என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government fund"

    • ஒன்றிய அரசிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.36,000-ம் கோடி பெறப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கப்படுகிறது.
    • விளாத்திகுளம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் திட்டங்கள் செயல்ப டுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.36,000-ம் கோடி பெறப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கப்படுகிறது. பணி வாரியாக, திட்டங்கள் வாரியாக வரவு- செலவு கணக்குகளை எழுதி வைக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

    மேலும், திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக கோரிக்கை வைத்தால், கூடுதலாக அரசிடமிருந்து பெற்று தரப்படும். ஆனால், இருக்கும் தொகையை முறையாக செலவழிக்க வேண்டும். உங்கள் பணத்தை வைத்து உங்கள் கிராமத்தை மேம்படுத்த வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை சிறந்த முறையில் பயன்படுத்தி ஊராட்சிகளை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குளங்களை தூர்வார கோரிக்கை

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், விளாத்திகுளம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. விளாத்திகுளம் தொகுதியில் 139 ஊராட்சிகள் இருக்கிறது. விளாத்திகுளம் வட்டத்தில் மட்டும் 92 வருவாய் கிராமங்கள் இருக்கிறது. அனைத்து கிராமங்களிலும் பாசன குளங்கள் உள்ளன. இவை சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளங்கள் நூற்றாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது.

    இப்பகுதிகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து அந்த குளங்களை 2 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஏனென்றால் வில்வமரத்துப்பட்டியில் உள்ள 380 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தினை சுமார் 10 அடி ஆழத்திற்கு தூர்வாரினால் ஒரு நீர்த்தேக்கம்போல் மாறி தண்ணீரின் உப்புத்தன்மை நீங்கி அனைவருக்கும் நல்ல குடிநீர் கிடைக்கும். தாமிரபரணி தண்ணீரினை செலவு செய்து கொண்டு வர வேண்டியதில்லை. இங்குள்ள குளங்களை தூர்வாரினாலே போதும் இங்கேயே குடிநீருக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன், என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோட்டாட்சியர் மகாலெட்சுமி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீரபத்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் நடராஜன், மிக்கேல் நவமணி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் முனியசக்தி ராமசந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், ஹெச்.சி.எல். பவுண்டேஷன் வைபவ் சவுக்கான், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்ன பொன்னு, புஷ்பவல்லி, மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×