என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google"

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு ஒருவழியாக 5ஜி அப்டேட் வெளியாக இருக்கிறது.
    • பிக்சல் ஸ்மார்ட்போன்களில் 5ஜி அப்டேட் முதற்கட்டமாக பீட்டா முறையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்க துவங்கி இருக்கிறது. இதற்கான QPR பீட்டா 2 அப்டேட் ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் வெளியான பிக்சல் ஃபீச்சர் டிராப்-இல் 5ஜி சப்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது இந்த அம்சம் பீட்டாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    முதற்கட்டமாக 5ஜி டெஸ்டிங் செய்யப்பட்டு, பயனர்களிடம் தரம், பயன்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கருத்து கேட்கப்படும் என கூகுள் அறிவித்து இருக்கிறது. டெஸ்டிங்கை தொடர்ந்து ஸ்டேபில் அப்டேட் 2023 முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. பீட்டா அப்டேட் என்பதால், இதில் அதிக பிழைகள் நிறைந்திருக்கும்.

    பீட்டா டெஸ்டிங்கில் பங்கேற்க பிக்சல் 6a, பிக்சல் 7 அல்லது பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் பீட்டா திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆண்ட்ராய்டு 13 பீட்டா திட்டத்தில் இருப்பவர்களுக்கு, சமீபத்திய QPR அப்டேட் கிடைத்திருக்கும்.

    • திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி.
    • அவரின் நினைவாக பி.கே.ரோசி பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி. மலையாளத்தில் ஜே.சி.டேனியல் இயக்கிய 'விகதகுமாரன்' என்ற படத்தில் முதல் கதாநாயகி இவர்தான்.

    இந்த படத்தில் சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அக்காலத்தில் கடும் எதிர்ப்பை அவர் சந்தித்தார். ஏனெனில் அக்காலத்தில் சாதிய ரீதியாக கடும் அடக்குமுறை இருந்தது. பி.கே.ரோசி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அப்படிப்பட்ட ஒரு பெண் நாயர் குடும்ப பெண்ணாக நடிப்பதா? என கேரள மாநிலத்தில் கடும் எதிப்புகள் எழுந்தன.

    இதனால் பி.கே.ரோசி கேசவபிள்ளை என்ற லாரி டிரைவரை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு குடிபெயர்ந்தார். பின்னர் 1988-ம் ஆண்டு அவர் இறந்தார்.

    அவரின் நினைவாக பி.கே.ரோசி பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பெண்களால் நடத்தப்படும் இந்த அமைப்பு, பெண் படைப்பாளிகளையும், பெண் திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியை செய்து வருகிறது.

    மலையான திரையுலகின் முதல் கதாநாயகி பி.கே.ரோசியின் 120-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை வெளியிட்டுள்ளது. "உங்களுடைய தைரியத்துக்கும், விட்டு சென்ற மரபுகளுக்கும் நன்றி பி.கே.ரோசி" என கூகுள் குறிப்பிட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் கூகுள் தனது பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • பிக்சல் 7 ப்ரோ தற்போது அதன் பயனர்களில் சிலரை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்த பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அசத்தலான செயல்திறன் மற்றும் அதீத கேமரா தரம் உள்ளிட்டவை பிக்சல் 7 ப்ரோ மாடலின் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த நிலையில், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் உள்ள வால்யூம் பட்டன் தானாக உடைந்து கீழே விழுவதாக அதன் பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    பிக்சல் 7 ப்ரோ பயன்படுத்துவோரில் சிலர், தங்களின் ஸ்மார்ட்போனில் இருந்த வால்யூம் பட்டன்கள் தானாக கீழே விழுவதாக தெரிவித்து வருகின்றனர். சிலர் பயன்படுத்த துவங்கிய சில வாரங்களிலும், சிலருக்கு பல்வேறு மாதங்கள் பயன்படுத்தி நிலையில், வால்யூம் பட்டன் கீழே விழுவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ரெடிட் தளத்தில் எழுதிய பயனர் ஒருவர், நடைபயிற்சி செய்யும் போது பாக்கெட்டில் வைத்த பிக்சல் 7 ப்ரோ, சிறிது நேரம் கழித்து பாக்கெட்டில் இருந்து எடுத்த போது, அதில் வால்யூம் பட்டன் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

    மற்றொருவர் பிக்சல் 7 ப்ரோ வாங்கிய ஒரு வாரத்தில் அதன் வால்யூம் பட்டன் உடைந்து விட்டது என தெரிவித்து இருக்கிறார். ஆண்ட்ராய்டு செண்ட்ரல் தளத்தை சேர்ந்த நிக் சுட்ரிச் தான் பயன்படுத்தி வந்த பிக்சல் 7 ப்ரோ மாடலில் வால்யூம் பட்டன் கீழே விழும் நிலையில், இருப்பதை கண்டறிந்து இருக்கிறார். பின் இதுபற்றிய தகவலை வலைதளத்தில் எழுத, இந்த விவகாரத்தில் பலர் பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

    பயனர்களில் சிலர், இந்த பிரச்சினையை கூகுள் வாரண்டியில் சரி செய்ய மறுக்கிறது என தெரிவித்து வருகின்றனர். எனினும், சுட்ரிச் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், கூகுள் நிறுவனம் இந்த பிர்ச்சினை குறித்து விழிப்புணர்வு கொண்டிருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் கேலக்ஸி S22 அல்ட்ரா மாடலில் இருக்கும் வால்யூம் ராக்கரை விட பிக்சல் 7 ப்ரோ மாடலில் உள்ள வால்யூம் பட்டன் சற்றே உறுதியானது என கூறப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 7 ப்ரோ இந்திய விலை மற்றும் அம்சங்கள்:

    கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடலின் 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஸ்னோ மற்றும் ஹசெல் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

    6.7 இன்ச் 3120x1440 பிக்சல் LTPO+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    கூகுள் டென்சார் ஜி2 பிராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப்

    12 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு ஆட்டோபோக்கஸ் கேமரா

    48MP டெலிபோட்டோ கேமரா

    10.8MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    வயர்லெஸ் சார்ஜிங்

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஆன்லைன் வலைத்தளங்களில் பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த கேமரா மற்றும் டாப் எண்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களின் விலை பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

    தற்போது பிக்சல் 7 ப்ரோ மாடலுக்கு ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி, எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படும் பிக்சல் 7 ப்ரோ மாடலுக்கு 4 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடியை தொடர்ந்து பிக்சல் 7 ப்ரோ விலை ரூ. 81 ஆயிரத்து 199 என மாறி இருக்கிறது.

     

    தள்ளுபடி மட்டுமின்றி பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு எக்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேன்ஜ் செய்ய வேண்டும்.

    பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அதன்படி பிக்சல் 7 ப்ரோ விலை ரூ. 59 ஆயிரத்து 199 என மாறி விடும். இத்துடன் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    அமேசான் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 420 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக வங்கி சலுகை மட்டும் வழங்கப்படுகிறது.

    பிக்சல் 7 ப்ரோ அப்சிடியன் நிற வேரியண்ட் விலை ரூ. 71 ஆயிரத்து 420 என்றும் ஹசெல் நிற வேரியண்ட் ரூ. 73 ஆயிரத்து 080 என்றும் ஸ்னோ நிற வேரியண்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 250 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
    • பணியில் இருந்து நீக்கப்பட்டவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.

    இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய் வர்கியா என்பவரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கி உள்ளது.

    சிறந்த பணியாளர் என்று விருது வாங்கிய அவரை பணியில் இருந்து கூகுள் நீக்கியது தொடர்பாக, ஹர்ஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நான் ஏன்?" "திறமைக்கு இடம் இல்லையா...?" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
    • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.

    மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.

    • கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் மேஜைகளை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி வருகிறது.
    • சமீபத்தில் கூகுள் நிறுவனம் உலகளவில் சுமார் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    கூகுள் நிறுவனம் நிதி சிக்கலில் சிக்கித் தவிப்பதாக தெரிகிறது. ஊழியர்களிடம் மேஜைகளை சக பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள கூகுள் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனம் காசை மிச்சப்படுத்த முடியும் என சுந்தர் பிச்சை தெரிவித்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 12 ஆயரம் பேரை பணி நீக்கம் செய்த நிலையில், கூகுள் இந்த நடவடிக்கை மூலம் செலவீனங்களை குறைக்க முயற்சிக்கிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஆல்-ஹேண்ட்ஸ் சந்திப்பில் பேசிய சுந்தர் பிச்சை, "என்னை பொருத்தவரை அவர்கள் ஒத்துழைப்பு வழங்கி பணத்தை மிச்சப்படுத்த முயற்சிக்கின்றனர். அதே சமயம் சிலவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பர், எப்போதும் மேஜைகள் காலியாகவே உள்ளது. இதை பார்க்க பேய் நகரம் போன்று காட்சியளிக்கும். இது நல்ல அனுபவம் இல்லை," என்று தெரிவித்து இருக்கிறார்.

     

    சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்காவின் நியூ யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ போன்ற பகுதிகளில் கூகுள் கிளவுட் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களின் சக பணியாளர்களுடன் அலுவலகம் மற்றும் மேஜைகளை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டனர். தற்போது மேஜைகளை பகிர்ந்து கொள்வது கிளவுட் பிரிவுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மற்ற குழுக்களை சேர்ந்தவர்களும் இதனை முயற்சிக்கலாம் என கூகுள் சிஇஒ தெரிவித்து இருக்கிறார்.

    மேஜை பகிர்வதோடு மட்டுமின்றி ஊழியர்கள் செலவீனங்களில் கவனமாக இருக்கவும், தேவையின்றி பணம் மற்றும் பொருட்களை செலவிட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். "நிதி தேவைகளை கையாள்வதில் நாம் சிறப்பாக செயலாற்ற வேண்டும். நமக்கான ரியல் எஸ்டேட் செலவீனங்கள் அதிகம் ஆகும். இவை 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும் எனில், இந்த விஷயத்தில் நாம் சரி செய்வது எப்படி என யோசிக்க வேண்டும்," என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    • கூகுள் நிறுவனம் விரைவில் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • புதிய பிக்சல் டேப்லெட் கூகுள் நிறுவனத்தின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் தனது முதல் டேப்லெட் எப்படி இருக்கும் என்பதை கூகுள் 2022 IO நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போது கூகுள் தனது முதல் பிக்சல் டேப்லெட் 2023 வாக்கில் விற்பனைக்கு வரும் என அறிவித்து இருந்தது. எனினும், சரியான வெளியீட்டு தேதியை அப்போது கூகுள் நிறுவனம் அறிவிக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன் தான், கூகுள் நிறுவனம் 2023 கூகுள் IO நிகழ்வு மே 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் கூகுள் IO நிகழ்வில் கூகுள் தனது முதல் பிக்சல் டேப்லெட்-ஐ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

     

    ஒருவேளை கூகுள் IO நிகழ்வில் அறிவிக்கப்படவில்லை எனில், பிக்சல் டேப்லெட் வெளியீட்டு தேதி இதில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடலில் கூகுள் டென்சார் சிப்செட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 12L அல்லது ஆண்ட்ராய்டு 13L ஒஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த ஆண்ட்ராய்டு ஒஎஸ் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் டேப்லெட் மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் தடிமனான பெசல்கள், தவறுதலாக ஏற்படும் டச்களை தவிர்க்க செய்கிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரில் பிக்சல் டேப்லெட் கிரீன் நிறம் கொண்டிருக்கிறது.

    • கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனை ஒருவர் பொதுவெளியில் பயன்படுத்துவது அம்பலமாகி இருக்கிறது.
    • தோற்றத்தில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் N2 போன்றே காட்சியளிக்கிறது.

    கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பொது வெளியில் ஒருவர் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் IO 2023 நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நியூ யார்க் வீதிகளில் ஒருவர் பயன்படுத்தி வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    புதிய புகைப்படங்களில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் கவர் ஸ்கிரீன், பிளாக் பெசல்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. இதில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கவர் ஸ்கிரீன் மட்டுமே காணப்படுகிறது. ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் இருக்கும் படம் வெளியாகவில்லை. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் N2 போன்றே காட்சியளிக்கிறது.

     

    பிக்சல் ஃபோல்டு லைவ் படங்களில் அதனை பயன்படுத்தி வருபவர் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது பிக்சல் ஃபோல்டு லைவ் படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இதே போன்ற மேலும் சில புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.57 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 5.78 இன்ச் கவர் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், பேக் பேனலில் ரியர் கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய பிக்சல் ஃபோல்டு மாடலில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிராசஸர் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பிக்சல் 7 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்சல் ஃபோல்டு மாடலின் விலை 1800 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Soruce: 91Mobiles

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல்.
    • புதிய பிக்சல் 7a மாடலில் 6.1 இன்ச் FHD+ 90Hz OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a குறைந்த விலை ஸ்மார்ட்போனினை 2023 கூகுள் IO நிகழ்வில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. விரைவில் வெளியீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    புதிய பிக்சல் மிட் ரேன்ஜ் மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 7a மாடலில் 6.1 இன்ச் FHC+ 90Hz OLED டிஸ்ப்ளே, டென்சார் G2 சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

     

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது லென்ஸ், 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 5 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சமீபத்தில் தான் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் IO 2023 நிகழ்வு மே 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தார். இந்த முறை கூகுள் IO நிகழ்வு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மவுண்டெயின் வியூ, கூகுள் தலைமையகத்தின் ஷோர்லைன் ஆம்ஃபிதியேட்டரில் நடைபெற இருக்கிறது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக கூகுள் IO நிகழ்வு பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட இருக்கிறது. நிகழ்வுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் இதனை ஆன்லைனில் நேரலையில் பார்க்க முடியும்.

    Photo Courtesy: @Onleaks

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புதிய பிக்சல் ஃபோல்டு மாடல் மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் IO நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.

    கூகுள் நிறுவனம் தனது சொந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

    பிரபல டிப்ஸ்டரான யோகேஷ் பிரர் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை 1300-இல் தொடங்கி 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 421 முதல் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 947) வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     

    இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 விலையை விட 500 டாலர்கள் வரை குறைவாகவே இருக்கும். கேலக்ஸி Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் சாம்சங் அறிமுகம் செய்த கடைசி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் மிட் ரேன்ஜ் பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை கூகுள் IO 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி வருகிறது. 2023 கூகுள் IO நிகழ்வு இந்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.

    புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் விலை 450 டாலர்களில் துவங்கி 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 188 என துவங்கி அதிகபட்சம் ரூ. 41 ஆயிரத்து 320 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடலின் விலையும் இதேபோன்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Photo Courtesy: How to I Solve | Steve Hemmerstoffer

    • சுவிட்சர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொழிற்சங்க உறுப்பினர்கள், கூகுள் நிறுவனம் பிரச்சினைகளை தவிர்க்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

    இங்கிலாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள், அந்நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் தொடர்பான பிரச்சினைகளை கூகுள் நிறுவனம் தவிர்த்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தின் பாங்ராஸ் சதுரங்க அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

     

    சர்வேதச பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் ஊழியர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    எனினும், இது போன்ற பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருப்பதை கூகுள் உறுதிப்படுத்தி வருகிறது. ஊழியர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. முன்னதாக சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×