search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Pakistan war 1971"

    • பாகிஸ்தானிற்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையே 1600 கி.மீ. தூரம் உள்ளது
    • 13 நாட்களிலேயே பாகிஸ்தான் தோல்வியை ஒப்பு கொண்டு சரணடைந்தது

    1947ல் இந்தியா சுதந்திரமடைந்த போது நாடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டது.

    வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில் இந்தியாவிற்கும் மியான்மர் (அப்போதைய பர்மா) எல்லைக்கும் அருகில் 1947லிருந்து 1955 வரை இருந்த பிராந்தியம், கிழக்கு பாகிஸ்தான் (East Pakistan). இப்பிராந்தியம் பாகிஸ்தானின் வசம் சென்றது.

    பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் எதிர் திசையில் 1600 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானுக்கு எதிராகவும் தன்னாட்சி கோரியும் அந்த பிராந்தியத்தில் உள்ள மக்கள் வங்காள சுதந்திர போர் எனும் பெயரில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    1971, டிசம்பர் 3 அன்று கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திரமும் தன்னாட்சியும் கோரி போராடிய மாணவர்கள், பொதுமக்கள், விமர்சகர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் மீது பாகிஸ்தான் அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்தது.

    உயிரிழப்பிற்கு அஞ்சி பல லட்சம் கிழக்கு பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்தனர்.

    சுயாட்சி கோருபவர்களுக்கு இந்தியா மறைமுகமாக உதவுவதாக ஆபரேஷன் செங்கிஸ் கான் (Operation Chengiz Khan) எனும் பெயரில் டிசம்பர் 3 அன்று வான்வழியாக இந்தியாவில் 11 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    இதையடுத்து, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டவும், நம் நாட்டிற்குள் அகதிகள் வருவதை கட்டுப்படுத்தவும் கிழக்கு பாகிஸ்தானில் தன்னாட்சி மலர்வது அவசியம் என உணர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தான் அரசு மீது அதிகாரபூர்வமாக போர் தொடுத்தார். இதற்கான அறிவிப்பை நாட்டு மக்களுக்கு விடுத்து பதில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட ராணுவ நடவடிக்கைக்கு வழி வகுத்தார்.

    13 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த போரில் இந்தியாவிற்கு தொடக்கம் முதல் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதலை பாகிஸ்தானிய ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை.

    சுமார் 93,000 பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர். தோல்வியை ஒப்புக்கொண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது.

    இந்திய ராணுவத்தின் கிழக்கு ஆணைய பகுதியின் ஆணையர் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவிற்கும் (JS Arora) பாகிஸ்தான் கிழக்கு ஆணையத்தின் ஆணையர் ஏ.ஏ.கே. நியாசிக்கும் (AAK Niazi) இடையே பாகிஸ்தானின் சரணடையும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானை வங்காள தேசம் (Bangladesh) எனும் பெயரில் சுதந்திர நாடாக இந்தியா உருவாக்கியது. 3843 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 9 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்தனர்.

    ஆண்டுதோறும் நாடு முழுவதும் டிசம்பர் 16, விஜய் திவஸ் (வெற்றி திருநாள்) என கொண்டாடப்படுகிறது. இன்று புது டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வான்வழி, தரைவழி, கடல்வழி ராணுவ பிரிவுகளின் தலைவர்களுடன் மலர் தூவி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.


    ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் வீரர்களின் மகத்தான பங்கை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

    ×