என் மலர்
நீங்கள் தேடியது "jammu kashmir"
- காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
- இந்த என்கவுண்டரில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணமடைந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- அறிவிக்கப்பட்ட, தப்பியோடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சொத்துக்கள் முடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பயங்கரவாதிகளுக்கு சிலர் அடைக்கலம் கொடுக்கின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் பட்டியலை ஜம்மு-காஷ்மீர் போலீசார் சேகரித்து வந்தனர். கடந்த 1990-ல் இருந்து இந்த பட்டியலை எடுத்து வைத்துள்ளனர். தற்போது, அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளி, தப்பியோடிய குற்றவாளி என அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறுகையில் ''இந்தியாவுக்கு துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்னர். அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்கிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிட முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.
டோடா மாவட்டத்தில் இதற்கான பணி தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்ள 16 பேர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.'' என்றார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள். இவர்களுடைய சொத்துக்கள் வருவாய்த்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை விற்கவோ, மாற்றவோ முடியாது.
மேலும், வேண்டுமென்றே பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்தவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அப்பாவி மக்கள் மிரட்டப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
''ஜம்மு-காஷ்மீரின் சோபார் பகுதியில் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள், அசம்பாவித செயல்களுக்கு துணை போகமாட்டார்கள் என நம்புகிறேன். போலீஸ் மற்றும் பாதுகாப்புப்படையால் மீதமுள்ள வேலைகளை சிறப்பாக முடியும். புகலிடம் கொடுக்காதீர்கள். பல சகாப்தமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதம் காரணமாக பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்'' என துணைநிலை ஆளுநர் சின்ஹா தெரிவித்துள்ளார்.
1990-ல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எல்லைத்தாண்டி, ஆயுத பயிற்சி பெற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்றனர். பெரும்பாலானோர் பயங்கரவாத செயல்களுடன் காஷ்மீர் வந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2010-ல் ஜம்மு-காஷ்மீர் அரசு, சரணடைந்தால் மறுவாழ்வுக்கு உதவி செய்யப்படும் என அறிவித்தது. 300 பேர் குடும்பத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியா வந்தனர். ஆனால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கினர்.
- பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு.
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவை வழிநடத்துபவர் மற்றும் உயர் அதிகாரி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்.
கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தொன்சக் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஹிமான்யுன் முசாமில் ஆகியோர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்களின் உயிரை இழந்தனர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்திய ராணுவத்தின் 19 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவுக்கு மன்பிரீத் சிங் வழிநடத்தும் அதிகாரியாக இருந்து வந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில். இந்த பிரிவு ஜம்மு காஷ்மீரில் இயங்கி வருகிறது.
உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரியின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு விட்டன. பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
இதில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று அதிகாரிகள் பலத்த காயமுற்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- காஷ்மீர் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
- கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீர் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மோரியா மக்பூல் மற்றும் அப்ரார் (எ)ஜாலீம் பாரூக் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டக்கொல்லப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் அப்ரார் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன் ஆவான்.
கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக இருந்த சஞ்சய் சர்மா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மாநில புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் தொடர்புடைய அப்ராரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் இன்று அவன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். 2 பயங்கரவாதிகளிடம் இருந்து நவீன ரக ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
- பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்த மத்திய அரசு, அரசாணை வெளியிடவில்லை
- கட்டாயம் இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறாது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. தொகுதி வரையறை முடிவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கான வேலைகள் நடந்த பாடில்லை.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமர் அப்துல்லா கூறியதாவது:-
உச்சநீதிமன்றத்தில், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக்- கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 12, காங்கிரஸ் 10, பா.ஜனதா, சுயேட்சை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த வெற்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பிரதிபலிக்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாங்கள் தற்போது ஐந்து ஆண்டுகளாக கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறோம். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது. ஏன் தேர்தலை தள்ளிப்போட வேண்டும்.
சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் கட்டாயம் இல்லை என்றால், அதையும் நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை.
மக்களின் உணர்வை அவர்கள் நன்றாக புரிந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை நடுத்துவது அவர்களது கட்டாயம். அது கட்டாயம் இல்லை என்றால், பாராளுமன்ற தேர்தலை நடத்தமாட்டார்கள். அவர்கள் மக்களை எதிர்கொள்ள வெட்கப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்லுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த தேர்தலும் இருக்காது.
LAHDC-Kargil தேர்தல் முடிவு அவர்களுடைய அச்சத்தை நிரூபித்து விட்டது. தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் 22 இடங்களை பிடித்தது. வெற்றி பெற்ற இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இவ்வாறு உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
- காசாவில் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது
- காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றார் ஃபரூக்
பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.
காசா மீது வான்வழி மற்றும் தரைவழியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. காசாவில் குடிநீர், எரிபொருள், மருந்து, உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் குப்கர் மக்கள் கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காசா பிரச்சனை குறித்து ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காசா மருத்துவமனைகளில் மருந்து, நீர், மின்சாரம் எதுவும் இல்லை. நம் நாட்டு மக்கள் காசா மக்களுக்கு ஆதரவாக துணை நின்று குரல் கொடுக்க வேண்டும். அங்கு அமைதி திரும்ப இந்தியா முயற்சி எடுக்க வேண்டும். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி பிறந்த நாடு இந்தியா. காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை தடுக்க அனைத்து வழிகளையும் இந்தியா ஆராய வேண்டும்.
இவ்வாறு ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
- 370 பிரிவு நீக்கப்பட்டால், துப்பாக்கி சண்டையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார்கள்.
- துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட முடியவில்லை.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா குல்காம் மாவட்டத்தில் நடந்த பேரணில் கலந்த கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. தேர்தல், வேலைவாய்ப்பின்மையை தீர்ப்போம், வளர்ச்சியடையச் செய்வோம் என்ற பேரில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசால் துரோகம் இழைக்கப்படுகிறது.
இதுவரை மின்சாரம் தடைக்கு தீர்வு காணப்படாதது ஏன்?. இன்று, ஏராளமாக பணம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, 14 மணி நேர மின்சார தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?.
காஷ்மீரில் பல்வேறு மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு 370-வது பிரிவுதான் காரணம். 370 பிரிவு நீக்கப்பட்டால், துப்பாக்கி சண்டையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார்கள். ஆனால், இந்த பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட முடியவில்லை.
5 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்று அரசு சொல்கிறது. இதில் நான்கு பேர் 2020-ல் ஆயுதத்தை கையில் எடுத்தவர்கள். 2021-ல் ஒருவர் கையில் எடுத்தார். இதெல்லாம் 2019-க்குப் பிறகுதான். அரசு தோல்வி அடைந்ததைத்தான் இது காட்டுகிறது. இது உங்களின் (மத்திய அரசு) ஏமாற்றத்தை காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்த மக்களையும் ஏமாற்றிவிட்டீர்கள்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைவீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப் படைவீரர்கள் அப்பகுதிக்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் வீரர்கள் மற்றும் 2 அதிகாரிகளும் அடங்குவர்.
இதையடுத்து அப்பகுதியில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு வீரர்கள் வீர மரணம்.
- தொடர் வேட்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள காலகோட் காட்டுப் பகுதியில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கிரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
நேற்றில் இருந்து நடைபெற்றும் வரும் சண்டையில் இந்திய வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இதில் இருவர் அதிகாரிகள் ஆவார்கள். இருந்தபோதிலும், வீரர்கள் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் இருந்து பின்வாங்கவில்லை.
இறுதியாக இன்று 2-வது நாள் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாதியின் பெயர் குவாரி எனத் தெரியவந்துள்ளது. இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர் பதவி வகித்த பாகிஸ்தான் பயங்கரவாதி எனத் தெரிய வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் மீண்டும் பயங்கரவாதத்தை புதுப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குகைகளில் மறைந்து இருந்து ஐஇடி-யை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர், துப்பாக்கிச்சுடும் பயற்சி பெற்றவர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர்" என ஜம்முவின் பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே இந்திய வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். இதன்மூலம் இந்தியா சார்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
- ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த வாரம், ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையின்போது இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அதற்காக போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.
குருபூராப்பை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள சட்டிபட்ஷாய் குருத்வாராவில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
இந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த போரினால் எந்தப் பலனும் இல்லை என்று எதிர் தரப்பு ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். அதுவரை எமது போராட்டத்தைப் பொறுத்த வரையில் இழப்புகள் ஏற்படுவது நிதர்சனம். ஆனால் அந்த இழப்புகளைச் சுமந்து கொண்டு நாம் முன்னேற வேண்டும். இந்தப் போரிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.
ஒவ்வொரு பனிப்பொழிவுக்கும் சில இடங்களில் ஊடுருவல் அதிகரிக்கிறது மற்றும் சில இடங்களில் குறைகிறது.
முடிந்த வரையில், உயிரிழப்பு நேர்வதை குறைக்க முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் விவசாயியிடம் காணொலியில் பேசினார்.
- அப்போது பேசிய மோடி உங்களிடம் டிராக்டர் இருக்கிறது, என்னிடம் சைக்கிள் கூட இல்லை என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசின் விவசாய கடன் அட்டை, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்களையும், பயனாளிகள் அதனை நினைவுகூரும் வகையிலும் விளம்பர பிரசாரம் ஒன்றை நடத்திவருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக சமீபத்தில் கலந்துரையாடினார்.
ரங்பூர் கிராம சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்பவருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது விவசாய கடன் அட்டையைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதைப் பற்றி சர்பஞ்ச் பல்வீர் கவுர் பெருமையுடன் கூறினார்.
அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, உங்களிடம் டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சொந்தமாக சைக்கிள்கூட இல்லை என தெரிவித்தார்.
- மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாகப் பிரித்தது.
- காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
புதுடெல்லி:
மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.
16 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளிக்கவுள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.