என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goldchariot"

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா ஆகும்.
    • விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் பல்வேறு இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளது

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா ஆகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தங்கத்தேரில் வீதிஉலா

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி அங்க பிரதட்சணம் செய்தும் விரதத்தை தொடங்கினர்.

    நேற்று இரவு 7 மணி அளவில் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் திரு வாடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தங்கத்ேதரில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    அரோகரா கோஷம்

    தங்கத்தேரில் ஏற்பட்ட சில பழுது காரணமாக கடந்த 7 மாதமாக கிரி வீதி யில் உலாவருவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தங்கத்தேர் சரிசெய்யப்பட்டு நேற்று இரவு கிரி வீதியில் உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க சாமி தரிசனம் செய்தனர்.

    2-ம் நாள்

    2-ம் நாள் விழாவான இன்று அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30மணிக்கு விஸ்வரூபம், 4மணிக்கு உதய மார்த்தான்ட அபி ஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.மாலை 3.30மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் பல்வேறு இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளது. 66 இடங்களில் குடிதண்ணீர் வசதி, 320 இடங்களில் தற்காலிக கழிப்பிடம் வசதி, 19 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

    6 இடங்களில் அகன்ற திரை மூலம் கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தினமும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கந்த சஷ்டி திரு விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் விரதம் இருந்து வருகின்றனர். 

    ×