என் மலர்
நீங்கள் தேடியது "India Embassy"
- என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
- சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி:
திருச்சியை சேர்ந்தவர் வீரமணி பாண்டியன் (வயது 45). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டுச் சென்றார். பின்னர் புதிய வேலையில் சேர்ந்த அவர் வேலை பிடிக்காமல் ஓரிரு தினங்களில் ஊர் திரும்ப முடிவு செய்தார்.
அதற்காக அவர் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சுமார் 2 மாத சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு சுய நினைவு திரும்பி உள்ளது. அதைத்தொடர்ந்து மீண்டும் ஊர் திரும்புவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் அவரது மருத்துவ செலவினத்தை பார்த்தபோது அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு 1.4 லட்சம் சவுதி ரியால்கள் மருத்துவ கட்டணமாக செலுத்தக் கூறி இருந்தது.
இது இந்திய ரூபாயின் பண மதிப்பில் ரூ.30 லட்சம் ஆகும். இப்போது அவர் சமூக ஆர்வலர் ஷாஹிப் என்பவரது பராமரிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, சம்பவம் நடந்தபோது சுயநினைவின்றி இருந்ததால், குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிப்பது வீரமணியின் விருப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.
மருத்துவமனையில் வீரமணி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அடையாளம் தெரியாத சிலர் மருத்துவமனை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளனர். வீரமணி கடந்த செப்டம்பர் 24-ந்தேதி நஜ்ரான் மினரல் வாட்டர் பாட்டில் ஆலையில் பணியில் சேர்ந்தார். இரண்டு நாட்களில் வேலை பிடிக்காததால் வீடு திரும்ப முடிவு செய்தார். அவரை பணியமர்த்திய ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு செல்ல அனுமதித்தார்.
இப்போது மீண்டும் ஊர் திரும்ப மருத்துவமனையின் அனுமதிக்காக வீரமணி காத்திருக்கிறார். உறவினர்களும் இந்திய தூதரகத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.
மருத்துவக்கட்டணத்தை செலுத்தாததால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் அவரை பத்திரமாக அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளளதோடு, அவரது வருகையை எதிர்பார்த்துள்ளனர்.
- கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- நிஜ்ஜார் கொலை பிரச்சனையை கனடா மீண்டும் கிளறியுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசின் தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்தியா- கனடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. விசா ஒப்புதல் உள்ளிட்ட சேவைகளும் சற்று காலத்துக்கு முடங்கின. பின்னர் இரு நாடு உறவும் சுமூகமாக சூழளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதுபோல் நிஜ்ஜார் கொலை பிரச்சனையை கனடா மீண்டும் கிளறியுள்ளது. அதாவது, நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்தியத் தூதருக்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்து உள்ளனர் என கனடா குற்றச்சாட்டை தெரிவித்தது.
இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்ததுடன், கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு இன்று சம்மன் அனுப்பி, அந்நாட்டிலுள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்பது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்தது.
இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப்பெறுவதாக தெரிவித்த மத்திய அரசு, ஸ்டீவர்ட் வீலர் உட்பட இந்தியாவில் உள்ள கனடாவுக்கான தூதர்கள் 6 பேரை வரும் 19 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.
- விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒட்டாவா:
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது. இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த தூதரக முகாம்களை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்துள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய தூதரகம் கூறும்போது,
"சமூக முகாம் அமைப்பாளர்களுக்கு பாதுகாப்பு ஏஜென்சிகள் தங்களது குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்க முடியாததால் திட்டமிடப்பட்ட சில தூதரக முகாம்களை ரத்து செய்ய துணைத் தூதரகம் முடிவு செய்துள்ளது. உள்ளூர் இணை அமைப்பாளர்களின் முழு ஒத்துழைப்புடன் எங்கள் துணைத் தூதரகங்களால் ஏற்பாடு செய்யப்படும் வழக்கமான தூதரகப் பணிகளுக்கு இதுபோன்ற இடையூறுகள் அனுமதிக்கப்படுவதைப் பார்ப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்திய குடிமக்கள் உள்பட விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
- அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர்.
- பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
மீட்கப்பட்டவர்களில் ஜம்மு காஷ்ரீரை சேர்ந்த 44 ஜைரீன்கள் அடங்குவர். இவர்கள் சைதா ஜைனாபில் சிக்கியிருந்தனர். சிரியாவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் கோரிக்கையை ஏற்கும் வகையில், அங்குள்ள பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்கும் பணிகளை டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டன. முதற்கட்டமாக 75 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், சில இந்தியர்கள் சிரியாவில் உள்ளனர்.
சிரியாவில் உள்ள இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற உதவி எண்ணிலும், வாட்ஸ்அப்பிலும், மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.