என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "isha yoga Centre"

    • "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" இன்று நடைப்பெற்றது.
    • சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" சேலம் பத்மவாணி கல்லூரியில் இன்று நடைப்பெற்றது.

    இவ்விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், "இயற்கை விவசாயம் மண் வளத்தை மட்டுமல்ல மனித குலத்தையும் வளமாக்குகிறது" என பேசினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. இது மண் வளம் பற்றியது மட்டுமல்ல மனித குலத்தின் வளமும் அதில் தான் இருக்கிறது. மனிதர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அதிகப்படியான கூட்டம் மருந்து கடைகளில், மருத்துவமனையில் இருப்பதை பார்க்க முடிகிறது.

    காரணம் மண் வளம் இல்லாமை. இன்றைய இயற்கை சீற்றங்கள் அனைத்திற்கும் நாம் தான் காரணம். 40 ஆண்டுகள் முன்பு கேன்சர் எங்கோ ஒருவருக்கு தான் இருந்தது.

    இன்று ஊரெங்கும் கேன்சர் மருத்துவமனை, மலட்டுத்தன்மை நீக்கும் மருத்துவமனை பார்க்க முடிகிறது. இதற்கு இயற்கையை காக்க வேண்டும், அதை காப்பதற்காக தான் ஈஷா அறக்கட்டளை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

    மண் வளத்தை பெருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இது உயர்ந்த நோக்கம் இதற்கு தலை வணங்குகிறோம், இதை ஈஷா மேலும் விரிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர்.

    அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (அக்.31) 75,000-க்கும் அதிகமான பக்தர்கள் கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.

    மேலும், சுற்றுவட்டார பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.
    • யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது.

    ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த தவத்திரு தருமபுரம் ஆதீனம் அவர்கள், 'யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை' என்று துவங்கும் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது என பாராட்டினார்.

    தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்றும் இன்றும் வருகை தந்தார். தியானலிங்கம் முன்பாக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வலர்களும் ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அப்போது, ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்களின் தேவாரப் பாடல்களை அவர் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

    பின்னர் அவர் தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்றார். முன்னதாக, சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். மேலும், ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையும் அவர் பார்வையிட்டார்.

    ஈஷாவிற்கு முதல்முறையாக வருகை தந்த ஆதீனம் அவருடைய அனுபவத்தை பகிர்ந்தார்.

    அப்போது அவர், "ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.

    "யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

    யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

    யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே" என்று திருமூலர் கூறிய 4 நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    திருமூலர், தாயுமானவர், பதஞ்சலி முனிவர் வரிசையில் நம்முடைய தருமை ஆதீனமும் யோக கலையை பயிற்றுவிக்கும் சேவையை செய்து வருகிறது. இக்கலையானது நம் சைவ சித்தாந்த மரபில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என 4 நிலைகளாக சொல்லப்படுகிறது. அத்தகைய மிகவும் அற்புதமான யோக கலையை சத்குரு அவர்கள் உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருவது பாராட்டுக்குரியது.

    அதேபோல், நம்முடைய மரபில் சிவபெருமானும் மரமும் ஒன்று. சிவ பெருமான் விஷத்தை தான் சாப்பிட்டுவிட்டு, அன்பர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை வழங்கினார். அதேபோல் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கார்பன் டை ஆக்ஸைடை உண்டுவிட்டு, மற்ற உயிர்களுக்கு உயிர் வாழ ஆக்சிஜைனை வழங்குகின்றன.

    அந்த வகையில், மரங்கள் வளர்க்கும் சேவையை சத்குருவும் ஈஷா யோக மையமும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர். நம்முடைய தருமை ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், தருமை ஆதீனம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து 60,000 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதுதவிர, நூற்றுக்கணக்கான நாட்டு பசுக்களை பராமரிக்கும் மிகப்பெரிய தொண்டையும் ஈஷா செய்து வருவதை நேரில் பார்த்து மகிழ்ந்தோம். ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளும் திருமுறைகளையும், தேவாரப் பாடல்களையும் மிக அழகாக பண்ணோடு பாடியது ஆச்சரியமாக இருந்தது. 

    அகத்திய முனிவர் தோற்றுவித்த அருகி வரும் களரி என்னும் பாரம்பரிய தற்காப்பு கலையையும் இம்மாணவர்கள் சிறப்பாக கற்று தேர்ந்து வருகிறார்கள். களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் முனிவர்களால் அருளப்பட்டவை. அதற்கான முழுமையான பயிற்சிக் களத்தையும் ஈஷா வழங்குகிறது. கராத்தே போன்ற சில நவீன முறைகளை நோக்கியே அனைவரும் செல்லும்போது நம் பாரம்பரியமான தற்காப்பு கலைகளை ஈஷா பேணி வருகிறது.

    திருவெண்காட்டில் உள்ள சூர்ய குண்டத்திலும், சோம குண்டத்திலும் கண்ணகி நீராடி விட்டு வழிபாடு நடத்தியதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஈஷாவிலும் சூர்ய குண்டம், சந்திர குண்டம் என 2 குளங்களில் ஆண்களும், பெண்களும் புனித நீராடிவிட்டு தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை வணங்கி வழிப்படுகின்றனர்.

    இப்படி, யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது. வாழ்க சத்குருவின் தொண்டு, வளர்க அவரின் பணிகள்." என மனதார வாழ்த்தி விடைப்பெற்றார்.

    மேலும் ஈஷாவின் பணிகளுக்கு திருமுறைகள் சிறுபஞ்ச மூலம் போன்ற பற்பல நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி ஒப்பிட்டு ஆசி நல்கினார்.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையையும் ஆதீனம் அவர்கள் இன்று ஆரத்தி காட்டி வழிப்பட்டு தொடங்கி வைத்தார்.

    கோவையில் வருகிற 4-ந்தேதி ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். #MahaSivarathiri #RamNathKovind
    கோவை:

    இந்திய கலாசாரத்தில் மகாசிவராத்திரி என்பது மிக முக்கியமான ஒரு நாளாகும். குறிப்பாக, ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு அவர்கள் உள்நிலையில் வளர்வதற்கு இந்நாள் பல்வேறு சாத்தியங்களை வழங்குகிறது.

    இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஷாவில் நடக்கும் மகாசிவராத்திரி விழா உலகின் பிரமாண்டமான மகாசிவராத்திரி விழாவாக கருதப்படுகிறது.

    அதன்படி, இந்தாண்டு, 25வது ஆண்டு மகாசிவராத்திரி விழா வரும் மார்ச் 4ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இவ்விழாவில் பாரத குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி, மகாசிவராத்திரி தினத்தன்று மாலை ஈஷா யோகா மையத்துக்கு வரும் அவர் சத்குருவுடன் தியானலிங்கத்தில் நடைபெறும் சக்திவாய்ந்த பஞ்ச பூத ஆராதனையில் கலந்துகொள்கிறார். மேலும், லிங்க பைரவி, சூர்ய குண்டம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டு மஹாசிவராத்திரி விழா நடக்கும் இடத்திற்கு வருகை தருவார். அங்கு சத்குருவுடன் இணைந்து புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட உள்ளார்.

    ஆதியோகி முன்பு நடக்கும் இவ்விழாவில் சத்குருவின் அருளுரை, சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி மஹா யாத்திரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் தலைசிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    குறிப்பாக, தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி, மெல்லிசை வித்தகர் ஹரிஹரன், பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று இசை விருந்து படைக்க உள்ளனர்.

    இவ்விழாவை மேலும் அழகூட்ட நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் பங்கேற்கும் நாட்டு மாடுகள் கண்காட்சி, தலைப்பாகை கட்டுதல், வீதி நாடகங்கள், பல்வகை சேலை உடுத்தும் பயிற்சி, பல மாநில உணவு அரங்கங்கள் உள்ளிட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்தாண்டு, மக்களின் கண்ணை கவரும் விதமாக ஆதியோகி குறித்த பிரத்யேகமாக ‘லேசர் ஷோ’ ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

    மகாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

    மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    பேருந்து முன்பதிவுக்கு 83000 83111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். #MahaSivarathiri #RamNathKovind
    ×