search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaja cyclone damaged"

    கஜா புயல் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 75 அடி உயர டவரில் ஏறி வேதாரண்யம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் கரையை கடந்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் மீனவர் கிராமங்களில் வீடுகள் சேதமானதுடன், மீன்பிடி படகுகளும் உடைந்து சேதமானது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 75 நாட்களுக்கும் மேலாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    புயலில் சேதமான படகுகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்தது. ஆனால் மீனவர்களுக்கு சேதமான படகுகளுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகை இன்னும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் புதிய படகுகள் வாங்கி கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகின்றனர்.

    மீனவர்கள் அதிகாரிகளிடம் நிவாரணம் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று காலை 9 மணியளவில் அங்குள்ள திசைக்காட்டும் கருவிக்கு அமைக்கப்பட்டுள்ள 75 அடி உயர டவரில் ஏறி தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். புதிய படகுகள் வாங்க உதவித்தொகை வழங்க வேண்டும். இல்லையேல் டவரில் இருந்துகுதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

    இதுபற்றிய தகவல் பரவியதும் அங்கு ஏராளனமான மீனவர்கள் குவிந்தனர். அவர்களும் போராட்டம் நடத்திய மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் தீயணைப்பு துறையினர், கடலோர காவல் குழுமத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஆறுக்காட்டுத் துறை மீனவர் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.  #GajaCyclone
    கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர 1¼ லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். #GajaCyclone
    சென்னை:

    வறுமை ஒழிப்பு, வேலை செய்யும் உரிமை, பெண்களுக்கு சமத்துவ உரிமை ஆகிய ஊரக மேம்பாட்டு அம்சங்களுக்கு அடித்தளமிட்ட திட்டமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமைந்துள்ளது. மத்திய அரசில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது இந்தத் திட்டம் தமிழகத்தில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி அமலுக்கு வந்தது. முதலில் 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக (சென்னை தவிர) 31 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் நிதிப் பங்களிப்பு செய்கின்றன.

    இந்த திட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 100 நாட்களுக்கு ஒருவர் வேலை பெற முடியும். பணியாற்றி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். திட்டத்தின் தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஊதியம் ரூ.80 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிறகு 2009-10-ம் ஆண்டில் ரூ.100 என்று உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.224ஐ எட்டியுள்ளது. இந்த ஊதியத் தொகை, பணியாளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். 18 வயதைக் கடந்த எவரும் இந்தத் திட்டத்தில் இணைய தகுதி உடையவராவர்.

    தமிழகத்தில் இந்தத் திட்டம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஊரகப் பகுதிகளில் வீட்டுக்கு உள்ளேயே கட்டுப்பட்டுக் கிடந்த பெண்களில் 84.78 சதவீதம் பேர் இன்று இந்த திட்டத்தின் கீழ் வேலையும் ஊதியமும் பெறுகின்றனர். ஆணும், பெண்ணும் பணிக்குச் சென்று ஊதியம் பெறுவதால், சமூக, பொருளாதார ரீதியில் அந்தக் குடும்பம் முன்னேற்றமடைவதோடு, ஊரகப் பகுதியும் மேம்பாட்டை நோக்கிச் செல்கிறது.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 153 வகையான பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 100 இயற்கை வள மேலாண்மைப் பணிகளாகும். இந்த 100 பணிகளில் 71 சம்பந்தப்பட்ட பணிகள், நீர் தொடர்புடையவை ஆகும்.

    சாதாரண காலகட்டங்களில் 100 நாட்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் 150 நாட்கள் வரை வேலை நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2018-2019-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 131 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 80.74 லட்சம் பேர் பெண்கள். பதிவு செய்தவர்களில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 87.40 லட்சமாகும். அவர்களில் 67.75 லட்சம் பேர் பெண்கள்; 24.84 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்; 1.25 லட்சம் பேர் பழங்குடியினராகும்.

    இந்தத் திட்டத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 4.07 லட்சம் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் பணிகள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்தத் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.3,803.74 கோடி நிதியை மத்திய அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. கட்டுமானப் பொருள் செலவீனம் மற்றும் திறன் சார்ந்த தொழிலாளர்களின் ஊதியமாக ஒதுக்கப்பட்ட ரூ.842.89 கோடி தொகையில் 25 சதவீதத்தை தமிழக அரசு தனது பங்காக அளிக்கிறது.

    இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உடனே வழங்கும் மாநிலங்களில் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. 15 நாட்களுக்குள் 99.19 சதவீதம் ஊதியம் வழங்கி அதற்கான விருதை தமிழக அரசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் சில மாவட்டங்களை கஜா புயல் கடுமையாகத் தாக்கியதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் அதிகம் நம்பியிருந்த தென்னை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு விவசாயத் தொழில் அழிந்துவிட்டது. பயிர்சேதம் அதிக அளவில் ஏற்பட்டு, விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

    கோப்புப்படம்

    இருந்த வேலையை இழந்து, வருமானத்துக்கு வழியில்லாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றுதான் உடனே கைகொடுக்கும் திட்டம் என்பதால் அவர்கள் பலரும் இந்த மாவட்டங்களில் வேலை கேட்டு பெயர்ப் பதிவு செய்தனர்.

    இந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கு பதிவு செய்து, பணியாற்றுவோரின் எண்ணிக்கை தற்போது அதிக அளவில் உயர்ந்திருக்கிறது. அதன்படி சாதாரணமாக நாளொன்றுக்கு 37 ஆயிரத்து 932 பேர் பணியாற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரத்து 68 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 55 ஆயிரம் பேரும்; 12 ஆயிரத்து 76 பேர் பணியாற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கூடுதலாக 35 ஆயிரத்து 924 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 48 ஆயிரம் பேரும்; 15 ஆயிரத்து 323 பேர் பணியாற்றும் நாகை மாவட்டத்தில் கூடுதலாக 42 ஆயிரத்து 677 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 58 ஆயிரம் பேரும்; 42 ஆயிரத்து 141 பேர் பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 ஆயிரத்து 859 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 74 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில் கூடுதலாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவர்கள் அனைவரும் சாய்ந்து கிடக்கும் மரங்களை அறுத்தல், வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், குப்பைகளை அகற்றுதல், சாலைகள் சீரமைப்பு, சேதமடைந்த அரசு கட்டிடங்கள் சீரமைப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கூடுதல் நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக முடிவு செய்துள்ளது. #GajaCyclone
    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரண நிதி இன்று செலுத்தப்படும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் காரைக்காலில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மழைக்கால நிதியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. அத்துடன் சேர்த்து மேலும் ரூ.2,500 வழங்கப்படும். நிவாரண உதவியாக 9,500 விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், முழுமையாக பாதிக்கப்பட்ட 1,500 குடிசைகளுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும். இந்த நிவாரண தொகை இன்று (திங்கட்கிழமை) பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். நான் டெல்லி சென்று உள்துறை செயலாளர், மத்திய மந்திரி அருண்ஜெட்லியிடம் புயல் நிவாரணத்துக்கு ரூ.187 கோடி கேட்டுள்ளேன். மத்தியக்குழு அறிக்கை அளித்தபின் வழங்குவதாக கூறியுள்ளனர்.

    காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழு இன்று பார்வையிடுகிறது. ஆய்வை முடித்து நாளை (செவ்வாய்க்கிழமை) புதுவை தலைமைச் செயலகத்தில் எங்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.  #GajaCyclone #Narayanasamy
    மன்னார்குடி அருகே இன்று காலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காரை மறித்து பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Gajacyclone #PonRadhakrishnan
    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உணவு, மின்சாரம், குடிநீர் இல்லாமல் கடந்த 8 நாட்களாக கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் சாலை மார்க்கமாக வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளின் காரை வழிமறித்து வாக்குவாதம் செய்தும் வருகின்றனர். கோபத்தில் உச்சத்தில் இருந்து வரும் மக்களை சமாதானப்படுத்த முடியாமல் அதிகாரிகளும் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 33-வது வார்டு பகுதிக்கு இன்று வரை மின்சாரம் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த மின்வாரிய ஊழியர்களிடம் நெடுவாக்கோட்டையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை கொண்டு வந்து உடனடியாக எடுக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரில் சென்றார். புயலால் சேதமான வேதாரண்யம் பகுதிகளை பார்வையிடுவதற்காக அவர் காரில் சென்றார்.

    பொன்.ராதாகிருஷ்ணன் வந்த காரை பொதுமக்கள் திடீரென மறித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    உடனே பொன்.ராதா கிருஷ்ணன் காரை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பொதுமக்கள், ‘‘எங்களுக்கு மின் கம்பங்கள் கொடுக்கும் வரை நாங்கள் யார் காரை விடமாட்டோம் என சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே பொதுமக்களை சமாதானப்படுத்திய பொன். ராதாகிருஷ்ணன் மின்கம்பங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை ஏற்று மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் வேதாரண்யத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். #Gajacyclone #BJP #PonRadhakrishnan
    ×