என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jayalalithaa death"
- ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை
- மாநில காவல்துறையை நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காது என மனுதாரர் கூறி உள்ளார்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
ஐந்து ஆண்டுகள் விசாரணைக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது.
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, முழுமையாக நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காமல், உண்மை நீர்த்துப்போகும் என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு மனு அளிக்க வேண்டும் என்றும், மனு அளிக்காமல் தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதை எல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
- என்மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன் என்றார் சசிகலா.
சென்னை:
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.
இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் புரட்சித்தலைவி அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.
அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை அப்பல்லோ மருத்துவமனையில் செய்து இருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம் வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை.
ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலா அவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தார். எனக்கு தெரியாமல் அம்மாவுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டது. இப்போதுதான் எனது கவனத்துக்கு வந்தது. எனவே மன்னிக்க வேண்டும் என்று அம்மாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அம்மாவும் மன்னித்து சசிகலாவை மட்டும் தான் உதவியாளராக நியமித்திருக்கிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னால் நீக்கப்பட்ட மீதமுள்ள 15 பேரையும் நீக்கியது நீக்கியதுதான் என்று அம்மா அதற்கு பின்னால் அந்த கடிதம் பற்றி பொதுக்குழுவிலேயே வெளிப்படையாக பேசினார். இன்றுவரை அந்த நிலைதான் நீடிக்கிறது.
நான் தர்மயுத்தம் ஆரம்பித்ததற்கு பின்னால் இந்த இயக்கத்தை, கட்சியையும், ஆட்சியையும் தினகரன் குடும்பம் தனது இரும்புப்பிடிக்குள் கொண்டுசென்று கபளீகரம் செய்த சூழல் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாகத்தான் ஆரம்பித்தார். அம்மாவும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக தொண்டர்கள் இயக்கமாகத்தான் வளர்த்தார். அம்மாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் உள்பட ஒரு தனிப்பட்ட குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்தபோதுதான் நான் தர்மயுத்தம் தொடங்கினேன்.
கேள்வி:- ஆறுமுகசாமி கமிஷனில் சம்மன் அனுப்பி இருக்கிறார்களே? எப்போது ஆஜராக போகிறீர்கள்?
அதற்கு பிறகும் 2, 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணம் எனக்கு தெரியாது. தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்திதான் எனக்கு வந்தது. விசாரணை கமிஷன் மூலமாக எனக்கு தகவல் வந்து என்னை அழைத்தால் நான் சென்று உண்மை நிலையை நான் எடுத்துகொண்ட நிலையை அங்கே விரிவாக பேசுவேன். இப்போது பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. அங்கே உண்மை நிலை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அண்ணா நகரில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #ADMK #JayalalithaaDeath #Sasikala #TTVDinakaran
தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வெண்கல உருவச்சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது என்ன தகவல் சொன்னார்கள். ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டார் என்றார்கள். ஜூஸ் குடித்தார் என்றார்கள். ஆனால் என்ன நடந்தது?. அந்த அம்மையாரால் அடையாளம் காட்டப்பட்டு, இன்றும் அவரால் பதவியை பெற்று இருக்கும் எடப்பாடியும், பதவி போனதும் ஆவியுடன் பேசுகிறேன், உண்மையை கொண்டு வர விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறி துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் அமைதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் இப்போது ஏன் பேசவில்லை. மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டமோ, புகழ் அஞ்சலி கூட்டமோ நடத்தி இருப்பார்களா?. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதையும் அவர்கள்தான் கூறினார்கள்.
தமிழக அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம் இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார். ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறந்தது முதல்-அமைச்சர். அவரது மரணம் மர்மமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும். ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள். இது உறுதி. சத்தியம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 5 கொலை வழக்குகள் உள்ளன. கோடநாடு காவலாளி கொலை. அந்த கொலையை மறைக்க 4 கொலைகள் என 5 கொலைகள் நடந்து உள்ளன. இதுவரை ஊழல் வழக்குகள் முதல்-அமைச்சர்கள் மீது கூறப்பட்டு உள்ளன. அதற்கு ஜெயலலிதாவே முன்உதாரணம். பல மாநில முதல்-அமைச்சர்கள், அமைச்சர்களும் ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் கொலை புகார் ஒரு முதல்-அமைச்சர் மீது கூறப்படுகிறது. அவர் தமிழக முதல்-அமைச்சர். அவருக்கு அதுபற்றி அவமானம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டுக்கு மிக அவமானமாகும்.
எனவே இந்த தமிழக அரசுக்கும், இதற்கு முட்டுக்கொடுக்கும் பாசிச பா.ஜனதா அரசுக்கும் முடிவுகட்டி பாடம் கற்பிக்க வேண்டும் என்று உறுதி ஏற்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #JayalalithaDeath
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்கிறேன். சில பொருட்களுக்கு வரி குறைப்பு, வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். ஜி.எஸ்.டி. தொகையினை மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது. அதனை தரவேண்டும் என்று வலியுறுத்துவேன்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ளது. அதில் எந்த ஒரு குறைவும் வராத அளவுக்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு மசோதாவை நிறைவேற்றும் முன் மாநில அரசிடம் கருத்து கேட்பது வழக்கம். ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு கருத்து கேட்கவில்லை.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர்களை காட்டிலும் அதிக அக்கறை எங்களுக்கு உண்டு. யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவர் சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார்.
தினகரனும், மு.க.ஸ்டாலினும் நண்பர்கள். தற்போது ஒருவருக்கொருவர் உண்மை பேசி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #Jayalalithaadeath
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.
விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக வேண்டும் என ஏற்கனவே ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜா செந்தூர் பாண்டி ஆணையத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். குட்கா வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் 7, 8-ந் தேதிகளில் ஆஜராக வேண்டும் என்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணையின் தேதியினை தள்ளி வைத்து சம்மன் அனுப்பியது. அமைச்சர் விஜயபாஸ்கர் 10-ந்தேதி காலை 9.30 மணிக்கும், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 11-ந் தேதி ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #MinisterVijayabaskar
ஆணையத்தின் வக்கீல் முகமது ஜபருல்லாகான் அளித்துள்ள மனு தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சட்ட விவகார மேலாளர் மோகன் குமார் கூறியதாவது:-
அப்பல்லோ நிர்வாகம் மீது ஆணைய வக்கீல் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகளை வன்மையாக எதிர்க்கிறோம்.
ஆணையத்தில் உள்ள ஒரு வக்கீலே எதிர்தரப்பினர் தொடர்பாக மனு தாக்கல் செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது, வழக்கமானது அல்ல.
ஜெயலலிதாவுக்கு பல்வேறு மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை பெற்றுதான் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், டெல்லி எய்ம்ஸ் நிபுணர்கள், ஐ.சி.யூ. சிறப்பு வல்லுனர்கள் என பலரும் இடம்பெற்று இருந்தனர்.
நிதிஷ்நாயக் தலைமையிலான எய்ம்ஸ் டாக்டர்கள் 3.12.2016 அன்று ஆஸ்பத்திரிக்கு நேரடியாக வந்து பரிசோதனை மேற் கொண்டனர்.
அவர்களும் ஜெயலலிதாவுக்கு இதயம் தொடர்பான எந்த ஆய்வும் செய்ய தேவையில்லை என்று கூறி இருக்கிறார்கள். 3 சீனியர் டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு இதய ஆஞ்சியோ பரிசோதனை செய்ய பரிந்துரை செய்ததாகவும் ஆணைய வக்கீல் கூறி இருக்கிறார். அது தவறான தகவல்.
ஒரே ஒரு வெளி டாக்டர் மட்டும்தான் அந்த பரிந்துரையை செய்தார். அதுவும் அவர் முழுமையாக ஆய்வு செய்யாமல் அப்படி கூறி விட்டார்.
அவரிடம் மற்ற சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரும் ஆஞ்சியோ சிகிச்சை தேவை இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யவில்லை.
இதயத்தை பிளந்து செய்யப்படும் ஸ்டெர்னோடாமி சிகிச்சை 15 நிமிடங்களாக செய்யப்படவில்லை என்று டாக்டர் மதன் குமார் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், அந்த டாக்டர் 15 வினாடி என்பதை 15 நிமிடம் என்று தவறாக சொல்லி விட்டார். பின்னர் அவர் அளித்த சாட்சியத்தில் 15 வினாடி என்பதை திருத்தி கொண்டுள்ளார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், எக்மோ கருவி பொருத்தப்பட்டதிலும் சர்வதேச தர நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எந்த தவறும் நடக்கவில்லை.
அது சம்பந்தமான அனைத்து விவரங்களும் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது, விசாரணையின் கீழ் இருக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கின்ற நிலையில், ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது ஆதாரம் இல்லாமல் தவறான குற்றச்சாட்டு கூறி இருப்பது சரியல்ல.
மேலும் சிகிச்சை தொடர்பாக அளிக்கப்பட்ட சாட்சியத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு சரியாக இல்லை. இதனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு மோகன்குமார் கூறியுள்ளார்.
சென்னை:
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் பின்னணியில் இருந்தவர்கள் என பல்வேறு தரப்பினரையும் அழைத்து ஆணையம் விசாரித்து வருகிறது.
விசாரணையில் எதிர் தரப்பினராக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், அப்பல்லோ ஆஸ்பத்திரியும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவ், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் எதிர் தரப்பினராக சேர்க்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததில் சதி இருக்கிறது என்று ஆணையத்தின் வக்கீல் முகமது ஜபருல்லாகான் ஆணையத்திடம் கடந்த 27-ந் தேதி மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில் பல்வேறு அதிர்ச்சி கரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் விஷயத்திலும் சசிகலாவும் மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும் சதி செய்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு இதய பாதிப்பு குறித்து ஆஞ்சியோ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். இந்த சிகிச்சை அளிக்கும்படி பல்வேறு ஆஸ்பத்திரிகளை சேர்ந்த 3 சீனியர் டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
ஆனால், அந்த பரிசோதனையை செய்ய வில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதற்கு இதுதான் முக்கிய காரணம் ஆகும்.
அவருடைய சிகிச்சையில் சசிகலாவும், அப்பல்லோ நிர்வாகமும் பொறுப்பு உள்ளவர்களாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் இதை செய்யவில்லை. இதற்கான சாட்சியங்கள் உள்ளன.
ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். ஆனால், 5-ந் தேதிதான் அவர் இறந்து விட்டதாக முறைப்படி அறிவித்து இருக்கிறார்கள்.
கமிஷனில் சாட்சியம் அளித்த ஒரு டாக்டர் கூறும் போது, மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுவிட்டால் நெஞ்சை பிளந்து அளிக்கப்படும் ஸ்டெர்னோடாமி சிகிச்சை 15 நிமிடமாக நடத்தப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.
மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுபோன ஒரு நபருக்கு 3 நிமிடத்தில் இந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அது, தானாகவே மூளைச் சாவாக மாறி விடும்.
ஆனால், 15 நிமிடமாக அந்த சிகிச்சையை அவர்கள் அளிக்காமல் இருந்துள்ளனர். இது, மற்ற டாக்டர்களின் சாட்சியத்திலும் தெரிய வந்துள்ளது.
அதே போல் எக்மோ கருவி பொருத்தி அளிக்கப்படும் சிகிச்சையும் முறைப்படி செய்யப்படவில்லை.
ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க ஏன் அழைத்து செல்லவில்லை என்ற விஷயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஜெயலலிதா அதை விரும்பவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
மேலும் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றால் இந்திய டாக்டர்களை அவமதித்தது போல் ஆகிவிடும் என்றும் ஜெயலலிதா கூறியதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த விஷயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நோயாளியை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி சரியான நடவடிக்கை மேற் கொள்ளவில்லை.
இது சம்பந்தமாக பல்வேறு மருத்துவ வல்லுனர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசித்து இருக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் சுகாதாரத்துறை செயலாளரும், அப்பல்லோ நிர்வாகத்தினரும் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை.
சுகாதாரத்துறை செயலாளரை பொறுத்த வரை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் செய்தி தொடர்பாளர் போல் செயல்பட்டுள்ளார்.
தலைமை செயலாளர் ராமமோகனராவ் தவறான சாட்சியங்களை ஆணையத்திடம் வழங்கி இருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கையை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.
ராமமோகனராவ் ஆணையத்திடம் சாட்சியம் அளிக்கும் போது, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 20 ஆவணங்களை அவரும், சசிகலாவும் அப்போதைய பொறுப்பு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கியதாக கூறி உள்ளனர்.
ஆனால், தற்போதைய தலைமை செயலாளர் அது போன்ற எந்த ஆவணங்களும் வரவில்லை என்று கூறி இருக்கிறார்.
எனவே, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் ராமமோகனராவ் ஆகியோரையும் வழக்கில் எதிர் தரப்பினராக சேர்த்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, நான் எனது பணி தொடர்பான கேள்விகளுக்கு ஆணையத்திடம் பதில் அளிக்க வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் இதற்கு முன்பு செய்து இருக்கிறேன். இனிமேலும் செய்வேன்.
ஜனவரி 4-ந் தேதி மீண்டும் ஆஜராக உள்ளேன். அப்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்று தெரிவித்தார்.
ராமமோகனராவிடம் கேட்ட போது, ஆணைய வக்கீல் தாக்கல் செய்துள்ள மனு பற்றி எனக்கு தெரியாது என்று கூறினார். #Jayalalithaa
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் தனது வாக்குமூலத்தை ஒரு மனுவாக தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களில் பலர் பலமுறை ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 3 ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்திக்கொள்ள தமிழக அரசிடம் ஆணையம் அனுமதி கோரியது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்திக்கொள்ள ஆணையத்துக்கு அனுமதி அளித்தது. இருந்தபோதிலும் மருத்துவ நிபுணர்கள் குழுவை ஆணையம் ஏற்படுத்தவில்லை.
தவறாக பதிவு செய்யப்படுகிறது
இதனால் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடைமுறைகள், மருத்துவ உண்மைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளிக்கும்போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியது உள்ளது. இதன் காரணமாக அப்பல்லோ மருத்துவர்களின் வாக்கு மூலத்தை ஆணையம் பதிவு செய்யும்போது ஏராளமான தவறு ஏற்படுகிறது.
மருத்துவம் தொடர்பான வார்த்தைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும்போது தவறாக புரிந்து கொண்டு பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்று வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது மருத்துவ சிகிச்சை தொடர்பான உண்மைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்படும்.
அப்பல்லோ மருத்துவமனையில் 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் மட்டுமே ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய முடியும். அதுவே சரியானதாகவும் இருக்கும்.
இந்த துறைகளில் இருந்து ஒரே ஒரு மருத்துவரேனும் ஆணையம் அமைக்கும் குழுவில் இடம்பெறவில்லை எனில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தவறான கருத்தை ஆணையம் பதிவு செய்யும் நிலை ஏற்படும்.
அதேபோன்று மருத்துவக்குழுவில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களை போன்று கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களாகளோ அல்லது அதைவிட அதிக கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களாகவோ இருக்க வேண்டியது அவசியமாகும்.
உலக அளவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு உலக அளவில் தரம்வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை கண்டறிய முடியும். எனவே, உடனடியாக மருத்துவக்குழுவை ஏற்படுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் அப்பல்லோ நிர்வாகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#Jayalalithaadeath #ApolloHospital
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?, உயர் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் கேட்டார்.
நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். மதியம் 2.30 மணி வரை 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.
டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. மனசாட்சிக்கு உட்பட்டு ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. சிகிச்சையில் எந்த குறைபாடும் கிடையாது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது எனது தாயார் இறந்து விட்டார்.
இருந்தபோதிலும் குறுகிய கால விடுமுறையில் சென்று விட்டு திரும்பிய நான், ஜெயலலிதாவை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்’ என்று கூறி உள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சந்தேகம் இருந்ததா? என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு, ‘சந்தேகம் இல்லை’ என்று ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதேபோன்று, ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்து முடிவு எடுப்பதற்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவித்தீர்களா? என்று ஆணையம் கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர், ‘அதுகுறித்து தெரிவிக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதே கேள்வியை சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணையின் போது கேட்ட போது, ‘அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிவித்தேன்’ என்று கூறி உள்ளார். இந்த முரண்பாடு குறித்து மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு பணிப்பெண்களாக இருந்த தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தேவிகா, சிவயோகம், பூமிகா ஆகியோரை புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கனகசபாபதி நேற்று ஆணையத்தில் ஆஜர்படுத்தினார்.
அவர்கள், போயஸ்கார்டனில் சந்தேகப்படும்படியாக எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியும் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணை முடிந்து வெளியே வந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். விசாரணை நடந்து வரும் நிலையில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது?, அதற்கு என்ன பதில் அளித்தேன் என்று கூறுவது சரியாக இருக்காது’ என்றார்.
விசாரணைக்கு பின்னர் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை முதல்-அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது தொடர்பாக என்னை அழைத்து பேசவில்லை என்று குறுக்கு விசாரணையின்போது ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனது முயற்சி காரணமாகவே எய்ம்ஸ் டாக்டர்கள் தொடர்ச்சியாக வரவழைக்கப்பட்டு நுரையீரல் பிரச்சினையில் இருந்து ஜெயலலிதா மீண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டேன் என்றும், சிகிச்சையின்போது ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டன, இறந்த பிறகு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று பேசப்பட்ட விவகாரம் மனதுக்கு வேதனை அளிப்பதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்’ என்றார். #JayaDeathProbe #Radhakrishnan
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ரேமான்ட் டோமினிக் சேவியோ, இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் கார்த்திகேசன் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர்.
மருத்துவர் ரேமான்ட் தனது சாட்சியத்தில், ‘22.9.2016 அன்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, நான் உடன் சென்றேன். ஓரளவுக்கு நினைவுடன் இருந்த போதிலும் ஜெயலலிதா அந்த சமயத்தில் பேசும் நிலையில் இல்லை’ என்று கூறினார்.
இதையடுத்து, 23.5.2016 அன்று ஜெயலலிதா முதல்- அமைச்சராக பதவி ஏற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மருத்துவர் ரேமான்டுக்கு ஆணையத்தின் மூலம் காண்பிக்கப்பட்டது.
அந்த வீடியோவை பார்த்து முடித்த பின்பு ஆணையம் தரப்பு வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி, ‘இந்த வீடியோவை பார்க்கும்போது ஜெயலலிதா மெதுவாக நடந்து வருகிறார். ஒருவர் நடந்து வருவதை பார்த்து அவருக்கு இருக்கும் நோயை கண்டறியும் தேர்வு மருத்துவ படிப்பில் உள்ளது. ஜெயலலிதா குனிந்தபடி மெதுவாக நடந்து வருவதன் மூலம் அவருக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறிய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவர் ரேமான்ட், அப்போதே ஜெயலலிதாவுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவருக்கு நோய் பாதிப்பு இருந்ததா? என்பதை கண்டறியவும், அவ்வாறு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், ஏன் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது குறித்தும் மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.
மருத்துவர் கார்த்திகேசன் அளித்த சாட்சியத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று அவரது இதய துடிப்பை பரிசோதித்தேன். இதய துடிப்பு சரியாக இருந்தது. இதன்பின்னர் சீராக இல்லாத காரணத்தினால் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது’ என்று கூறினார். #Jayalalithaa #ArumugasamyCommission
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்