search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hoarding of liquor"

    • ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருந்து அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • தலைவாசல், ஊனத்தூர், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் , காட்டுக்கோட்டை உள்ள கல்வராயன்மலை, பட்டிமேடு வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருந்து அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தலைவாசல், ஊனத்தூர், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் , காட்டுக்கோட்டை உள்ள கல்வராயன்மலை, பட்டிமேடு வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மலை பகுதியை யொட்டியுள்ள கிராம பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் மணிவிழுந்தான் வசந்தபுரம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணற்றுமேடு விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி அங்கு கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அங்கு சென்று விவசாய நிலத்தை தோண்டினர். அங்கு வரிசையாக லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் ஊற்றி, பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். மொத்தம் 28 டியூப்களில் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சாராயத்தை போலீசார் அழித்தனர்.

    6 பேருக்கு வலைவீச்சு

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்கிற பெண்டு மனோகரன், அவரது மனைவி வசந்தா, மகன் மணிகண்டன், பிரபு என்பவரின் மனைவி தனலட்சுமி, அவரது மகன்கள் சுதன் மற்றும் சூர்யா உள்ளிட்ட 6 பேர், கள்ளச்சாராயம் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் 6 பேரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

    அதுபோல் ஆவாரை-சடையம்பட்டி செல்லும் பாதையில் உள்ள பட்டிமேடு வனப்பகுதி நீரோடை பகுதியில் சாராயம் காய்ச்ச 7 பேரல்களில் வைத்திருந்த 1400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அங்கு 3 லாரி டியூப்களில் இருந்த 90 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

    இந்த கள்ளச்சாராயத்தை காய்ச்சும் பணியில் ஈடுபட்ட ஆவாரை முருகேசன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சின்ராஜ் (30), மணி (28), ரவி (31) ஆகியோரை ேதடி வருகின்றனர்.

    மற்றொரு வாலிபர் கைது

    இதே போல், கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் சாராயம் விற்ற ஆத்தூர் புங்கவாடி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் (37) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×