search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holy Quran"

    • அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
    • மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை.

    ஏக இறைவன் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?

    "இந்த உலக வாழ்க்கையின் நன்மைகளை விட மறுமை வாழ்க்கையில் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்று சொர்க்கத்தில் வாழ வேண்டும்" என்பது தான்.

    மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை. இறைவனின் சோதனையுடன், உலக வாழ்வில் காணப்படும் தற்காலிக இன்பங்களின் சோதனைகளும் நிறைந்தது.

    அதே நேரத்தில் திருக்குர்ஆன் (2:286) குறிப்பிடுகின்றது: 'அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளை சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே'.

    இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், இறைவனிடம் இருந்து நமக்கு சோதனைகள் வரும். ஆனால் அவை நமது சக்திக்கு மீறியதாக இருக்காது என்பது இறைவனின் உறுதிமொழியாகும். எனவே நமக்கு இறைவன் தரப்பில் இருந்து வரும் சோதனைகளைக் கண்டு நாம் கலங்காமல் அந்த இறைவனிடமே சரண் அடைந்து அந்த சோதனைகளில் வெற்றி பெற வேண்டும்.

    திருக்குர்ஆன் வசனத்திலே, `யார் என்ன நன்மை சம்பாதித்தார்களோ அதன் பலன் அவருக்கே, அது போல அவர் தீமைகளை சாம்பாதித்திருந்தால் அதன் விளைவும் அவருக்கே' என்று அல்லாஹ் விளக்குகின்றான்.

    இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் நன்மைகள் செய்திருந்தால் அதன் பலனைக்கொண்டு நமக்கு வரும் சோதனைகளில் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் நாம் தீமைகள் செய்திருந்தால் அதற்குரிய பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளையாகும்.

    இறைவனின் தரப்பில் இருந்து வரும் சோதனைகளை வென்று வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதன், அந்த இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றது.

    "எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை குற்றம் பிடிக்காதே. எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தை சுமத்தி விடாதே. எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!".

    பாவம் செய்த மனிதர்கள் இறைவனிடம் சரண் அடைந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தனது கருணை உள்ளத்துடன் மனிதர்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்று பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு விளக்குகின்றது:

    "நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலை செய்துவிட்டாலும், உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:17).

    மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:135).

    பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் மன்னித்து அருள்கின்றான். அதோடு அவர்களுக்கு சிறந்த நற்கூலியையும் அளிக்கின்றான். அது என்ன தெரியுமா? சொர்க்கம்.

    "இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடம் இருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது" (திருக்குர்ஆன் 3:136).

    'நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருக்குர்ஆன் 2:222)

    'எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுபவர்கள்தான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இறைவனின் நல்லடியார்களே, நாம் அல்லாஹ் காட்டிய வழியில், கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். பாவங்களில் இருந்து விலகி நன்மைகளை செய்வோம். அறிந்தும் அறியாமலும் பாவம் செய்துவிட்டால், அதற்காக வருந்தி உடனே இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம். இதன் மூலம் நாம் சொர்க்கத்தின் பாதையில் நடைபோட முடியும்.

    • இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம்.
    • ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம். உலக மக்களிடையே அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மார்க்கம் ஆகும்.

    உலக மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அநீதியுடன் நடப்பவர்களுக்கு மறுமை உலகில் காத்திருக்கும் தண்டனைகள் குறித்தும் திருக்குர்ஆனும், நபி மொழிகளும் தெளிவாக எச்சரித்துள்ளன.

    ஒரு முஸ்லிம் பிற மனிதர்களிடம் நீதியாக நடக்க வேண்டும், அநீதியாக நடக்கக் கூடாது, பிறருக்கு உதவும் மனப்பான்மை வேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றன.

    இதையே திருக்குர்ஆன் (5:2) 'இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்' எனக்கூறுகிறது.

    உனக்கு அநீதி இளைத்தவனுக்கு உதவிட வேண்டும் என்று உத்தரவிட்டவர் நபிகள் பெருமான். அவரது நபி மொழி இதோ:

    'உனது சகோதரன், அவன் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும், அநீதி இளைத்தவனாக இருந்தாலும் சரியே அவனுக்கு நீ உதவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! பாதிக்கப்பட்டவனுக்கு உதவிபுரிவது சரி! ஆனால், அநீதி இளைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வது?' என்று கேட்டனர். 'ஆம்! அநீதி புரிந்தவனை அதில் இருந்து தடுப்பதும் அவனுக்கு செய்யப்படும் உதவியாகும்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    பாதிக்கப்பட்டவனுக்கு நீதியை பெற்றுத் தருவது எப்படி உதவியோ, அதுபோன்று பாதிப்பை ஏற்படுத்தியவனை அந்த பாவத்தில் இருந்து நல் வழிப்படுத்துவதும் உதவியே என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மாறாக அநீதி இளைப்பவனுக்கு மேலும் அவன் அநீதிக்கு துணை புரிவது, உதவி செய்வது கடும் கண்டனத்திற்குரியது என இஸ்லாம் கூறுகிறது.

    'அநியாயக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகும், அவன் அநியாயத்திற்கு எவன் துணை புரிகின்றானோ அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நபிமொழி)

    இந்த உலக வாழ்க்கையிலே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வியாபாரங்களில் அதிக அளவு ஏமாற்றுத்தனமும், அநீதியும் இழைக்கப்படுகிறது. இதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரித்து கண்டிக்கிறது:

    "ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்.

    இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் இறைவனை (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது;

    இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ (நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;

    ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களில் இருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;

    அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை;

    ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (திருக்குர்ஆன் 2:282).

    மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் மூலம் வியாபாரத்திலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் நாம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியலாம். இதை நமது வாழ்வில் வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நீதியுடன் நடந்து இறையருள் பெறுவோம், வாருங்கள்.

    • கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
    • பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.

    பிறர் நன்றாக வாழ்ந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், வசதி வாய்ப்புகளோடு சுகமான வாழ்க்கையை அனுபவித்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.

    ஒருவரது நிறைவான வாழ்க்கைக்கு காரணம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் என்பதை மனித மனம் ஏற்க மறுக்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறும் அளவுக்கு அவரது இறையச்சம், வணக்க வழிபாடுகள், நற்சிந்தனை, நற்செயல்கள் அமைந்துள்ளதை காணத் தவறிவிடுகிறார்கள்.

    நாமும் இறையச்சத்துடன் வாழ்ந்து, நற்செயல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வளர்க்க முன்வருவதில்லை. அதற்கு பதிலாக அந்த மனிதர் மேல் பொறாமை கொள்கிறார்கள். `அவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பான வாழ்வு கிடைத்துள்ளது' என்று வெறுப்பை வளர்க்கிறார்கள். வெறுப்பு பகை உணர்வை உருவாக்குகிறது.

    உலக வாழ்க்கையில் இன்று மக்களிடம் காணப்படும் போட்டி, பொறாமைகள் காரணமாகத்தான் பல்வேறு மோதல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொண்டால் அது அவனையே அழிக்கிறது. பொறாமை குணம் அவனது மனதில் தங்கி கோபத்தையும், குரோதத்தையும் வளர்க்கிறது. இது அவனது உடல் நலத்துக்கே தீங்காக முடிகிறது.

    பொறாமை குணம் இருக்கும் இடத்தில் அமைதியும், சாந்தியும் இருப்பதில்லை. அது மனிதனை தீய வழியில் தள்ளிவிடுகிறது. இதனால் அவன் பாவங்களை செய்யவும், தவறான வழியில் நடக்கவும் முன்வருகின்றான்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பொறாமை கொள்வது நன்மைகள் அனைத்தையும் தின்று விடும், நெருப்பு விறகை தின்பதைப் போல'.

    ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நாங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது 'சுவர்க்கத்திற்கு தகுதியானவர் ஒருவர் வருவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

    நாங்கள் பார்த்தோம், மதீனாவாசிகளில் ஒரு மனிதர் தொழுகைக்கு முன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு (ஒளூ செய்து கொண்டு) தன் தாடியில் தண்ணீர் சொட்ட தனது இரு காலணிகளையும் வலது கையில் கொண்டு வந்தார். மறுநாளும் அதே மாதிரி சொன்னார்கள். அவரே வந்தார்.

    மூன்றாம் நாளும் அவ்வாறே சொன்னார்கள். அவரே வந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த அவையை விட்டு சென்ற பிறகு ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் அவரை பின்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கே சென்று விட்டார்கள். அவரிடம் சொன்னார்கள், `நான் என் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி தாருங்கள்' என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் `தாராளமாக தங்கிக் கொள்ளுங்களேன்' என்றார்.

    ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் மூன்று நாள் அவருடைய வீட்டில் தங்கினார்கள். அதைப் பற்றி சொல்லும் பொழுது `அவரை இரவு நேரத்தில் நான் கண்காணித்தேன். அவர் விழித்திருந்து வணக்கம் புரிவதை நான் காணவில்லை. தூக்கத்தில் புரண்டு படுக்கும் பொழுது மட்டும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் கண்டேன். காலையில் பஜ்ரு நேரம் வந்தவுடன் பர்ளை நிறைவேற்றுகிறார். வேறு எந்த பெரிய வணக்கமும் இல்லை.

    இதை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கும் என் தந்தைக்கும் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவனவாசி என்று கூறினார்கள்.

    தங்களிடம் என்ன தான் அமல் இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காகவும், அதை நான் பின்பற்றலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன். ஆனால் தங்களிடம் எந்த ஒரு பெரிய வணக்கத்தையும் காணவில்லை. விஷயம் அவ்வாறு இருக்க, பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவர்க்கவாசி என்று எப்படி கூறினார்கள்? என்று தெரியவில்லையே' என்று கூறிவிட்டு புறப்படலானேன்.

    பின்னால் இருந்து என்னை அவர் அழைத்தார். அப்போது அவர் சொன்னார் 'நான் யாரின் மீதும் குரோதமோ, பொறாமையோ கொள்ளமாட்டேன். யாருக்கு எதை கொடுக்க இறைவன் நாடியிருக்கிறானோ அதை அவன் கொடுக்கிறான். நாம் ஏன் பொறாமை கொள்ள வேண்டும்' என்றார்.

    உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'ஆம், இது தான் தங்களை சுவனவாசியாக ஆக்கிவிட்டது'. அவர் தான் சஃதிப்னு அபி வக்காஸ் என்ற நபித்தோழர் ஆவார்.

    இந்த சம்பவம் அடுத்தவர் மீது பொறாமை கொள்ளாமல் இருந்தாலே சுவனம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

    நபி (ஸல்) கூறினார்கள்: "பகைமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்." (நூல்: புகாரி)

    நம் மீது யாராவது ஒருவர் பொறாமை கொள்வாரேயானால் பொறுமையை மேற்கொள்ளவேண்டும், பழிவாங்கிவிடக் கூடாது. பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    • தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள்.
    • ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.

    இஸ்லாம் ஐந்து தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ். `ஜகாத்' என்ற வார்த்தைக்கு `வளர்ச்சி அடைதல்', `தூய்மைப் படுத்துதல்' போன்ற அர்த்தங்கள் உண்டு. இது இஸ்லாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும்.

    ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (திருக்குர்ஆன் 2:110)

    ஜகாத் கடமை?

    தங்கம், வெள்ளி, வியாபார சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.

    தங்கம்-வெள்ளி

    நிஸாப் என்ற உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நிஸாப் அளவு 87.48 கிராம், வெள்ளியின் நிஸாப் அளவு 612.36 கிராம். இந்த அளவு தங்கம், வெள்ளி ஒருவரிடம் இருந்தால் அவர் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

    ரொக்கப் பணமாக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒரு கிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.

    விளைபொருட்கள்

    சேமிக்கப்படக் கூடிய, நிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும் கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனினும் பழங்களிலும், காய்கறிகளிலும் ஜகாத் கடமை இல்லை. விளைபொருட்கள் நிஸாப் எனும் உச்சவரம்பான 675 கிலோ அளவை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும். கோதுமைக்குரிய நிஸாப் அளவு 552 கிலோவாகும்.

    கால்நடைகள்

    கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும். நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும். ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு, வெள்ளாடு இவற்றின் நிஸாப் 40, மாட்டின் நிஸாப் 30. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.

    ஜகாத் கடமையாகுவதற்கு சில தகுதிகள்

    இறை விசுவாசியாகவும், சுதந்திரமானவராகவும், புத்தி சுவாதீனம் உள்ளவராகவும், பருவ வயதை அடைந்தவராகவும் இருக்க வேண்டும். 87 கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருக்க வேண்டும். பொருளின் மீது முழு அதிகாரம் படைத்திருக்க வேண்டும், இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.

    இத்தகைய பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என்ற அளவில் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.

    ஜகாத் பெற தகுதியானவர்கள்

    இறைவன் சுட்டிக்காட்டும் அந்த எட்டு வகையினர் வருமாறு:

    1) வறியவர்கள்

    2) ஏழைகள்

    3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்

    4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள்

    5) அடிமைகள் விடுதலை செய்வதற்கு

    6) கடனாளிகள்

    7) இறை வனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள்

    8) வழிப்போக்கர்கள்

    ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

    எச்சரிக்கை

    கடமையான ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என இஸ்லாம் எச்சரிக்கிறது. `இறைவன் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லை என்றால், மறுமை நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக்கொண்டு, தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக்கொண்டே `நான் தான் உனது செல்வம்; நான் தான் உன் புதையல்' என்று கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு திருக்குர்ஆனிலுள்ள (3:180) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்". (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), புகாரி)

    மேலும் சகோதர சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் ஜகாத் நிதியை பயன்படுத்தலாம் என்று சிபாரிசு செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இவ்வாறு கொடுப்பதினால் அங்கே சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை ஜகாத்தின் மூலம் நனவாக்கும்படி இஸ்லாம் கண்ட கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

    பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சி யும், மறு மலர்ச்சியும் ஏற்பட `ஜகாத்' எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், 'ஸதகா' எனும் தர்ம நிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.

    ஜாகாத் என்னும் கடமையை நிறைவேற்றுவோம், மனித நேயம் காப்போம்.

    • ரமலான் மாதத்திற்கு தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு.
    • புனிதமான குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று கூறுகிறது.

    இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்திற்கு தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு. சிறப்புமிக்க அந்த நாட்களை நாம் கொஞ்சமும் வீணாக்கி விடக்கூடாது என்பது தான் இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று.

    இந்த மாதத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் இப்படி: "ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ முடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.

    ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகின்றானே தவிர சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

    மேலும், தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள் மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்து வதற்காகவும் (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்". (திருக்குர்ஆன் 2:185)

    இந்த மாதம் சாதாரணமான மாதம் அல்ல. அது புனிதமான குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று கூறுகிறது. அது இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேத புத்தகம். குர்ஆன் என்பது ஓதிப்பார்ப்பதற்கு மட்டும் அல்ல, அது ஓதப்பட்டு அதில் உள்ளபடி அமல் செய்ய வேண்டும் என்பது தான் அதன் குறிக்கோள் ஆகும்.

    அதே போன்று தான் இந்தப் புனித ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகளும் முறையாக நோற்கப்பட்டு குறையின்றி பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாகும். ரமலான் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் பல வழிகளில் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

    நோன்பிற்கு அதிகமான சிறப்பும், மகத்தான பன்மடங்கு கூலியும் உண்டு, நோன்பை மதித்து, கண்ணியப்படுத்தும் விதத்தில் அல்லாஹ் அதனை தனக்குரியது என கூறியுள்ளான். நபிகள் நாயகம் அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் நபிமொழி வழியாக கூறினார்கள்.

    `ஆதமுடைய மகனின் செயல்கள் அனைத்திற்கும் நன்மை பன்மடங்காக வழங்கப்படும். ஒரு நன்மை பத்தாக, அதிலிருந்து எழுநூறாகக்கூட பெருகும். ஆனால் நோன்பைத் தவிர, ஏனெனில் அது எனக்குரியது, அதற்கு நானே கூலி வழங்குவேன், ஏனெனில் அவனது ஆசை மற்றும் உணவை எனக்காகவே அவன் விட்டிருக்கின்றான்'.

    'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன; ஒன்று அவன் நோன்பு திறக்கும் போது, மற்றது தனது இறைவனை அவன் சந்திக்கும் போது'. இப்படியெல்லாம் பல்வேறு சிறப்புகள் ரமலான் நோன்புக்கு உண்டு. அவற்றின் சிறப்புகளை நாம் தான் புரிந்து கொண்டு சரிவர செயல்பட வேண்டும்.

    நோன்பைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது: 'நீங்கள் நோன்பை முழுமையாக நிறைவேற்றுங்கள்' என்று கூறுகின்றான். நோன்பு என்பது சும்மா பசித்திருப்பதல்ல, அது ஒரு இறைவணக்கம். எனவே அதை நாம் மிக கவனமுடன் மிகச்சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

    'நோன்பு ஒரு கேடயமாகும். தவறான பேச்சு பேச வேண்டாம். யாராவது உம்மிடம் சண்டைக்கு வந்தால் `நான் நோன்பாளி' என்று அவரிடம் கூறிவிடவும்' (நூல்: புகாரி)

    நோன்பின் மூலம் பசித்திருப்பதால் ஏழ்மையின் வழி உணரப்பட்டு, ஏழை, வறியவர், அநாதை, என்று தேவையுள்ளவர்களைத் தேடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதை நோன்பு கற்றுக்கொடுக்கிறது.

    இப்படியாக இந்த நோன்புக்குள் எண்ணற்ற நன்மைகள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக கடைசி பத்து நாட்கள் மிகவும் முக்கியமானவை. அதனால் தான் "ஆயிரம் மாதங்களுக்கு நிகரான நன்மைகளை வழங்கும் 'லைலத்துல் கத்ர்' எனும் புனித இரவு இந்த இறுதி பத்து நாட்களில் தான் அடங்கி இருக்கிறது. அதை நீங்கள் தேடிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.

    இதனால் தான் இஃதிகாப் (தனித்திருத்தல்) என்ற அமலை இஸ்லாம் அறிமுகம் செய்திருக்கிறது என்பது இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.

    சமுதாய சமநிலைத் திட்டங்களைக் கற்றுத்தரும் புனித ரமலான் நோன்பைப் புரிந்து முழு உலகிலும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வாழ்வாங்கு வாழ்வோமாக.

    • உன்னத படைப்பாக மனிதன் திகழ்கின்றான்.
    • திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.

    இறைவன் எண்ணற்ற படைப்புகளை இந்த உலகில் படைத்துள்ளான். அவற்றில் உன்னதப் படைப்பாக மனிதன் திகழ்கின்றான். எந்தபடைப்புக்கும் கொடுக்காத ஒரு தனித்துவத்தை மனிதப் படைப்புக்கு இறைவன் கொடுத்துள்ளான். அதுவே சிந்திக்கும் திறனும், ஆற்றலும். சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தும் மனிதன் மனம்போன போக்கில் அலைகிறான். இறை கட்டளைகளுக்கு மாற்றமாக நடக்கின்றான்.

    உலகத்தின் மீது கொண்டிருக்கும் மோகம் தான் சிந்தனைத் திறன் பழுதடைவதற்குக் காரணம். இதனால் மறுமையை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

    அல்லாஹ் கூறுகின்றான்: ``பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளி நிறைந்த பெருங்குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது". (திருக்குர்ஆன் 3:14)

    உலக ஆதாயங்களையே குறிக்கோளாகக் கொண்டு அனேகமானோர் அலைந்துகொண்டிருப்பதற்கான காரணம் இதுதான். மறுமை எனும் புதையலை அடைந்துகொள்ள வேண்டுமெனில் இம்மை வாழ்வில் சரியான விளைச்சலை நாம் விதைக்க வேண்டும். இது கட்டாயம்.

    ஆனால் நம்முடைய தேடலும், சிந்தனையும் இம்மையை மையமாகக் கொண்டே சுழல்வதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.

    நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம் கொசுவின் இறக்கை அளவுக்கு ஈடாக இருக்கும் என்றிருந்தால், அவனை நிராகரிக்கும் நிராகரிப்பாளருக்கு அவன் ஒரு மிடர் தண்ணீரைக் கூட அருந்துவதற்குக் கொடுத்திருக்க மாட்டான்". (நூல்: அஹ்மத்)

    இதன் அடிப்படையில் எது குறித்து அதிகமாக சிந்திக்க வேண்டும் என்பதை இந்த நபிமொழி அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. ஆகவேதான் மற்றொரு முறை நபி (ஸல்) கூறினார்கள்: "எவன் இம்மையை நேசிக்கிறானோ அவன் தன் மறுமையை அழித்துக்கொள்வான்.

    எனவே மக்களே! நீங்கள் அழிந்துவிடக்கூடிய வாழ்க்கைக்குப் பகரமாக, நிலையான வாழ்வையே தேர்ந்தெடுங்கள். அதாவது மறுமையை உங்கள் குறிக்கோளாய் ஆக்கிக்கொள்ளுங்கள்".

    இதனையே அல்லாஹ் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றான்: "(நபியே!) நீர் கூறும்: "இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு.

    அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள். அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:15)

    மனிதனின் சிந்தனைதான் செயல்வடிவமாக மாறுகிறது. அதன் அடிப்படையில்தான் அவன் தன் வாழ்வையும் அமைத்துக்கொள்கிறான். நன்மையான விஷயங்கள் குறித்து சிந்தித்தால் நன்மைகளைச் செய்வான். தீமைகளை சிந்தித்தால் துர்பாக்கியமே மிஞ்சும். சிந்தனையின் சிறப்பு குறித்து இறைவன் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையாக அறிவுறுத்துகிறான்.

    "நபியே! இவர்களிடம் கூறும்: "நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன். நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித்தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்" (திருக்குர்ஆன் 34:46)

    "இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் இம்மை - மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன் 2:219,220)

    "அவர்கள் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்". (திருக்குர்ஆன் 4:82)

    மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மதங்கள் சில வரையறைகளை வைத்திருக்கலாம். ஆனால் இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக அறிவுறுத்தி வழிகாட்டுகிறது, கற்றுக்கொடுக்கின்றது.

    கற்றுக்கொள்வதன் மூலமும், கற்றுக்கொடுப்பதன் மூலமும் மட்டுமே மனிதன் பகுத்தறிவு கொண்டவனாக மாறுகின்றான். அந்த பகுத்தறிவுதான் அவனை சிந்திக்க வைக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நல்ல சிந்தனையும் ஒரு வணக்கமே. நல்ல சிந்தனைதான் அடிப்படையில் இருந்தே ஒரு மனிதனை மாற்றுகிறது. எனவே சிந்தித்து செயல்படுவோம்!

    • காதல் என்பது ஓர் அபரிமிதமான நேசம்.
    • மார்க்கம் சொன்ன வழியில் திருமணம் செய்வதுதான் அழகு.

    காதல், முறை தவறிய உறவுகள் போன்றவற்றில் சிக்கி இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடும் அவலம் அதிகமாக காணப்படுகிறது. காதல் என்பது ஓர் அபரிமிதமான நேசம். அந்த நேசத்தைக் கண்டறிவது அரிதிலும் அரிதாக மாறிவிட்டது. தூய அறிவாலும், மாசற்ற உள்ளத்தாலும் உணர்வெழுச்சி பெற்று ஒருவரை ஒருவர் நேசிப்பது இன்று மிகமிகக் குறைவே.

    காதல் என்ற பெயரில் நடப்பதெல்லாம் உடல் மீதான வேட்கையே. பெரும்பாலான காதலர்களின் வாழ்வு, திருமணத்திற்குப் பின் ஜொலிக்காமல் இருப்பதற்கான காரணம் இதுதான். சமூகத்தில் பரவி நிற்கும் `ஓடிப்போதல்' என்ற நோய்க்கு பெரும்பாலும் இந்த உடல் வேட்கையே காரணமாக அமைந்துள்ளது.

    அதே சமயம் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை உடல் வேட்கையின்றி உண்மையாகவே திருமணம் செய்துகொள்ள விரும்புவதில் தவறேதும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் இதற்கான உதாரணங்கள் பல உள்ளன.

    அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்கும் முன்பு, ஓர் இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவரைத் திருமணம் செய்துகொள்வதாக அந்தப் பெண் உறுதியளித்தார். பிறகு அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்று, அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொண்டார் என்பது வரலாறு.

    தனிமையில் சந்தித்தல்

    அந்நிய ஆணும், அந்நிய பெண்ணும் தனித்திருப்பதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. திருமண உடன்படிக்கை நடக்காதவரை மணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் அந்நியப் பெண்ணே. திருமணம் செய்வதற்காக அவளைப்பார்ப்பதற்கு மட்டுமே இஸ்லாம் அனுமதி வழங்கி உள்ளது. எனவே மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டதாகவே தொடர்ந்து இருக்கும்.

    நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் எவரும் ஓர் அந்நியப் பெண்ணுடன் - அப்பெண் திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட (மஹ்ரம்) எவரும் உடன் இல்லாதபோது - தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான்". (நூல்: அஹ்மத்)

    தனித்திருப்பதால் ஏற்படும் ஆபத்து

    மக்களில் பலர் தங்களது குடும்ப பெண்களை, திருமண ஆலோசனை மட்டுமே நடந்த அந்நிய ஆடவருடன் தனிமையில் இருப்பதற்கும், மனம்போன போக்கில் பேசிப்பழகவும், ஊர் சுற்றுவதற்கும் அனுமதிக்கின்றனர். இதன் பிரதிபலன் என்னவென்றால், பெண்ணுக்கு அவளுடைய கண்ணியம், மரியாதை, சில சமயம் கற்பும் நஷ்டமடைகின்றது.

    இன்னும் சிலர் நேர்மாறாக உள்ளனர். திருமண ஆலோசனை வேளைகளிலோ, பெண் பார்க்கும் போதோ தன்னுடைய பெண் பிள்ளைகளை மற்றவர்கள் பார்ப்பதற்குக்கூட அனுமதிப்பதில்லை. முதல் இரவில் தம்பதிகள் ஒருவரையொருவர் பார்ப்பதைத்தவிர அதற்குமுன் பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதே இவர்களுடைய வாதம். முதன்முதலாக அந்த இரவில் திடீரென ஒருவரையொருவர் சந்திக்கும்போது மனதில் தோன்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக இருந்து விட்டால் அதுவே நிரந்தர கருத்து வேற்றுமைக்கும், பின்னர் பிரிவுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.

    திருமணமே அழகு

    பெரும்பாலும் பெற்றோர்களின் அலட்சியப் போக்கு, வறுமை, ஒழுக்கமின்மை என்பவை தவறுகளுக்கான காரணங்களாகத் திகழ்கின்றன. வயது வரும்போது அந்தந்த பருவத்திற்கே உரிய உணர்வுகள் உடலில் தோன்றுவது இயல்புதான். அவை கட்டு மீறாது, ஒழுங்குபடுத்தி மார்க்கம் சொன்ன வழியில் திருமணம் செய்வதுதான் அழகு.

    மனிதன் தனது பாலுணர்வையும், இச்சையையும் தீர்த்துக் கொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறையே திருமணம். மன உளைச்சலில் இருந்து மனிதனை அது தடுக்கிறது. பதற்றத்தில் இருந்து மனித மனங்களை சாந்தப்படுத்துகிறது. தடை செய்யப்பட்டவற்றை (ஹராமான) பார்க்கும் மனோபாவங்களில் இருந்து உள்ளங்களை அது திருப்புகிறது. இறைவன் அனுமதித்த வழிமுறையின் மூலம் அன்பும் மனநிறைவும் அடையும்படிச் செய்கின்றது.

    திருக்குர்ஆன் இதனையே பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது: "மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக!

    மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன". (திருக்குர்ஆன் 30:21)

    குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒருபோதும் கிடைப்பதில்லை. தற்காலிக இன்பத்திற்காக நிலையான இன்பத்தை இழந்து விடுவதும் மூடத்தனம். ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு திருமணத்தைவிடச் சிறந்த உறவு எதுவுமில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது புனிதமானது. அது ஓர் அறச்செயல். அதனை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளாமல் மணம் செய்து காதல் செய்வதே உகந்தது. அழகான பெண்ணை அல்லது ஆணை அடைவதல்ல காதல். அடைந்த மனைவியை அல்லது கணவனை அழகாக நேசிப்பதே காதல்.

    • மனிதனின் வாழ்க்கை மகத்தானது.
    • பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

    உயிரினங்களில் மனிதனின் வாழ்க்கை மகத்தானது, அந்த மகத்துவத்தை நாம் வீணாக்கி விடக்கூடாது. நமது வாழ்க்கையை நாம்தான் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

    இன்றைக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு மூல காரணமே பொறுப்புகளை உணர்ந்து நடக்காததுதான். இதனால்தான் நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள்:

    "நீங்கள் அனைவருமே பொறுப்பாளர்கள்தான். உங் கள் பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விசாரணை செய்யப் படுவீர்கள். தலைவர் ஒரு பொறுப்பாளர், கணவன் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளர், மனைவி தன் கணவனுக்கும், தம் பிள்ளைகளுக்கும் பொறுப்பாளி. ஆக ஒவ்வொருவரும் பொறுப்பாளர்தான். நீங்கள் அனைவருமே உங்களது பொறுப்புகளைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்". (நூல்: புகாரி)

    சுய நலம் சுருங்கி பொது நலம் விரியும்போதுதான் பொறுப்புகள் தானாகவே வரத் தொடங்கி விடும் என்பதை பின்வரும் வரலாற்றுச் செய்தி சுட்டிக் காட்டுகிறது:

    "சுலைமான் நபியின் ராணுவம் வெகுதூரத்தில் வருவதை உணர்ந்து கொண்ட தலைமை எறும்பு பொறுப்புணர்வுடன் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இப்படிப் பேசியதாம், 'எறும்புகளே... நீங்கள் உங்களது புற்றுகளுக்குள் புகுந்து கொள்ளுங்கள். சுலைமானும், அவரது படையினரும் சற்றும் அறியாமல் உங்களை உறுதியாக மிதித்து நசுக்கி விடவேண்டாம்". (திருக்குர்ஆன் 27:18)

    ஆறறிவற்ற ஒரு எறும்பு தன் இனத்தைக் காப்பதில் கண்ணும் கருத்துமாக பொறுப்புணர்வுடன் இருந்திருக்கிறது என்பதைத்தான் இதிலிருந்து நாம் விளங்க முடிகிறது. எதையும் முன்கூட்டியே கணிக்கும் இத்தகைய பொறுப்புணர்வு உள்ளவர்கள்தான் இன்றைக்கு தேசம் முழுவதும் தேவைப்படுகிறார்கள்.

    மனம் எப்போதும் தீமையைத்தான் தூண்டிக் கொண்டிக்கும். இதனால்தான் நபிகள் நாயகம் சொன்னார்கள்: 'நடைபாதையில் கிடக்கும் நோவினைப் பொருட்களை அகற்றுவதும் இறை விசுவாசத்தின் ஓர் அங்கம்'.

    தங்களுக்கான பொறுப்புகளை ஒவ்வொருவரும் சரியாக செய்தாலே போதும் உலகத்தின் எல்லா செயல்பாடுகளும் மிகச்சரியாக இயங்க ஆரம்பித்து விடும்.

    திருக் குர்ஆன் கூறுகிறது:

    `மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட தீயசெயல் களின் காரணத்தால் கடலிலும், தரையிலும் `நாசமும், குழப்பமும் தோன்றின. தீமைகளில் இருந்து அவர்கள் திரும்பி விடும் பொருட்டு' அவர்கள் செய்தார்களே தீவினைகள்; அவற்றில் சிலவற்றை இவ்வுலகிலும் அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்கிறான்'. (திருக்குர்ஆன் 30:41)

    `என் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லையில் எங்கோ ஓரிடத்தில் ஆடொன்று பாதிக்கப்பட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு' என்று கலீபா உமர் சொன்னது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது. இன்றைக்கு இத்தகைய பொறுப்பாளர்கள்தான் மிகஅதிகமாக நாட்டுக்கு தேவைப்படுகிறார்கள்.

    ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன...? அவரவர் தமக்குரிய பொறுப்புகளை மறந்து `இதற்கு நான் பொறுப்பல்ல... இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை... அவர்தான் அதற்கு பொறுப்பு... எனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது...' என்றெல்லாம் சொல்வதுண்டு.

    பொறுப்பு என்பது தட்டிக்கழிப்பதல்ல, எதையும் தைரியமுடன் எதிர்கொள்வதுதான் உண்மையான பொறுப்பு. இறைநம்பிக்கையும், மனவலிமையும் உள்ளவர்களால்தான் எந்தப் பொறுப்பையும் துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.

    'எவர் தமது இரு தாடைக்கும், தொடைக்கும் மத்தியில்உள்ளவைகளுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவர் சுவனத்தில் நுழைவதற்கு நான் முழுப்பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்' என நபிகள் நாயகம் சொல்லியதன் பொருளையும், அதன் பொறுப்பையும் நாம் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டும்.

    ஏனெனில் இந்த இரண்டும் தான் பெரும்பாலான பிரச்சினை களுக்கு முதன்மைக் காரணமாக இருக்கிறது. அதில் இருந்து விலகி சற்று பாதுகாப்பாக இருப்பது என்பது சிரமமான ஒன்றுதான். அந்த சிரமத்தை எவர் பொறுப்புடன் ஏற்றுக்கொள்கிறாரோ அவருக்குத் தான் அந்த சொர்க்கம் தயாராக இருக்கிறது. அதை பெற்றுத்தருவதற்கு நானும் தயாராக இருக்கிறேன் என்று நபிகள் நாயகம் தைரியமாகச் சொன்னார்கள்,

    குழந்தைப் பருவத்தில் இருந்தே நமது பிள்ளைகளுக்கு பொறுப்பு என்றால் என்ன? அதை எப்படி நிறைவேற்ற வேண்டும்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும், நாம் அவற்றை செய்து காட்டவும் வேண்டும்.

    ஒரு முறை, 'இந்தக் குழந்தைக்கு ஹஜ் கடமையா?' என்று ஒருவர் நபிகள் நாயகத்திடம் கேட்டபோது சட்டென `ஆம்' என்று சொன்னார்கள். காரணம், அந்தப் பிள்ளைக்கு அதற்கான பொறுப்புணர்வை குழந்தைப் பருவத்திலேயே ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான். இதே போன்று தான் `ஏழு வயதில் உங்கள் பிள்ளைகளை தொழ ஏவுங்கள். பத்து வயதில் தொழுகையை விட்டதற்காக அடியுங்கள்' என்றும் சொன்னார்கள்.

    இன்றைக்கு நமது பிள்ளைகளை எப்படி வளர்த்து வருகிறோம் என்பதுடன், நாம் எப்படி வாழ்ந்து வருகிறோம் என்பதும் சிந்தித்துப் பார்க்கத்தக்கது. பொறுப்பாக நடப்பது மட்டும் பொறுப்பல்ல, பொறுப்பில்லாமல் சிலர் நடக்கும் போது அதை சரிசெய்வதும் கூட இன்னொரு வகையான பொறுப்புதான். சொல்லப்போனால் தவறுகளை சரிசெய்வதுதான் பெரும் பொறுப்பு.

    வாருங்கள் நமது பொறுப்புகளை உணர்வோம்...! பிறரது உணர்வுகளை மதிப்போம்...!

    • எண்ணற்ற உயிரினங்களை படைத்து பரிபாலித்து வருகின்றான் இறைவன்.
    • இறைவன் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியம்.

    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தனது சக்தியால், அருள் வளத்தால் எண்ணற்ற உயிரினங்களை படைத்து பரிபாலித்து வருகின்றான். அவனது அருட்பார்வையின் மூலம் மட்டுமே அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழ முடியும். இந்த உலக வாழ்க்கை மட்டு மின்றி மரணத்திற்கு பிறகு வரும் மறுமை வாழ்விலும் அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே பாவமன்னிப்பு கிடைக்கும்.

    எனவே இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் பாதுகாப்போடு நமது வாழ்வை அமைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் வழிகாட்டுகின்றன. அது குறித்து காண்போம்.

    இறைவனின் நெருக்கத்தையும், அருளையும் பெற வேண்டும் என்றால் முதலில் நமது சிந்தனையில், செயல்களில் இறையச்சம், இறை உணர்வு வெளிப்பட வேண்டும். இறைவன் காட்டிய வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியம். இதற்காக நாம் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்து அவனை புகழ்வது அவசியம்.

    அல்லாஹ் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ, அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன்.

    அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன்.

    அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்". (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி) அல்லாஹ்வின் நல்லடியார்களே, ஏக இறைவன் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை மேற்கண்ட இந்த நபி மொழி மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். இதையே திருக்குர்ஆன் (2:152) வசனமும் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது:

    "அல்லாஹ் கூறுகின்றான், நீங்கள் என்னை நினைவு கூருங்கள்; நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்".

    இறைவனை நினைவு கூர்வது கடினமான செயல் அல்ல. மிக மிக எளிய செயல். ஆனால் நம்மில் பலர் மற்ற பல சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும், பயனில்லாத காரியங்களுக்கும் அதிக நேரம் செலவிடுகின்றோம். குறிப்பாக மொபைல் போன்கள் பார்ப்பதிலும், அதில் உள்ள தீய நிகழ்வுகளை காண்பதிலும் ஆர்வமாக உள்ளோம். இன்னும் சிலர் இரவுகளில் நீண்ட நேரம் விழித்திருந்து சமூக வலைத்தளங்களில் தங்கள் பொன்னா நேரத்தை வீணடிக்கின்றார்கள்.

    இந்த செயல்களால் வீணாகப்போவது அவர்களது நேரம் மட்டுமல்ல. அவர்களின் மன நலமும், உடல் நலமும் கெட்டுப்போகின்றது.

    இன்னும் சிலர் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில், குடும்பத்தை குலைக்கும் காட்சிகள் கொண்ட தொடர்களில் தங்களை தொலைத்து நிம்மதி இழக்கின்றனர்.

    இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற தொலைபேசி, தொலைக்கட்சிகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் சில மணித்துளிகளை ஒதுக்கி இறைவனை நினைவுகூர்ந்து பாருங்கள். உங்கள் உள்ளம் இறையச்சத்தால் ஒளி பெறும். இறைவனின் அருட்கொடையும், பாதுகாப்பும் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தின் மீதும் அருவியாய் கொட்டும்.

    இதற்கு ஆதாரமாக விளங்கும் இந்த நபி மொழியைக்காண்போம்...

    "அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். அவை:

    1) நீதி மிக்க ஆட்சியாளர்.

    2) இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

    3) தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.

    4) பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்ளும் உள்ளம் உடையவர்.

    5) இறை வழியில் நட்பு கொண்ட இருவர்.

    6) அந்தஸ்தும் அழகும் நிறைந்த ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்" என்று கூறியவர்.

    7) தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் ரகசியமாகத் தர்மம் செய்தவர்"என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி). "நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் என்று திருக்குர்ஆன் (2:153) குறிப்பிடுகின்றது.

    எனவே, இறைவனின் நல்லடியார்களே நாம் தினமும் அல்லாஹ்வை நினைவு கூர்வோம், அவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அந்த இறைவனின் பாதுகாப்பையும், அருள் வளத்தையும் பெறுவோம், ஆமின்.

    • இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.
    • இறுமாப்பு போன்ற குணங்கள் இல்லாமல் மனிதன் வாழ வேண்டும்.

    இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்று, அதன் வழி நடந்து நன்மைபெறும் வகையில் அதன் சிறப்புகள் அமைந்துள்ளன. ஏக இறைவன் அல்லாஹ் அனைத்து தரப்பு மக்களும் நல்வழி அடைய தனது கருத்துக்கள் நிறைந்த திருக்குர்ஆன் மூலம் வழிகாட்டுகின்றான். மனிதனின் மனதில் மறைந்திருக்கும் தீய குணங்களை அகற்றி நற்குணங்களை போதிப்பதில் திருக்குர்ஆன் தீவிரம் காட்டுகின்றது.

    ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது, உற்றார்களையும் உறவுகளையும் அவன் எப்படி பேணி நடக்க வேண்டும் என்பது உள்பட அவனது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் விளக்கிக் கூறுகிறது. உலகில் உள்ள மனித குலம் முழுமைக்கும் தேவையான, பயன்தரும் வழிகாட்டுதல்களும், கருத்துக்களும் திருக்குர்ஆனில் ஏராளம் நிறைந்துள்ளது.

    அதில் குறிப்பிடத்தக்கது தற்பெருமை, அகந்தை, தன்னைவிட உயர்ந்தது எதுவும் இல்லை என்ற இறுமாப்பு போன்ற குணங்கள் இல்லாமல் மனிதன் வாழ வேண்டும் என்பதாகும்.

    ஒரு மனிதன் 4 காரணங்களால் பெருமை கொள்கிறான். அவை:

    1) தான் அடைந்த கல்வி,

    2) தான் பெற்ற செல்வம்,

    3) தனக்கு கிடைத்த பதவி, அதிகாரம்,

    4) தான் பெற்ற மக்கட் செல்வம்.

    இந்த நான்கும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும்போது அவன் இதற்காக பெருமைப்படக்கூடாது. இறைவனின் அருளால், இறைவனின் நாட்டத்தால் மட்டுமே தனக்கு இத்தகைய சிறப்புகள் கிடைத்துள்ளன என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இதைமீறி அவன் பெருமை கொண்டு, தலைக்கனம் பிடித்து நடந்து கொண்டால் இறைவனிடம் இருந்து வரும் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்க நேரிடும்.

    கல்வி

    `கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். அதன்படி சிறப்புகள் கிடைக்கும் போது அவர் அதை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் போற்றப் படுவார். அதேநேரத்தில் அவர் கல்விச்செருக்குடன் பண்பில்லாமல் நடந்து கொண்டால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். என்ன தான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நல்ல பண்புகள் இல்லை என்றால் அந்தக்கல்வியினால் அவருக்கு சிறப்பும், பலனும் கிடைக்காது. ஒருவேளை சிறப்புகள் கிடைத்தாலும் அது நிலைக்காது.

    இதையே திருக்குர்ஆன் (2-269) இவ்வாறு கூறுகின்றது: "தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) எராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெற மாட்டார்கள்."

    செல்வம்

    செல்வம் சேரச்சேர செருக்கும், ஆணவமும் சேர்ந்தே வளரும். பணம் பகட்டையும், அகந்தையையும் அதிகரிக்கும். மற்றவர்களை மதிப்பின்றி நடத்த தூண்டும். செல்வத் தால் விரும்பியதை வாங்கிவிடலாம் என்ற அகந்தை தோன்றும். எனவே செல்வம் சேரும் போது, `இறைவனின் அருளால் இந்த செல்வம் கிடைத்துள்ளது. இதை இறைவன் காட்டும் வழியில், நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். மனிதனுக்கு செல்வம் ஒரு சோதனையாகும் என்பதை இந்த நபி மொழி மூலம் அறியலாம்.

    `ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனை யாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அஹ்மத்)

    அதிகாரம்

    பதவியும், அதிகாரமும் வரும்போது பணிவு வர வேண்டும். நமக்கு கிடைத்த பதவி, அதிகாரத்தை பயன் படுத்தி மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு, ஆணவத் துடன் நடந்து மக்களை வாட்டி வதைத்தால் அதற் குரிய தண்டனை கிடைத்தே தீரும்.

    இதற்கு உதாரணமாக எகிப்தை ஆண்ட மன்னன் பிர் அவ்ன் ஆட்சியை குறிப்பிடலாம். ஆட்சி அதிகாரத்தின் மூலம் மக்களை கொடுமைப்படுத்தியதால் அவனும் அவனது படைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.

    அதுபோல ஒரு மனிதனிடம் பணம், செல்வாக்கு எது இருந்தாலும் அவனது மரணத்திற்கு பிறகு எதுவும் அவன் கூட வருவதில்லை. உயிரற்ற அவன் உடல் மட்டுமே அடக்கம் செய்யப்படும்.

    மக்கட் செல்வம்

    இறைவனின் அருட்கொடைகளில் மக்கட் செல்வமும் ஒன்று. அதே நேரத்தில் அதுவும் சோதனைக்குரியது என்று திருக்குர்ஆன் (8:28) சுட்டிக்காட்டுகிறது.

    "நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும், (உங்களுக்குச்) சோதனையாயிருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்-அவனிடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான (வெகுமதி) நற்கூலி உண்டு என்பதையும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்".

    கல்வி, செல்வம், ஆட்சி அதிகாரம், மக்கட் செல்வம் என எத்தனை செல்வங்கள் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை இறைவன் வகுத்த வழியில் இருந்து விலகினால் அது துன்பத்தையே தரும். எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் வகுத்த வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்வோம், அல்லாஹ்வின் நல்லருள் பெறுவோம். ஆமின்.

    ×