என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Eating"

    • சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும்.
    • குளிர்காலத்தில் உட்கொள்ளும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    குளிர்காலம் தொடங்கிவிட்டாலே நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகிவிடும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும். குளிர்காலத்தில் உடல் சமநிலையை பேணுவதற்கு உட்கொள்ளும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்தவித நோய்களையும் தடுக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய சூப்பர் உணவுகள் இவை...

    இஞ்சி : இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எளிதாக விரட்டலாம். குளிர்ந்த மாதங்களில் எத்தகைய நோயையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் இஞ்சியை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி டீயும் பருகி வரலாம்.

    பாதாம் : பாதாமில் மெக்னீசியம், புரதம், ரிபோப்ளேவின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஈ சத்தும் ஏராளமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். பாதாமை அப்படியே சாப்பிடலாம். தண்ணீரில் ஊற வைத்தும் சுவைக்கலாம். பாதாம் பாலும் பருகி வரலாம்.

    மஞ்சள் :மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பப்பெற்றது. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டது. குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினசரி உணவில் மஞ்சள் இடம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

    துளசி : நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் துளசி இலையில் உள்ளன. சுவாச மண்டலத் துக்கு புத்துயிர் அளிக்கக்கூடியது. நுரையீரலையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தினமும் தவறாமல் துளசி இலைகள் சிறிதளவு உட்கொள்வது நல்லது.

    பூண்டு :இது வைட்டமின் சி, பி, துத்தநாகம் மற்றும் போலேட் போன்ற சத்துக்களின் கலவையாக விளங்குகிறது. மேலும் பூண்டில் ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குளிர்கால நோய் பாதிப்புகளான சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.

    • தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
    • தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது.

    எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தக்காளி. இது அதிக மருத்துவ குணம் நிறைந்தது. தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

    ஊட்டச்சத்து கலவை:

    தக்காளியில், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் பி 9 போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் பைலோகுவினோன் என்றும் அழைக்கப்படும், 'வைட்டமின் கே 1' ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

    எலும்பு ஆரோக்கியம்:

    எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் உணவில் சேர்க்கலாம். வைட்டமின்-கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் வளமான அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

    கண் பார்வை:

    தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குணப்படுத்த முடியாத கோளாறான மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தினமும் தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

    பொலிவான கூந்தல்:

    தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும், இதனால் கூந்தல் அழகாக மாறும்.

    புற்றுநோய்:

    இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்டுகளும் தக்காளியில் உள்ளன. இதனால் புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

    உடல் எடை குறைய:

    தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் தக்காளி பழத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் தக்காளி பழத்தை சாப்பிடலாம்.

    100 கிராம் தக்காளியில்...

    நீர்ச்சத்து- 95 சதவிகிதம்

    புரதச்சத்து- 0.9 கிராம்

    கார்ப்ஸ்- 3.9 கிராம்

    சர்க்கரை- 2.6 கிராம்

    நார்ச்சத்து- 1.2 கிராம்

    கொழுப்பு- 0.2 கிராம்

    மொத்த கலோரிகள்- 18

    • குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள்.
    • குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம்.

    குழந்தைகள் வளர்ச்சியில் பருவகாலநோய்களை தடுப்பது சிரமமானதாக இருந்தாலும் சரியான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொற்றுவராமல் தடுக்கலாம். தற்போது குளிர்காலம் என்பதால் குழந்தைகளுக்கு இயல்பாகவே காய்ச்சல், வைரஸ் தொற்று உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த தொற்றை எதிர்க்கும் வகையில் குளிர்காலத்தில் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான முதன்மையான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

    சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது. அப்படியான பொருள்களில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்துமல்லி விதைகள், சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை. இந்த பொருள்கள் அதிகம் பயன்படுத்தும் உணவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.

    அதிலும் குழந்தைகளுக்கு பால் தரும் போது மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சிட்டிகை கலந்து கொடுக்கலாம். சீரகம்,அன்னாசி சேர்த்த நீரை கொடுக்கலாம். பூண்டை பாலில் வேகவைத்து கொடுக்கலாம். கஷாயத்தில் இஞ்சி சேர்த்துகொடுக்கலாம். இவை எல்லாமே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டவை.

    குழந்தைகளுக்கு பழங்கள் நன்மை செய்யும். ஆனால் பல பெற்றோர்கள் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் குளுமையை உண்டாக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை.

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடுஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இது உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. .

    உடல் ஆரோக்கியமும் அதிக ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் நிறைந்தவை கொட்டைகள். அம்மாக்கள் குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கு பிறகு கொட்டைகளை தவிர்க்காமல் கொடுப்பார்கள். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை போராடுவதற்கான ஆற்றலை கொடுக்கும்.

    அம்மாக்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை இதை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெரும்பாலும் இதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் தினசரி கொட்டைகளில் இரண்டையாவது கொடுக்க முயற்சியுங்கள். பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.

    கொட்டைகள் போன்று விதைகளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். விதைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பெறமுடியும். ஒரே விதமான விதைகளாக இல்லாமல் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கலந்து கொடுக்கலாம். இதை சாலட் வகையில், சிற்றுண்டியின் போது அப்படியே கொடுக்கலாம்.

    முட்டை, கோழி இறைச்சி என இரண்டுமே புரதத்தின் நிறைந்த மூலமாக இருக்கும். வைட்டமின் டி இயற்கையாக இருக்கும் உணவு பொருளில் இதுவும் ஒன்று. உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இது உதவுகிறது. மேலும் முட்டையில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி உள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம். முட்டையை ஆம்லெட் ஆக மாற்றி கொடுக்கலாம். முட்டையை பொரித்தும் கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள். தினம் ஒர் டம்ளர் பாலை கொடுக்க தவறாதீர்கள் குழந்தைகள் பால் குடிக்க மறுத்தால் பால் பொருள்களை தயிர், சீஸ் போன்றவற்றை சேர்க்கலாம். குறிப்பாக தினசரி தயிர் சேர்க்கலாம்.

    • இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
    • குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.

    நட்சத்திர பழம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் அதனை நட்சத்திர பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

    குளிர் காலத்தில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக் குளம் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.

    இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல், மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது. இந்த நட்சத்திர பழம் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.

    • இன்றைய காலத்தில் குழந்தைகள் ‘ஜங்க் புட்' உணவுக்கு மயங்கி கிடக்கிறார்கள்.
    • இந்த உணவுகளால் ஏற்படக்கூடிய எதிர் மற்றும் பக்க விளைவுகள் ஏராளம்.

    'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற தாரக மந்திரத்தின்படி தரமான ஊட்டச்சத்துகள் நிறைந்த பலவிதமான உணவுகளை ருசியாக சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ரசித்து, ருசித்து உண்ணும் ஒவ்வொரு கவளமும் ஆரோக்கியம் சார்ந்ததாகவே இருந்து உள்ளது. ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது. ஆம், 'குப்பை உணவு' என்ற பொருள் கொண்ட 'ஜங்க் புட்'டை தற்போது, நாம் 'நவீன மாடர்ன் உணவு' என்று பெயரிட்டு சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் பழக்கிக்கொண்டிருக்கிறோம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே 'ஜங்க் புட்' உணவுக்கு மயங்கி கிடக்கிறார்கள் என்பதே உண்மை.

    ஆரோக்கியமாக வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்த்து கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள், சாட் வகைகள், பீட்ஸா, பர்கர், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், கார்பனேட்டட் குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகள் எல்லாமே இந்த வகையை சார்ந்தவையாகும். இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து மருத்துவர், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் இல்லத்தரசிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.

    உடல், மனவளர்ச்சி தடைபடும்

    ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி:-

    நாவிற்கு சுவையாகவும், எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால் துரித உணவுகள் குழந்தைகளிடையே குறிப்பாக பள்ளி சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவாக அமைகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தேடிச்சென்று விரும்பி உண்பது அதிகரித்துவிட்டது. இப்படிப்பட்ட உணவுகளால் ஏற்படக்கூடிய எதிர் மற்றும் பக்க விளைவுகள் ஏராளம். இந்த உணவுகளின் சுவை, நிறம், திடம் ஏற்றக்கூடிய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாலும் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து அதிக அளவில் இருப்பதாலும் உடல் நலக்கேடு உருவாகிறது. இதனை அடிக்கடி விரும்பி உண்ணும் குழந்தைகள் உடல் பருமன் நோய்க்கு ஆளாகிறார்கள். இதுவே பிற்காலத்தல் இவர்களுக்கு தொற்றா நோய்கள் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைதல் (ஸ்ட்ரோக்) மற்றும் சீறுநீரக செயல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு முதல் மூலக்காரணியாக அமைகிறது.

    மேலைநாடுகளில் நடந்த ஆய்வுகளில் துரித உணவு அதிகம் உண்ணும் சிறுவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. இதைத்தவிர நினைவாற்றல் குறைதல், உடல் பருமன், மனச்சோர்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. துரித உணவுகள் சுவையாக இருப்பதால் குழந்தைகள் அதற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படுகிறது. உடல், மனவளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இவ்வகை உணவுகளில் இல்லாமல் இருப்பதால், உடலும், மனவளர்ச்சியும் தடைபெறுவது ஒரு பெரிய சவாலாக அமைகிறது. எனவே துரித உணவுகளை குழந்தைகள் உண்ணாமல் தடுப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமையாகும்.

    அலர்ஜியும், அஜிரணமும்

    நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்:-

    'ஜங்க் புட்' என்று அழைக்கப்படும் பீசா, பர்க்கர் போன்ற உணவு வகைகளில் மைதா, அஜினோ மோட்டோ போன்ற பொருட்கள் அதிகம் சேர்ப்பதால், இந்த மாதிரியான உணவு வகைகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு தொடர்ந்து இதுபோன்ற உணவுகளை கொடுத்து வந்தால் குழந்தைகள் அவற்றுக்கு அடிமையாகி விடுவதுடன், வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மாறாக குழந்தைகளுக்கு அஜிரணம் ஏற்படுவதுடன், அலர்ஜியும் ஏற்படலாம். குழந்தைகளை படிக்க வைக்கவும், சாப்பிடவும், தூங்குவதற்கும் ஜங்க் புட் உணவு வகைகளை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறுவதையும் பெற்றோர்கள் நிறுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை ருசியாக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கி நோய், நொடி இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கெடுதல் என்று கூற முடியாது

    புரசைவாக்கத்தைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் அப்துல் ஹமீது:-

    பேக்கரியில் தினசரி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் அளவு மற்றும் எண்ணிக்கையை பொருத்துதான் தினசரி தயாரிக்கப்படுகிறது. எனவே அன்றாடம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் அன்றைக்கே விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. எனவே இதனை வாங்கி உட்கொள்பவர்களுக்கு எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இதனை வாங்கி கொண்டு வீடுகளுக்கு சென்று 2 நாட்களுக்கு பிறகு சாப்பிடுவதால் தான் கெடுதல் ஏற்படுகிறது. உடல்நலம் குன்றியவர்கள் கூட பேக்கரி பொருட்களை வாங்கி உட்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. எனவே ஒட்டுமொத்தமாக பேக்கரி மற்றும் துரித உணவுகள் கெடுதல் என்று கூறிவிட முடியாது.

    ஆரோக்கியத்திற்கு நல்லது

    பெரியமேட்டைச் சேர்ந்த வியாபாரி காந்திலால் பண்டாரி:-

    ஜங் புட் என்று அழைக்கப்படும் துரித உணவுகளை தவறாமல் சாப்பிடுவதால் உடல் பருமன், கல்லீரல், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், மன அழுத்தம், தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இதில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. அதனால் தான் இது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மெதுவாக கொல்லும் கெட்ட கொலஸ்ட்ரால் இவற்றில் உள்ளது. உலகில் உள்ள மிகவும் ஆரோக்கியமற்ற உணவுகளில் ஒன்றாக ஜங் புட் இருப்பதால், அதிக சர்க்கரை கொண்ட தானியங்கள், சர்க்கரை பானங்கள், பதிவு செய்யப்பட்ட சூப்கள், சோடாக்கள், உறைந்த பிரஞ்சு பொரியல், ஐஸ்கிரீம், பீட்சா, பர்கர்கள் மற்றும் சாண்ட்வீச்சுகள் போன்றவை இந்த வகைக்குள் அடங்கும். இதனை சிறுவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    இயற்கை தந்த உணவுகள்

    ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ஜெனீபர்:-

    இயற்கை தந்த உணவுப்பொருள்கள் அனைத்திலும் ஒருவித சுவை உண்டு. குறிப்பாக ஆப்பிள் பழமாகட்டும், பாகற்காய் பொரியலாகட்டும், எலுமிச்சை சாறாகட்டும் எல்லாவற்றையும் நினைக்கும் போதே அதன் சுவையை உணர்த்தும் வகையில் நம் மனதில் நிறைந்திருக்கும். இவை இயற்கை தந்த பொருட்கள். ஆனால், ஜங் புட் உணவுகள் எதிலும் அப்படியொரு இயற்கையான சுவையை எதிர்பார்க்க முடியாது. இந்த சுவை அனைத்துமே செயற்கையாக சேர்க்கப்படுபவை. இந்தவகை உணவுகள் குழந்தைகளை மீண்டும், மீண்டும் சாப்பிடச்சொல்லி தூண்டுகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பண்டங்கள் குறித்து மருத்துவர்கள் கூறுவதை கேட்டால் பயமாக இருக்கிறது. எனவே இப்போது பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம் எடுத்துக்கூறி கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறோம். இருந்தாலும் குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுகள் மீது அலாதி பிரியமாக இருந்து வருகிறது.

    எந்த உணவில் ஊட்டச்சத்து உள்ளது?

    கல்லூரி மாணவி பானுப்பிரியா:-

    ஊட்டச்சத்து இல்லாத பீட்சா மற்றும் பர்கர் சாப்பிட வேண்டாம், பொதுவாக வெளியில் எதையும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்றெல்லாம் கூறுகிறார்கள். சரி நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். தற்போது சாப்பிடும் எந்த உணவு தரமாகவும், ஊட்டச்சத்துடனும் இருக்கிறது?. ஆரோக்கியம் குறைவதற்கு வெறும் உணவு பொருட்கள் மட்டுமே காரணம் இல்லை. இருந்தாலும் பெரியவர்கள் சொல்படி, எண்ணெய் உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை தவிர்த்து வருகிறோம். வீட்டில் சமைக்கப்படும் கீரைகள் மற்றும் தானிய உணவுகளை அதிகம் உட்கொள்கிறோம். ஆரோக்கியமாக இருப்பதாக உணருகிறோம். அனைவரும் கடைபிடிக்கவும் வேண்டுகோளும் விடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் உணவுமுறை உள்ளது.
    • நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் உடலை உருக்கி விடும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்தால் அதை குணப்படுத்தவும் உதவும் உணவு வகைள் பற்றி காண்போம்:

    1) நார்ச்சத்து அதிகமுள்ள வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, பீன்ஸ், நூல்கோல், நெல்லிக்காய், வெந்தயம், வெண்டைக்காய், பாகற்காய், கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், கீரைகளை சேர்க்க வேண்டும். மாவுச்சத்து, இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    2) நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து அதன் சாறு 30 மிலி வீதம் தினமும் குடிக்கலாம். இது உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.

    3) வெந்தயம், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும், தினமும் இரவு 1 டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும், ரத்த சர்க்கரையின் அளவு, தேவையில்லாத கொழுப்பைக்குறைக்கும்.

    இதுதவிர தினமும் சைக்கிள், நடைப்பயிற்சி, நீச்சல், இறகுப்பந்து என ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம், மனக்கவலை இல்லாமல் வாழப்பழக வேண்டும்.

    • மசாலா உணவை சாப்பிட்டாலும் இந்த பிரச்சனை வரும்.
    • இந்த பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளது.

    வழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்று விழுங்கும் அளவு அதிகமாக இருக்கும்.

    வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிடும்போது செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது. மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகிறது. இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறைகள் மற்றும் சித்த மருந்துகள் பற்றி பார்ப்போம்.

    1) மோருடன் பெருங்காயம், சீரகம், சேர்த்து குடிக்க வேண்டும்,

    2) காலை-இரவு நேரத்தில் சீரகத்தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும்,

    3) சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும்.

    காலை, மதியம் வேளைகளில் சாப்பிட்ட உடன் ஒரு குறுநடை நடந்த பின்னர் தான் உட்கார வேண்டும். இரவு சாப்பிட்ட பிறகும் ஒரு குறுநடை நடந்து ஒரு மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும். இளஞ்சூடான வெந்நீர் குடிப்பது வயிறு பிரச்சினைகளுக்கு சிறந்தது. உணவில் மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
    • எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.

    பீன்ஸ் பல உலக நாடுகளில், பல்வேறு விதமான வண்ணங்களில் விளைகிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் பீன்ஸில் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும்.

    பீன்ஸ் உங்களுக்கு பிடிக்குமா...? அது சுவையில் மட்டுமல்ல, சத்து விஷயங்களிலும் சூப்பரானது. இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…!

    பேப்பேசி குடும்ப,த்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பேசில்லஸ் வல்கரிஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ்கள் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.

    100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும். மிக அதிக அளவிலான வைட்டமின்-ஏ, பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும். குழந்தைகளுக்கு நோயை உருவாக்கும் ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கலுக்கு எதிராக செயல்படும்.

    பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பச்சை பீன்ஸ் வகைகள் ஏ.ஆர்.எம்.டி. எனப்படும் வயது முதிர்வு சம்பந்தமான வியாதிக்கு எதிராக உடலுக்கு ஆற்றல் தரும். 100 கிராம் பீன்ஸில் 37 மைக்ரோ கிராம் போலேட்ஸ் உள்ளது. இது வைட்டமின் டீ 12 உடன் இணைந்து, டி.என்.ஏ. இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பங்கெடுக்கிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது. பைரிடாக்சின் எனும் வைட்டமின் பி-6, தையமின் பி-1, வைட்டமின் சி ஆகியவை பீன்ஸில் நிறைந்துள்ளது.

    வைட்டமின்-சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது. ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கல்ஸ் உடலில் சேரவிடாமல் சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றத்திற்கு ரொம்பவும் அவசியமானது.

    மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டில் துணைக்காரணியாக செயல்படக்கூடியது. பிரிரேடிக்கல்ஸை விரட்டி யடிக்கக் கூடியது. பொட்டாசியம் தாது உப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

    • கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
    • உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.

    உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளடங்கி இருக்கும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். புரதம் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. அதனை அதிகம் உட்கொண்டால் உடல் பருமனை ஏற்படுத்திவிடும் என்ற விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு உட்கொள்ளும் உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. கார்போஹைட்ரேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டியதில்லை. அதுவும் போதுமான அளவில் இடம்பெற வேண்டும். உடல் எடை குறைப்பு விஷயத்தில் உலவும் மேலும் சில கட்டுக்கதைகள் குறித்து பார்ப்போம்.

    புரதம் உட்கொள்வது

    உடல் எடையை குறைக்கும்போது நுண்ணூட்டச்சத்துக்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் புரதம் மேக்ரோ நுண்ணூட்டச்சத்துகளை கொண்டுள்ளவற்றுள் முக்கியமானதாகும். இதனை உட்கொள்வது நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

    அதேவேளையில் புரதத்தையே முதன்மையான உணவாக உட்கொள்ளக்கூடாது. அப்படி புரதத்தை அதிகமாக உட்கொள்வது சருமம் வறட்சி அடைவதற்கு வழிவகுக்கும். சில தேவையற்ற உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். அதனை தவிர்க்க காலை உணவுடன் புரதத்தை சேர்த்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் சமயங்களிலும் உட்கொள்ளலாம்.

    உணவு உட்கொள்வதை தவிர்ப்பது

    விரதம் இருப்பது அல்லது பட்டினி கிடப்பது உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் என்பது முற்றிலும் கட்டுக்கதைதான். பட்டினி கிடப்பது, குறைவாக சாப்பிடுவது, சில உணவுகளை அறவே தவிர்ப்பது உடல் எடை இழப்புக்கான யுக்தி அல்ல.

    அப்படி சில நாட்கள் உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடித்துவிட்டு மீண்டும் பழையபடி உணவு உட்கொள்ள தொடங்கியதும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுவீர்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வதே சிறந்தது. அது பசியை தூண்டாது. அதனால் அடிக்கடி சாப்பிடும் எண்ணம் தோன்றாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

    சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடாதது

    உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்பவர்கள் சூரியன் மறைந்த பிறகு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் உண்மையல்ல. ஒருவருடைய உடலில் கலோரிகள் அதிகம் சேரும்போதுதான் உடல் எடை அதிகரிக்கும்.

    ஏற்கனவே உடலில் கலோரிகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் சூரியன் மறைந்த பிறகு சாப்பிடுவது உடலுக்கு எந்தவொரு தீங்கையும் விளைவிக்காது. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது இரவு தடையற்ற தூக்கம் பெற உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    மாத்திரைகள் சாப்பிடுவது

    உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பதற்குரிய மாத்திரைகள் புழக்கத்தில் இருக்கின்றன. பவுடர், டானிக்குகள் வடிவிலும் கிடைக்கின்றன. அவை உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் கட்டுக்கதைதான்.

    ஏனெனில் சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால் மட்டுமே மாத்திரைகள் வேலை செய்யும். இல்லாவிட்டால் அதனை உட்கொள்வதில் பயனில்லை. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள், டானிக்குகளை உட்கொள்வதும் தவறானது.

    நச்சு நீக்கும் பானங்கள் பருகுவது

    'டீடாக்ஸ்' எனப்படும் பானங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவும் கட்டுக்கதைதான். டீடாக்ஸ் பானங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை அளிக்கலாம். இருப்பினும் உடலில் உள்ள கொழுப்பை முழுமையாக நீக்குவதற்கு உதவாது. வழக்கமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தாலே போதுமானது.

    • மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.
    • வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.

    கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும். மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி செய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.

    வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் சீதபேதி கட்டுப்படும்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.

    வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும். தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட்ஸ் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். இதிலும் வைட்டமின் 'ஈ' சத்து நிறைந்துள்ளது.

    • நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்று சார்க்கரை நோய்.
    • தற்போது பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்றாக சார்க்கரை நோய் இருக்கிறது. வயது வித்தியாசங்கள் இன்றி பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். தேனில் கார்போஹைட்ரேட் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் வடிவில் உள்ளது. ஒரு டீஸ்பூன் (சுமார் 7 கிராம்) தேனில் 21 கலோரி ஆற்றல் உள்ளது.

    நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவை அனைத்திலும் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவைகளை பயன்படுத்த வேண்டும்.

    ஆனால் வெள்ளைச்சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவை ஆரோக்கியமானது, சிறந்தது.

    தேனில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. வெள்ளைச் சர்க்கரையை விட இது ஆபத்து குறைவு தான். இதிலும் கட்டுப்பாடு அவசியம். இதற்கு அடுத்த இடத்தில் கருப்பட்டி இருக்கிறது. தேன் நல்லது தானே என்று சொல்லி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    • ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.
    • அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

    ஸ்ட்ராபெர்ரியில் இருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிற மூட்டியாகவும் பயன்படுகிறது.

    நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் நிறைந்திருக்கின்றன.

    ஸ்ட்ராபெர்ரி பழம் சுவையாக இருப்பதுடன், தோலின் வறட்சியைப் போக்கும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யும் மற்றும் செல் அழிவைத் தடுக்கும் பணிகளைச் செய்கிறது. ஆம்...! அதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுப்படுத்துகிறது.

    ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவைத் தடுக்கும் ஆன்டி-ஆக்சிடெண்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி-6, வைட்டமின் கே, அயோடின், செலினியம் போன்ற சத்துப்பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபிளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன. இவையும், உடலை வலுவாக்குகின்றன.

    5 பழங்களில் 250 மி.லி. அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

    இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் முகத்தில் தோன்றும் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க ஸ்ட்ராபெர்ரி, சிறப்பான மருந்து.

    ×