என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garudasevai"

    • விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் “பெரிய திருவடி” என்று அழைக்கப்படுகிறார்.
    • கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன்.

    மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் "பெரிய திருவடி" என்று அழைக்கப்படுகிறார்.

    இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.

    ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார்.

    இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும்.

    பெருமாள் கோவில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம் பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.

    பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, "வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்" என்று வரமளித்தார்.

    கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன்.

    வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.

    கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

    • 108 திவ்யதேச திருத்தலங்களில் 17-வது தலம்.
    • மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார்.

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரி ராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைணவத்தலங்களில் திவ்யதேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. காளமேகப்புலவர் ஒரு நயமான பாடலை பாடியிருக்கிறார்.

    ``கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்

    உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே

    உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்

    என் பிறப்போ எண்ணத் தொலையாது''

    இத்திருத்தலத்துப் பெருமாள் மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார். இந்த கண்ணபுரத்தானைப் பெரியாழ்வார், குலசேகரர், மங்கை மன்னன், நம்மாழ்வார் நால்வரும் மங்களா சாசனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பாடிய பாடல்கள் 128 என்றால், அதில் 104 பாடல்கள் திருமங்கை மன்னன் பாடியவை. கலியனான திருமங்கை மன்னனுக்கு இக்கண்ணபுரத்து அம்மானிடம் உள்ள ஈடுபாடு எழுத்தில் அடங்காது. மாசிமக விழாவில் இன்று கருடசேவை.

    • வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
    • விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. வழக்கமாக தை மற்றும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்தநிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர தரிசனமும், 6 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த கருடசேவையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, பூந்தமல்லி, ஊத்து க்கோட்டை, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 21-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லாக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    • கருடசேவை உற்சவம் விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
    • 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அணிவகுத்து வந்தன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருநாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த கோவில்கள் 108 திவ்ய தேச தலங்களாக விளங்குகிறது.

    ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கோவில்களில் இருந்தும் பெருமாள்கள் திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை உற்சவம் நேற்று காலை தொடங்கி விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.

    இதனை யொட்டி நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த கருடசேவையில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பெருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அலங்கரித்தவாறு அணிவகுத்து வந்தன.

    அப்போது கிராமமக்கள் 11 பெருமாள்களுக்கும், பட்டு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்று நண்பகல் முதல் மணிமாடக் கோவில் மண்டபத்தின் முன்பு அனைத்து பெருமாள்களும் எழுந்தருளினர்.

    முன்னதாக நாராயணப் பெருமாள் எதாஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி, மணிமாடக் கோவிலுக்கு வந்த பெருமாள்களை எதிர்கொண்டு அழைக்கும் 'எதிர்சேவை நிகழ்ச்சி' வெகு விமரிசையாக நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பெருமாள்கள் குறித்த பாடல்களை பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்களால் பாடப்பெற்று திருப்பாவை, மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது.

    பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் தங்க கருட வாகனத்தில் வெண்பட்டு குடைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் நாராயணப் பெருமாள் கோவில் வாயில் முன்பு எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த தங்க கருடசேவை நிகழ்ச்சியை காண மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அலை, அலையாக திரண்டு கோவிந்தா.. கோவிந்தா... கோஷம் முழங்க மனமுருகி வழிபட்டனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்த 11 பெருமாள்களும் நாராயணன் பெருமாள் வீதி, வைகுந்தநாதர் வீதி, கீழ வீதி, நாராயண பெருமாள் தெற்கு வீதி ஆகிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் விடிய, விடிய திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இரவு முழுவரும் நடைபெற்ற நிகழ்ச்சியால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும், நாங்கூர் ஊராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    ×