என் மலர்
நீங்கள் தேடியது "High Court Madurai Bench"
- ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர்.
- வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேச்சிப்பறை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் தாஸ். இவருக்கு களியல் வனச்சரகம் தொடலிக்காடு வனப்பகுதியை ஒட்டி கடையல் கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்திற்கு அரசு உரிமை கோரியதால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுடன் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால் வனத்துறையினரை சிவில் சிறையில் அடைக்க வேண்டும் அல்லது வனத்துறைக்கு சொந்தமான வாகனம், களியல் வனச்சரக அலுவலகத்தின் கம்ப்யூட்டர், அலமாரி, மேசை உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அதனை எதிர்த்து வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை அமர்வு நீதிபதி விஜயகுமார், வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், அந்த பணத்தை 12 வாரங்களுக்குள் டேவிட்தாஸிடம் வழங்கவும் உத்தரவிட்டார்.
- சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவருக்கு ஜாமின் அனுமதிக்கக்கூடாது என ஜெயராஜ் மனைவி செல்வராணி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதி முரளி சங்கர் ஏற்கனவே விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. மற்றும் செல்வராணி தரப்பில் மனுதாரருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்து இருந்தார்.
இந்தநிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி முரளிசங்கர் நேற்று பிறப்பித்தார். இதில், மனுதாரர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணையை கீழ்கோர்ட்டு (அதாவது மதுரை மாவட்ட கோர்ட்டு) 2 மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
- மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும்.
- திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும்.
மதுரை:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது:-
எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நாங்கள் தனித்தனியாக வசிக்கிறோம். எங்களை சேர்த்து வைக்கக்கோரி என் மனைவி கரூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் நான் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கு தொடர்ந்தேன். இவற்றை விசாரித்த கரூர் கோர்ட்டு, என் மனைவியின் கோரிக்கையை அனுமதித்தும், என்னுடைய விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இது ஏற்புடையதல்ல. என் வழக்கை தள்ளுபடி செய்ததை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும். அவர்களின் முதல் திருமணம் சட்டப்படி ரத்தாகி உள்ளது. இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணத்துக்கு பின்பு 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து உள்ளனர். அதன்பின்பு மனுதாரர் தன் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
அதாவது, அவரது மனைவிக்கு பாலியல் நோய் இருந்ததாகவும், வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளது. தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையில்லை என்கிறார்.
பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவருடன் குடும்பம் நடத்தியதால் தனக்கும் நோய் பரவியதாக மனுதாரர் கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் ஆபாச படத்தைப் பார்ப்பதில் மனுதாரரின் மனைவியின் செயல் மனுதாரருக்கு எதிரான கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.
திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும். இருப்பினும், சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, அது கணவருக்கு கொடுமையை விளைவிப்பதாகக் கூற முடியாது.
இந்த வழக்கில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை அல்லது உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரர் வழக்கில் கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக இருந்தாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல.
- பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மதுரை:
திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், தமிழக அரசின் தமிழ் வழியில் அர்ச்சராக பயின்று தற்போது திருவண்ணாமலை கோவிலில் அர்ச்சராக பணி புரிந்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடைபெற்ற நிகழ்வில், எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணமும் செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை மறைத்து ஐகோர்ட்டில் எச்சிலையில் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி பெறப்பட்டது.
இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.
இதே போல தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட கலெக்டரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்குகளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை இதே நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் இருந்து இன்று பிறப்பித்தனர்.
அந்த தீர்ப்பில், எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக இருந்தாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தீர்ப்பில் கூறியுள்ளனர்.
- ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது.
மதுரை:
தேவர் தங்கக் கவசம் தொடர்பாக அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்கக் கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பாக தங்கக் கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராம லிங்கத்தேவர் சிலைக்கு அணிவித்து பின் மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.
இதற்காக அ.தி.மு.க. பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்றுச் செல்வார்கள்.
தற்போது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளன.
எனவே, தற்போதைய அ.தி.மு.க. பொருளாளராக உள்ள எனக்கே தங்கக் கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது.
ஆனால், வங்கி அதிகாரிகள் எங்களிடம் தங்க கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே வருகிற 30ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு தங்கக் கவசத்தினை நாங்கள் எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அ.தி.மு.க. சார்பாக உபயோகப்படுத்தும் அதிகாரத்தை வழங்கவும், வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், தற்போதைய அ.தி.மு.க. பொருளாளராக மனுதாரர் ஏக மனதாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவரிடம் தான் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
பின்னர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை குறித்து ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே சீனிவாசன் தரப்பினரிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாலையில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி மாலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தேவர் தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (டிஆர்ஓ) ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தங்க கவசத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். தேவர் கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக்கூடாது. நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். .
- நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி எபவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் வருகிற 8-ந்தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து உரிய அனுமதி கோரி காவல் துறையிடம் மனு சமர்ப்பித்துள்ளோம். எனவே கரகாட்டம் நடத்த அனுமதியும், நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரகாட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக்கூடாது. நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது.
எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக்கூடாது. சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.
நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.
- தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது.
மதுரை:
விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், "அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த தனிநீதிபதி முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிலை வைக்கப்பட்ட பின் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் அனுமதி பெறும் வரை சிலையை தகரம் அமைத்து மூடிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அது முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே இது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பட்டா இடத்திலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது டின் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல" என வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், "அந்த பகுதியில் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அதோடு அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது" என வாதிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள், "அதிகாரிகள் மனுதாரரின் மனுவை நிலுவையில் வைத்திருப்பது ஏன்? இதனால் காவல்துறையினரே சிரமத்திற்கு ஆளாகின்றனர். முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.
ஆகவே அனுமதி பெறும் வரை சிலையை திறக்கக்கூடாது. அதற்கு பொறுப்பேற்று மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது என உத்தரவிட்டனர்.
- மின்வாரியத்தின் கவனக்குறைவால் இறந்துபோன எனது கணவரின் மரணத்திற்கு உரிய இழப்பீடு கொடுக்க உத்தரவிட வேண்டும்.
- மழை காலங்களில் மின் கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த சூரியகாந்தி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் சதுரகிரி தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு எனது வீட்டிற்கு அருகே வாழை தோப்பில் குளிக்க சென்றபோது மின் கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவள். கணவரின் வருமானத்தில் இருந்தே நானும், எனது 2 குழந்தைகளும் பிழைப்பு நடத்தி வந்தோம்.
எனது கணவர் இறப்பிற்கு பின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றோம். மின்வாரியத்தின் கவனக்குறைவால் இறந்துபோன எனது கணவரின் மரணத்திற்கு உரிய இழப்பீடு கொடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மின் வாரியம் தரப்பில் இயற்கையின் சீற்றத்தால் தென்னை மரக்கிளை விழுந்ததால் வயர் அறுந்து மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதற்கு மின்வாரியம் பொறுப்பாகாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பருவநிலை மாற்றங்கள், மழை காலங்களில் மின் கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மரக்கிளைகள் மின் கம்பிகளில் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
இதுபோன்று விபத்துகளுக்கு மின்வாரியம் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது. மேலும் மின் கம்பியில் தென்னை மரக்கிளைகள் விழுந்து மனுதாரர் கணவர் இறந்ததற்கு இயற்கையை குற்றம் கூறி தப்பிக்க முடியாது. இதற்கு மின் வாரியம் தான் பொறுப்பு என கூறி மனுதாரரின் கணவர் இறந்ததற்கு மின்வாரியமே முழு பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டு மின்சாரம் தாக்கி இறந்தவரின் வயதை கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளதால் மின்வாரியம் மனுதாரருக்கு ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இழப்பீடு தொகையில் 2013-ம் ஆண்டு முதல் இன்று வரை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன.
- மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தை போக்குவதற்கு நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த வெர்னிகா மேரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதை தடுக்க கடந்த 2012-ம் ஆண்டில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தை போக்குவதற்கு நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மையங்கள் முறையாக பள்ளிகளில் செயல்படுகின்றனவா? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதற்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. இந்த மையங்கள் முறையாக செயல்படவேண்டும் என்று மனு அளித்தும் பலன் இல்லை.
எனவே, 2012-ம் ஆண்டு வெளியான அரசாணையின்படி அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடமாடும் மன ஆலோசனை மையங்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், 2012-ம் ஆண்டில் அரசாணை வெளியிட்டும், இதுவரை நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்? பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்களை முறையாக செயல்படுத்துவது அவசியம். இது, மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
- கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை:
மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 29 சதவீதம் உள்ளனர். 14 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் 10 சதவீதம் உள்ளனர்.
குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
2021-ம் ஆண்டு சி.ஏ.சி.எல். என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இறந்ததாக ரூ.14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2016-ம் ஆண்டு வரை 1 லட்சத்து 75 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படும்போது மத்திய, மாநில அரசு தரப்பில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் அதில் பெரும் தாமதம் உள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்து, பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகிறது. ஆகவே இந்த பகுதிகளில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையத்தை அமைத்து மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து இழப்பீடு தொகை விரைந்து கிடைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்தியா இல்லாமல் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.
வழக்கு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 30-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடக்கிறது.
மதுரை:
மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையின்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் 36 மாதங்களில் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது.
ஆனால், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை என்றும், கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மற்றொரு வழக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என முடிவு எடுக்க நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர்முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் குடும்பநல அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் முடிவதற்கு 5 வருடம் 8 மாதம் ஆகும். (அதாவது 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2026-ம் ஆண்டு அக்டோபர் வரை). அதிக செலவு மற்றும் கூடுதல் காலத்துக்கான மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கப்பட்டு செலவினத்துறையின் பரிசீலனையில் உள்ளது.
இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடக்கிறது. மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பின்னர் அரசு தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், மேற்கண்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மனுதாரர் நேரில் ஆஜராகி, 2014-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 8 மாநிலங்களில் மத்திய அரசின் சொந்த நிதியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை கட்டியுள்ளனர். சமீபத்தில் கூட இமாசலப்பிரதேசத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏன்? என்பது தெரியவில்லை என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடியும் என்று தெரிவிக்கிறீர்கள்? அது சாத்தியமா? அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டு உள்ளன? என்ற நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏராளமான இயற்கை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
- உலகின் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் பகுதியாக மேற்குத்தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
மதுரை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த வினோத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உருவாகின்றன. அதில் பிரசித்தி பெற்றது, குற்றாலம் அருவிகள்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏராளமான இயற்கை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
இவற்றுக்கு நீர் ஆதாரம் மலைத்தொடர்கள். இந்த நீரானது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. நீர்வீழ்ச்சிகளில் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணத்துக்காகவும் பொதுமக்கள் குளிக்கின்றனர்.
குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் பாயும் இடங்களில் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அருவிகளை சுற்றிலும் ரிசார்ட்டுகள், எஸ்டேட்டுகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, இணையதளங்களில் விளம்பரம் செய்து வருமானம் கொழிக்கின்றனர்.
உலகின் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் பகுதியாக மேற்குத்தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. ஆனால் இங்குள்ள இயற்கை அருவிகளின் நீர் வழிப்பாதையை தனிநபர்கள் தங்களின் ஆதாயத்திற்காக மாற்றி சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துகின்றனர். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கையாக செல்லும் நீரோடைகள், சிற்றாறுகள், அருவிகள், ஆறுகளை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மேற்கண்ட 5 மாவட்டங்களில் தனியார் உருவாக்கிய செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், இணையதள முகவரிகள், ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் புவியியல் மாற்றங்களுக்குப் பிறகு தோன்றும் இயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரோடைகளை சட்டவிரோதமான முறையில் ரிசார்ட்டுகள், எஸ்டேட்கள் போன்ற தனியாரால் திசை திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிய ஒரு குழுவை ஏற்படுத்த நெல்லை, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
இந்த குழு, மாவட்ட வன அலுவலர்களின் உதவியுடன் தனியார் ரிசார்ட்டுகள், எஸ்டேட்டுகளில் ஆய்வு நடத்தி, சட்டவிரோத நீர்வீழ்ச்சிகள் இருந்தால் அவற்றுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட விதிமீறலுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து மாவட்ட கலெக்டர்கள் விரிவான அறிக்கையை இந்த கோர்ட்டில் வருகிற 1-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.