search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interim ban"

    சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SC #Daswanth
    புதுடெல்லி:

    சென்னை போரூரை சேர்ந்த ஹாசினி என்ற 7 வயது சிறுமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரை மாங்காடு போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதற்கிடையே தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொலை செய்து விட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர் அவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

    சிறுமி ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது.

    இந்த வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.

    தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை 11-ந்தேதி உறுதி செய்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இந்த அப்பீல் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு முடியும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும், ஒரு வேளை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் மனுவை விசாரணைக்கு ஏற்று இருக்க மாட்டோம் என்றும், மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #SC #Daswanth
    தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்களை உடனே அகற்ற உத்தரவிட்டனர். #Tanjoretemple #SriSriRaviShankar
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார்.

    தஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற உள்ளது.

    இது முற்றிலும் விதிமீறலாகும். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    மேலும் இந்த அமைப்பினர் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளனர். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்யுங்கள். அவசர வழக்காக 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர்.

    இதைத்தொடர்ந்து வெங்கட், மதுரை ஐகோர்ட்டில் அவசர மனுவினை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.



    அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்கள் உடனே அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர். #Tanjoretemple #SriSriRaviShankar

    நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தது. #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal
    புதுடெல்லி:

    நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் அணுத்துகள்களாகும்.

    இந்த அணுத்துகள்களை ஆய்வு செய்தால் சூரியன் மற்றும் நியூட்ரினோதுகள்களின் ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் மலைப் பகுதியில் மிகப்பெரிய ஆய்வு கூடம் அமைத்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவும் இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தேவாரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருக்கும் பொட்டிபுரம் கிராமம் அருகே ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்காக மலைக்கு அடியில் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்தும் முயற்சிகள் கடந்த 2015-ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்டன.

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை அமைத்தால் தங்கள் ஊர்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தேனி மாவட்ட நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த அமைப்பு தனது மனுவில், “நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பொது மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தது.

    கடந்த மாதம் 5-ந்தேதி இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது நீதிபதிகள் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசு, மற்றும் டாடா நிறுவனம் ஆகியவை எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



    அதன்பேரில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எழுத்துப் பூர்வ தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த மாதம் 9-ந்தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    அப்போது தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜராகி வாதாடினார். அதன்பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர ரத்தோர் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை வெளியிட்டது.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தேனியில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு இடைக்கால தடை விதித்தனர். தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:-

    தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை அமைக்க வேண்டுமானால் வனவிலங்கு வாரியத்தின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும். தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த ஆய்வு திட்டத்தை அங்கு செயல்படுத்த இயலாது.

    நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனவிலங்குகளுக்கு எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால தடை நீடிக்கும்.

    அந்த ஆய்வு பணிகள் முற்றிலும் முடிந்தபிறகே நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தடை விதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும். தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆய்வு பணிகள் முடிவடையாத காரணத்தால் மத்திய அரசு அளித்து இருக்கும் அனுமதியை ரத்து செய்ய இயலாது.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்து இருப்பதால் பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் தெரிவித்து இருக்கிறார்கள். என்றாலும் இந்த ஆய்வு திட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    ஆனால் இந்த திட்டத்தால் அந்த பகுதிகள் சர்வதேச அளவுக்கு மிகப்பெரிய மேம்பாட்டை அடைய முடியும் என்று அதிகாரிகள் கூறி வருகிறார்கள். அதற்கேற்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal
    தமிழக முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    புதுடெல்லி:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.


    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டதும் டெண்டரை ரத்து செய்யாமல் வழக்கு தொடர்ந்தது ஏன்? என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும், முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு குறித்த புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர். மேலும் வழக்கு விசாரணையையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் 2011-12-ம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வதற்காக கணக்கு விவரங்களுடன் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    ஆனால், வரி கணக்கை மீண்டும் கணக்கிடுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். அதில், தான் முறையாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்திருப்பதால், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார்.



    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு நீதிமன்றம்  தடை விதித்தது. இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2009-2010, 2010-11ம் ஆண்டுகளுக்கான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வது தொடர்பாக அனுப்பிய நோட்டீஸ்களை ஏற்கனவே உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதுபோல் இருப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அதை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ண வள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்தும், இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர், அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

    மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. #MaduraiAdheenam #Nithyananda
    மதுரை:

    மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்கி மதுரை ஆதீனம் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஜெகதல பிரதாபன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், ஆதீனத்தையும், சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கத்தில் நித்யானந்தா செயல்படுகிறார். அவர் மதுரை ஆதீனத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    மேலும் வழக்கு விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை இல்லை. #MaduraiAdheenam #Nithyananda
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #pchidambaram #AircelMaxisCase #CBI
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்க துறையும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் அலுவலகம், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்து இருந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக பலமுறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனை கார்த்தி சிதம்பரம் நிராகரித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் நேரில் ஆஜராவது தேவையற்றது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் 2ஜி தொடர்பான வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் ஏர்செல் மேக்சிஸ் நிறுவனத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கான பங்குகள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.


    இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ப.சிதம்பரத்தை ஜூன் 5-ந்தேதிவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.

    ஜூன் 5-ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்று ப.சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.
    ×