ 520க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அன்னிய செலாவணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
- நேற்று முதல் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்து உள்ளது.
கொழும்பு :
இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னிய செலாவணி இல்லாததால் புதிதாக எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க முடியவில்லை.
அத்துடன் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்காக 800 மில்லியன் டாலர் அளவுக்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. அத்துடன் இறக்குமதி ஆர்டர் கொடுக்கப்பட்ட எரிபொருளுக்காக 587 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார். பணத்தை தேடுவது ஒரு சவாலாக இருப்பதாக கூறிய அவர், அது மிகப்பெரும் சவாலாக உருவெடுத்து இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 40 ஆயிரம் டன் டீசலுடன் முதல் கப்பல் வருகிற 8-ந்தேதி இலங்கை வந்து சேரும் என அவர் கூறினார். அத்துடன் பெட்ரோல் கப்பல் ஒன்று 22-ந்தேதி வருவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு பெட்ரோல்-டீசல் வழங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து கடனுக்கு வழங்குவதற்கு தயாராக இல்லை. எனவே அன்னிய செலாவணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
இப்படி எரிபொருள் இறக்குமதிக்காக அன்னிய செலாவணி அதிக அளவு தேவைப்படுவதால் அதை ஈட்டுவது குறித்து அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரு பகுதியாக வெளிநாடுவாழ் இலங்கை மக்களிடம் மீண்டும் உதவிகளை கேட்டு உள்ளது. அந்தவகையில் தாயகத்தில் உள்ள தங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள், அந்த பணத்தை வங்கிகள் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.
சுமார் 20 லட்சம் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதாக கூறிய மந்திரி விஜேசேகரா, அவர்கள் முறைசாரா நிறுவனங்கள் மூலம் பணத்தை அனுப்பாமல், வங்கிகள் மூலமாக அனுப்பி அரசுக்கு உதவ வேண்டும் என அறிவுறுத்தினார். பெட்ரோல்-டீசல் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் பல துறைகள் முடங்கி உள்ளன. குறிப்பாக பள்ளிகள் மேலும் ஒரு வாரத்துக்கு அதாவது வருகிற 8-ந்தேதி வரை மூடப்பட்டு உள்ளன.
மேலும் நேற்று முதல் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்து உள்ளது. இலங்கையில் நீடித்து வரும் இந்த மின்வெட்டு காரணமாக தொழில்துறை முடங்கி பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுவதால் தனியார் வாகன ஓட்டிகள் பெட்ரோல்-டீசல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அவர்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. குருணகேலா மாவட்டத்தில் இவ்வாறு எரிபொருளுக்காக காத்திருந்த ஓட்டுனர் ஒருவரை ராணுவ அதிகாரி ஒருவர் கடுமையாக உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த ராணுவ அதிகாரி மீது விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் விமான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக, இலங்கைக்கான இருக்கை எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் குறைத்து விட்டன. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் 53 சதவீத அளவுக்கு இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால், ஏற்கனவே தள்ளாடி வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.
- 6-ந்தேதி அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம், விவாதமின்றி நிறைவேற்றப்படுகிறது.
- இலங்கையில் பள்ளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொழும்பு :
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாங்க முடியவில்லை. இதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் இலங்கை மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. அதை தவிர்க்க பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அவசியம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களை இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் பல எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது. இந்தநிலையில், எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையால், இலங்கை பாராளுமன்றத்தின் அலுவலக நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம், 3 நாட்கள் மட்டும் பாராளுமன்றம் செயல்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. வருகிற 6-ந்தேதி, அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம், விவாதமின்றி நிறைவேற்றப்படுகிறது. அதே நாளில், தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஆகஸ்டு மாதம் வரை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை ரூ.885 கோடி செலுத்த வேண்டி இருப்பதாக இலங்கை மின்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) முதல் பல்வேறு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அந்த பணத்தை தர வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தநிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், இலங்கையில் பள்ளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. அரசு பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஆகியவற்றுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இதனால் வீணாகும் பள்ளி நேரம், அடுத்த கோடை விடுமுறை காலத்தில் ஈடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- எரிபொருள் நெருக்கடி, இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- அத்தியாவசிய தேவைக்கு கூட எரிபொருள் கிடைப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொழும்பு :
இலங்கையில் எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. ஆனால் அத்தியாவசிய தேவைக்கு கூட எரிபொருள் கிடைப்பது இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொழும்புவில் அதிபர் அலுவலகம் முன்பு ஆசிரியர்களும், மருத்துவ பணியாளர்களும் போராட்டம் நடத்தினர். இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் நாடே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களும், மருத்துவ ஊழியர்களும் அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தினர்.
கொழும்பு இலங்கை தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஜெயந்தா பந்தாரா பேசுகையில், நாட்டின் சுகாதாரத்துறை 90 சதவீதம் முடங்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழக்கும் சோகம் ஏற்படுவதாக மருத்துவமனை பணியாளர் குற்றம் சாட்டினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை அரசால், நாட்டை முடக்கத்தான் முடியும் என ஆதங்கத்தை தெரிவித்தார். அரசு, பொதுப்போக்குவரத்து இயங்கும் என கூறப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பல இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கெனவே உணவுப்பற்றாக்குறை நிலவும் சூழலில், இப்போதைய எரிபொருள் நெருக்கடி, இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- ஜுலை 10-ம் தேதி வரை நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது.
கொழும்பு :
அன்னியச் செலாவணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை தவித்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இலங்கையில் ஜூலை 10-ம்தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் ஜுலை மாதம் 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் ஜுலை 10-ம் தேதி வரை நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும் ஏனைய அனைத்து சேவைகளும் முடக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இலங்கையில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
கொழும்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்கு மாகாணத்தின் அங்குருவடோட்டாவில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையம் ஒன்றில் 63 வயதான லாரி டிரைவர் ஒருவர் கடந்த 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்தார். அவர் நேற்று தனது வாகனத்திலேயே இறந்து கிடந்தார்.
நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இவரையும் சேர்த்து எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இவ்வாறு எரிபொருள் நிரப்பும் மையங்களில் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப்பலிகளால் இலங்கையில் பெரும் சோகம் நிலவுகிறது.
- பலம்வாய்ந்த நாடுகள், இலங்கையில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
- இந்தியாவுடன் நமக்கு கலாசார தொடர்பு உள்ளது.
கொழும்பு :
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில், இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது, பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசா, ''பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால் நாடாளுமன்றத்தில் நேரத்தை செலவிடுவது வீண்வேலை. கூட்டத்தொடரை புறக்கணிக்க போகிறோம்'' என்று கூறினார்.
ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமார திசநாயகேவும் அதே அறிவிப்பை வெளியிட்டார். அதையடுத்து, அவை முன்னவர் தினேஷ் குணவர்த்தனே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்றத்தின் பணி நாட்கள் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த வாரம் 4 நாட்கள் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றம், 21 மற்றும் 22-ந் தேதிகளில் மட்டும் நடைபெறும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, இலங்கை மக்களின் உடனடி தேவைக்காக அமெரிக்கா மேலும் 57.50 லட்சம் டாலர் (ரூ.44 கோடி) நிதி உதவி அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரம் இதை அறிவித்துள்ளது.
இந்த நிதி உதவி கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்றடைய விரும்புவதாக தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய உள்துறை மந்திரி கிளாரே ஓ நீல், இலங்கைக்கு வந்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து பேசினார். இலங்கையின் அவசர உணவு, சுகாதார தேவைகளுக்காக ஆஸ்திரேலியா 5 கோடி டாலர் (ரூ.375 கோடி) நிதி உதவி அளிக்கும் என்று அவர் அறிவித்தார்.
இதற்கிடையே, இலங்கையின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே அளித்த பேட்டி வருமாறு:- இலங்கை சிறிய நாடு. பலம்வாய்ந்த நாடுகள், இலங்கையில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவுடன் மட்டும் நாம் அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக இணைந்து செயல்படலாம் என்பது எங்கள் கருத்து.
இந்தியாவை புறக்கணிக்கக்கூடிய எந்த அரசியல், பொருளாதார செயல்திட்டத்தையும் இலங்கை கடைபிடிக்கக்கூடாது. இந்தியாவுடன் நமக்கு கலாசார தொடர்பு உள்ளது. இந்திய சந்தைகளில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் நாம் நுழைவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் என்று அவர் கூறினார்.
- நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு பொது போக்குவரத்தையும் கடுமையாக பாதித்து இருக்கிறது.
கொழும்பு :
இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்ததால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் அரசு தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல்-டீசல் அனுப்பி வருகின்றன. ஆனாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது.
அங்கு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு காத்திருப்போர் அவ்வப்போது உயிரிழக்கும் சூழலும் நிலவுகிறது. அந்தவகையில் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதியான பனதுராவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக 53 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்தார்.
நீண்ட நேரமாக காத்திருந்த அவர் நேற்று காலையில் ஆட்டோவிலேயே சுருண்டு விழுந்து பலியானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. முன்னதாக கொழும்புவின் புகோடா பகுதியில் உள்ள சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்றுமுன்தினம் காத்திருந்த 64 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கொழும்புவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கு இந்த ஆண்டு தொடக்கம் முதலே இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பல மாதங்களாக நீடித்து வரும் இந்த எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணாத அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு பொது போக்குவரத்தையும் கடுமையாக பாதித்து இருக்கிறது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்துக்கழகம் அறிவித்து இருக்கிறது.
இதைப்போல அன்னிய செலாவணி பற்றாக்குறையால் ரெயில் என்ஜின்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்கு பணம் இல்லாததால், விரைவில் ரெயில் சேவையும் பாதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து, சமையல் கியாஸ் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி தீப்பெட்டிகளுக்கு கூட இலங்கையில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.