என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India vs New Zealand"

    • விராட் கோலி, பெரிய சவாலை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்.
    • சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் அரையிறுதியில் மோதிய இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் சச்சின், தோனியை விட சேஸிங்கில் விராட் கோலி சிறப்பாக விளையாடுகிறார் என இந்திய அணி முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் பெரிய சவாலை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். அதில்தான் அவருக்கு ஆற்றல் கிடைக்கிறது. அவர் அந்த அழுத்தத்தில் விளையாட விரும்புகிறார். அவரை போல சில கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த குணம் உள்ளது.

    நாளின் இறுதியில் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அதை தோனி எந்தளவுக்கு செய்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் விராட் கோலி அதை செய்வதில் மற்ற அனைவரையும் விட ஒரு படி மேலே இருக்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எதிரணியையும் நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது.

    என்று கபில்தேவ் கூறினார்.

    • இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது.
    • நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளது. நியூசிலாந்து அணி எப்போதுமே இந்தியாவுக்கு ஐசிசி தொடரில் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இது அணிகளும் இதுவரை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இந்திய ஆறுமுறையும் நியூசிலாந்து அணியும், ஆறுமுறையும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

    இந்த சூழலில் இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கணித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுக்கும் எந்த மாதிரியான ஆடுகளம் கிடைக்கப்போகிறது என்பது குறித்து நன்றாக தெரியும். குறிப்பாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக துபாய் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் இந்தியாவுக்கு இது நிச்சயமாக சுலபமாக இருக்காது.

    ஆனால் இந்த தொடரை வெல்லும் அணியாக இந்தியா தான் நிச்சயம் இருக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்காது. இந்தியா 70% மற்றும் நியூசிலாந்து 30 சதவீதம் என்று கூட சொல்ல முடியாது. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து அணியும் பலமாக இருக்கிறது.

    இதேபோன்று நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார். அவரிடம் ஒரு நம்பிக்கையும் அமைதியும் இருக்கிறது. வில்லியம்சன் போல் அவரும் களத்தில் பதற்றமில்லாமல் இருக்கின்றார். அவருடைய இந்த இயல்பு நிச்சயம் அணிக்கு ஒரு பலமாக இருக்கும். களத்தில் அமைதியாக இருப்பதற்கும் சோம்பேறியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நியூசிலாந்து வீரர்கள் எல்லாம் அமைதியான வகையை சார்ந்தவர்கள்.

    என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

    • மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும்.
    • ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நடைபெறும் நாளில் அங்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

    இருப்பினும் இயற்கையை யாராலும் துல்லியமாக கணித்து விட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவேளை இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்..!

    போட்டி நடைபெறும் நாளன்று (9-ம் தேதி) மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும். ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

    ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள், போட்டியின் போது விளையாடும் ஆடுகளங்கள் வேறுபட்டவை.
    • அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது.

    ஒரே மைதானத்தில் (துபாய்) விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமானது என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள், மைக் ஆதர்டன், நாசர் உசேன் கூறி இருந்தனர். இதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சும் ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு உகந்தது என்று தெரிவித்து இருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி போட்டி முடிவில் இந்த விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் காம்பீர் பதிலடி கொடுத்து இருந்தார். அதே நேரத்தில் ஒரே மைதானத்தில் ஆடுவது உதவிகரமாக இருப்பதாக வேகப்பந்து வீரர் முகமது சமி தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் துபாயில் மட்டும் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷீ கோடக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா போட்டிகளில் வெற்றி பெறுவதை பார்த்த பிறகு, ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. போட்டியில் வெற்றி பெறுவதற்கு அன்றைய நாளில் அணிகள் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். நன்றாக விளையாடி வெற்றி பெற்றால், சாதகமாக இருக்கிறதா? இல்லையா? என்று பேச வேண்டிய அவசியமே இருக்காது.

    துபாயில் தங்கி பயிற்சி மேற்கொள்வதாலோ அல்லது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுவதாலோ எங்களுக்கு ஆதாயம் இருப்பதாக நினைக்கவில்லை. நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள் வித்தியாசமானவை, போட்டியின் போது விளையாடும் ஆடுகளங்கள் வேறுபட்டவை. அது அனைவருக்கும் தெரியும். அதனால் எங்களது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை.

    இவ்வாறு கோடக் கூறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை மோதுகின்றன.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது ஒருநாள் போட்டியாகும்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலமுறை மோதியிருக்கின்றன.

    1975-ம் ஆண்டு முதல் நடந்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 10 முறை கோதாவில் குதித்துள்ளன. இதில் இரு அணியும் தலா 5-ல் வெற்றி கண்டு இருக்கின்றன. இவற்றில் இரண்டு நாக்-அவுட் ஆட்டங்களும் அடங்கும்.

    2019-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த அரைஇறுதியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை கூட எடுக்க முடியாமல் இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோற்றது. முன்னாள் கேப்டன் தோனி அரைசதம் (50 ரன்) அடித்தார். இது தான் தோனியின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

    இதற்கு 2023-ம் ஆண்டு உலகக்கோப்பையில் மும்பை வான்கடேயில் நடந்த அரையிறுதியில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பை 'நாக்-அவுட்' சுற்றில் ஒரு அணி எடுத்த மெகா ஸ்கோர் இது தான். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்னில் அடங்கியது.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. 2000-ம் ஆண்டு நைரோபியில் நடந்த இறுதி சுற்றில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 264 ரன்கள் சேர்த்தது. கேப்டன் சவுரவ் கங்குலி சதமும் (117 ரன்), சச்சின் டெண்டுல்கர் அரைசதமும் (69 ரன்) அடித்தனர்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து 132 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய போது, ஆபத்பாந்தவனாக வந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ் சதம் (102 ரன்) விளாசி தங்கள் அணிக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நியூசிலாந்து 49.4 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நாள் வரைக்கும் 50 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வென்ற ஒரே ஐ.சி.சி. கோப்பை இதுதான்.

    2-வது முறையாக தற்போதைய சாம்பியன்ஸ் கோப்பை லீக்கில் எதிர்கொண்டது. இதில் நியூசிலாந்தை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அட்டகாசப்படுத்தினார்.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் மோதியதில் 6-ல் நியூசிலாந்தும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது.

    இதில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்ததும் அடங்கும்.

    குறுகிய வடிவிலான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் 3 முறை பலப்பரீட்சை நடத்தி இருக்கின்றன. மூன்றிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    2007-ம் ஆண்டு சூப்பர்8 சுற்றில் இந்தியா 10 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. என்றாலும் அந்த உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி வரலாறு படைத்தது.

    2016-ம் ஆண்டில் சூப்பர் 10 சுற்றில் இந்தியா 79 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. 2021-ம் ஆண்டில் துபாயில் நடந்த சூப்பர்12 சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்ததுடன் அரைஇறுதி வாய்ப்பையும் இழந்தது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை மோதுகின்றன. 2000-ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 119 ஆட்டங்களில் இந்தியா 61-ல் நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி 'டை'யில் முடிந்தது. 7 ஆட்டம் முடிவு இல்லை.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணிக்கு 19.5 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.9.75 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார்.

    இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.9.75 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது.
    ஜெய்ப்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

    இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி அங்கிருந்து நேரடியாக ஜெய்ப்பூர் வந்துள்ளது. இதேபோல் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணி ஜெய்ப்பூர் சென்று பயிற்சியில் ஈடுபட்டது.

    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனை அடுத்து 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியியின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நேர்த்தியாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி லீக் சுற்று ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் இறங்கும். ஆனால் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி நேரத்தில் 20 ஓவர் தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும். அவர் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்கு வசதியாக ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வரும் பெர்குசன் ஆடுவது சந்தேகம் தான்.

    நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளைன் பிலிப்ஸ் ஆகியோரும், பந்து வீச்சில் டிம் சவுதி, கைல் ஜாமிசன், சோதி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உலக கோப்பையில் வெளிப்படுத்திய உத்வேகத்தை தொடர நியூசிலாந்து அணி முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் உலக கோப்பையில் தங்களது அரையிறுதி வாய்ப்புக்கு ஆப்பு வைத்த நியூசிலாந்து அணிக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 6 முறையும், நியூசிலாந்து அணி 9 தடவையும் வென்று இருக்கிறது. ‘டை’யில் முடிந்த 2 ஆட்டங்களில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றியை ருசித்ததும் இதில் அடங்கும்.

    இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜெய்ப்பூரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிகிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணியின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், வெங்கடேஷ் அய்யர் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், மார்க் சாப்மன், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே அல்லது பெர்குசன், சோதி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 325 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்ததார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. #NZvIND
    ×