search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt employees"

    • அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
    • அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும்.

    புதுச்சேரி:

    தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதுபோல் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது.

    இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதி துறை சார்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் மூலம் புதுவை அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.580 முதல் ரூ.6 ஆயிரத்து 800 வரை கிடைக்கும்.

    இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் புதுவை அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும்.

    • ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிய வேண்டாம் என்றும், ஃபார்மல் உடைகளை மட்டுமே ஊழியர்கள் அணிய வேண்டும்.
    • போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் காக்கி சீருடை அணிந்த நிலையில் மற்ற ஊழியர்கள் மாநகராட்சி மற்றும் டெப்போக்களுக்கு சாதாரணமாக வருகின்றனர்.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக எம்.டி.வி.சி.சஜ்ஜனார் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிய வேண்டாம் என்றும், ஃபார்மல் உடைகளை மட்டுமே ஊழியர்கள் அணிய வேண்டும். மேலும், போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் காக்கி சீருடை அணிந்த நிலையில் மற்ற ஊழியர்கள் மாநகராட்சி மற்றும் டெப்போக்களுக்கு சாதாரணமாக வருகின்றனர்.

    இது ஒரு நிறுவனம். பணியிடத்தில் கண்ணியத்தைக் காக்க பணியாளர்கள் முறைப்படி சீருடையில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    • சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
    • அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    சென்னை:

    தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

    இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களின் பணப்பலன்களை அரசு உடனே வழங்க வேண்டும்.
    • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பண பலன்களை வழங்க வேண்டும் என்பதால் அரசு ரூ. 2 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார்கள்.

    அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களின் பணப்பலன்களை அரசு உடனே வழங்க வேண்டும். அந்த வகையில் ஓய்வு பெறும் சுமார் 10ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ரூ.1500 கோடி அளவுக்கு பணம் வழங்க வேண்டும். இதுபோல இந்த ஆண்டில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

    ஏற்கனவே அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பண பலன்களை வழங்க வேண்டும் என்பதால் அரசு ரூ. 2 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வை ஆறு மாதம் காலந்தாழ்த்தி வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

    இந்தச் சூழ்நிலையில், 1.1.2023 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க வேண்டும்.

    ஆனால், இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு 1.4.2023 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மூன்று அகவிலைப்படி உயர்வுகளை ஆறு மாதத்திற்கு தள்ளிப்போட்ட தி.மு.க. அரசு, நான்காவது அகவிலைப்படி உயர்வை மூன்று மாதத்திற்கு தள்ளிப்போட்டு இருக்கிறது. அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்படும் உயர்வு ஆகும். இதனைக் காலந்தாழ்த்தி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி விட்டு, 'நிதிப் பற்றாக்குறை' குறைக்கப்பட்டுவிட்டது, 'வருவாய்ப் பற்றாக்குறை' குறைந்து விட்டது என்று கூறுவது நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு. இது கடும் கண்டனத்திற்குரியது.

    அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே நிலவுகிறது.

    இதனை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

    அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது.
    • கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் இந்த மனுவை விசாரித்தது.

    அப்போது நீதிபதிகள், கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றிக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை.

    இதனை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது. கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது. இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும். எனவே இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    • அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
    • பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், பணி நேரம் முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு சென்று விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தது.

    இதையடுத்து கேரள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த கேரள தலைமை செயலாளர் ஜாய் ஏற்பாடு செய்தார். இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு, முதல் வேலை நாளில் கேரளாவின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என கடந்த வாரமே தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் படி இன்று முதல் கேரளா அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டது.

    இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.

    மேலும் பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு நாளும் இதனை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் இந்த வருகை பதிவு முறை நிதித்துறையின் சம்பள பதிவேடுகளிலும் பதிவாகும் முறையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுபோல அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரவும், வெளியேறவும் அவர்களின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தால் மட்டுமே முடியும். இதனால் இனி அலுவலகங்களுக்கு தாமதமாக வந்தாலோ, அல்லது அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறவோ வாய்ப்பு இல்லை.

    அவ்வாறு வெளியேறினால் அந்த ஊழியரின் விபரங்கள் அவர்களின் சம்பள பட்டியலில் பதிவாகும். இதன்மூலம் ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிலை உருவாகும்.

    தற்போது கேரள அரசின் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்த இந்த முறை இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் குறைவான ஊழியர்களை கொண்டு இயங்கும் அலுவலகங்களில் இந்த முறை அமலுக்கு வரவில்லை.

    மேலும் போலீஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தவில்லை. விரைவில் அங்கும் இம்முறையை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்.
    • 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும்.

    தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

    அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டு உள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்,

    அமைச்சுப் பணியாளர் ஊதிய முரண்பாடுகளைக் களையும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கும் ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்,

    தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி-நகராட்சி பகுதியில் ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பில் பாரபட்ச நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணிநிரந்திரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர், தூய்மைக் காவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் மாரியப்பன், நடராஜன், ஜெயராஜராஜேஸ்வரன், 'டான்சாக்' மனோகரன், பரஞ்ஜோதி, மணிகன்டன், சின்னபொன்னு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை எழிலகம் வளாகத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 300 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கோர்ட்டு மற்றும் அரசின் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    1 வாரமாக நீடித்து வரும் இந்த போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அரசு அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து அரசு ஊழியர்கள் இன்றும் மறியலில் ஈடுபட்டனர்.

    சென்னை எழிலகம் வளாகத்தில் சுமார் 500 பேர் திரண்டனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், அந்தோணிசாமி, பக்தவச்சலம் ஆகியோர் தலைமையில் திரண்டு அரசு ஊழியர்கள் சிறிது நேரம் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி பேசினார்கள்.

    அதன் பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர். எழிலகம் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அரசு ஊழியர்களை சாலையில் அமர விடாமல் தடுத்து மறித்து பஸ்களில் ஏற்றி சென்றனர்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அதிகமானோர் இருந்தாலும் கைது செய்ய முற்பட்டவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பின்பக்கம் வழியாக ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும் போராட்டத்தில் தீவிரம் காட்டிய ஆண்- பெண் ஊழியர்கள் தாமாக முன்வந்து கைதானார்கள். சிலர் தங்களது குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி எழிலகம் வளாகத்தில் இருந்து கைது நடவடிக்கைக்கு பயந்து தப்பி சென்றனர்.

    கைது செய்யப்பட்ட ஊழியர்கள் புதுப்பேட்டை, பெரம்பூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் சாலையில் அமராமல் கைதானார்கள். இதனால் அவர்கள் இன்று மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஓ.), தலைமை செயலக சங்கம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இன்று மாலையில் முடிவு செய்கிறார்கள்.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்து வந்த தலைமை செயலக ஊழியர்கள் இன்று காலை 11 மணி அளவில் தங்கள் பணிகளை விட்டு விட்டு ஒன்று கூடினார்கள். தீவிரம் அடைந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது பற்றி இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று சங்க நிர்வாகிகள் அவர்கள் மத்தியில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை மிரட்டி பணிய வைப்பது ஜனநாயக விரோதம் என்று தினகரன் கூறியுள்ளார். #dinakaran #govtstaff

    திருவண்ணாமலை:

    அ.ம.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கருத்துகணிப்புகள் வந்து உள்ளதாக தெரிகிறது. இதை நாம் நம்புவதில்லை. இவையனைத்தும் கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்திலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் நான் வெற்றி பெற்றேன்.

    ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பின் போராட்டத்தினை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர சர்வாதிகார போக்கில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

    9 அம்ச கோரிக்கைகளில் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யலாம். முடியாதவற்றை பிறகு நிறைவேற்றுவதாக தெரிவிக்கலாம். பேசி தீர்ப்பதை விட்டு விட்டு சர்வாதிகாரி போல் கைது செய்வது தீர்வாகாது. இது ஜனநாயகத்துக்கு நல்லது கிடையாது. இந்த அரசு இதற்கான பின்பலன்களை அனுபவிக்கும்.

    உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்வது இல்லை. குறிப்பாக தமிழகத்தில் அ.ம.மு.க.விற்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

    சில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிக்காக பேசிக்கொண்டு வருகிறேன். அது முழுமையடைந்தவுடன் உங்களுக்கு தெரிவிப்பேன். தொண்டர்கள் 95 சதவிகிதம் பேர் அ.ம.மு.க.விடம் உள்ளனர். ஆட்சி அதிகாரம் அங்கு உள்ளதால் சிலர் ஒட்டிக்கொண்டு உள்ளனர். எலும்பு கூடு மட்டும் தான் அ.தி.மு.க.வில் உள்ளது. ரத்தமும், சதையுமான தொண்டர்கள் எங்களிடத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #govtstaff

    ×