என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jayalalithaa Death Probe"
- நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.
- ‘ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரது சாவில் மர்மம் உள்ளது என்று பலர் குற்றச்சாட்டு சுமத்தினர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவருக்கு வழங்கப்பட்ட 75 நாட்கள் சிகிச்சைகளுக்கும், அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கும் விடைகாணும் வகையில் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசு 2017-ம் ஆண்டு அமைத்தது.
அதன்படி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.
அதில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, டாக்டர் சிவக்குமார், சுகாதாரத்துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வேலூர், திருச்சி தினமலர் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், 'ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கும், சி.பி.ஐ.க்கும் மனு கொடுத்தேன். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ ரீதியாக குற்றச்சாட்டுகள் உள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு எந்த ஒப்புதலும் இதுவரை அரசு வழங்கவில்லை என்று கூறினார்.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை சி.பி.ஐ., சட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
- ஓ.எஸ்.மணியன் 4-ந்தேதியே வேளாங்கண்ணி கடற்கரையில் திதி கொடுத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
- கே.சி.பழனிசாமியும் 4-ந்தேதியே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றும் கடைசி வரை எப்படி இருந்தார் என்பதே வெளியே தெரியாமல் மறைந்தும் விட்டார்.
கண்முன்னே நடப்பதை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு சாவின் உண்மையை கண்டு பிடிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது தமிழ்நாடு.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு தகவலை வெளியிட்டார்கள்.
அவர் இறந்த பிறகும் அதேபோல் தான் இருக்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் ஓ.எஸ்.மணியன் 4-ந்தேதியே வேளாங்கண்ணி கடற்கரையில் திதி கொடுத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
கே.சி.பழனிசாமியும் 4-ந்தேதியே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இருவரும் ஜெயலலிதா மறைந்த நாள் டிசம்பர் 4 தான் என்று அடித்து சொல்கிறார்கள்.
ஏற்கனவே 5-ந்தேதி இரவு ஜெயலலிதா மறைந்தார் என்று ஆஸ்பத்திரி பதிவேடுகளில் கூறியிருந்தாலும் ஆறுமுகசாமி ஆணையம் அதை மறுத்து விட்டது. 4-ந்தேதியே அவர் இறந்து விட்டதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் கட்சியினரும் தேதி குழப்பத்தில் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தொண்டர்கள் கூறுகிறார்கள்.
- ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே.
- அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேசமாட்டார்கள்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினரும் பொது மக்களும் அவர் இறந்த உடனேயே குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தற்போது தாக்கல் செய்து உள்ளது.
அதில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்பட சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க முன் வராதது குறித்தும் பல்வேறு சந்தேகங்களை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படி தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக மாலைமலர் நிருபருக்கு தீபா அளித்த பேட்டி வருமாறு:-
எனது அத்தை ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது அவர் மரணம் அடைந்த உடனேயே மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. பொதுமக்களும் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது எப்படி? எந்த மாதிரி நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் என்ன? என்பவற்றையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சசிகலா மீதும் ஓ.பன்னீர் செல்வம் மீதும் அப்போது இருந்த அமைச்சர், அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி இருக்கிறது. எனவே இதில் தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
காவல்துறையை பொறுத்தவரையில் சசிகலாவுக்கு தற்போது இருக்கும் அதிகாரிகள் பலரும் நெருக்கமானவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவரது அதிகாரம் அப்படிப்பட்ட அதிகாரமாக இருந்தது.
எனவே இதையெல்லாம் ஆலோசித்து நேர்மையான காவல்துறை அதிகாரியை நியமித்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நடத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே. அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேச மாட்டார்கள். நமது நாட்டில் பல தலைவர்கள் இதற்கு முன்பு உயிர் இழந்து உள்ளனர்.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி என அனைவரது மரணமும் இயற்கையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். மரணமடைந்த நேரத்தில் இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வசதி கிடையாது. இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? எந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்தனர்.
வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அது போன்று சசிகலாவும் அவரால் கோடி கோடியாக சம்பாதித்த அ.தி.மு.க. தலைவர்களும் ஏன் ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை.
ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அப்போது இருந்த ஆட்சியாளர்களுக்கும், உடன் இருந்த சசிகலாவுக்கும் உண்டு.
திட்டமிட்டு சூழ்ச்சி செய்து எனது அத்தை உயிர் இழப்பதற்கு அவரை சுற்றி இருந்தவர்களே காரணமாக இருந்துள்ளனர்.
ஜெயலலிதாவிடம் அளித்த உறுதி மொழியை மீறி அவரது இருக்கையில் அமர்வதற்கு சசிகலா ஆசைப்பட்டார். இதன் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும்.
எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக அரசு வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது எதற்காக? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர்தானே முதல்-அமைச்சராக இருந்தார். எனவே அவரும் ஜெயலலிதாவின் மரணத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இந்த விஷயத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள் அனைவரும் கடமை தவறி இருப்பது ஆணையத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
அ.தி.மு.க.வை வளர்ப்பதற்கு ஜெயலலிதா செய்த தியாகங்கள் எதையும் அவரால் பயனடைந்தவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்படி நினைத்து பார்த்திருந்தால் அவரது உயிரை நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.
தற்போது சசிகலா தவறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஏன் எங்களை எல்லாம் பார்க்க விடவில்லை. நாங்கள் அவரை நெருங்க கூட முடியவில்லை. இதற்கு சசிகலாவும் அவருடன் இருந்தவர்களுமே காரணம்.
எனவே மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பு சசிகலாவுக்கே உள்ளது.
அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது மிகப்பெரிய நாடகமாகும். பன்னீர்செல்வத்தை வெளியேற்றி விட்டு எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து நாடகமாடுகிறார்.
ஓ.பி.எஸ் வழியே சென்று சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் இருவருமே சேர்ந்து நாடகம் ஆடுவது உறுதியாகியுள்ளது. மக்கள் ஏமாளிகள் அல்ல.
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை. முதுகில் குத்தும் இந்த அரசியல் வேண்டாம் என்றுதான் நான் ஒதுங்கி இருக்கிறேன்.
அத்தையின் மரண விவகாரத்தில் கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆணைய அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அத்தையின் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.
- 2016-ல் ஜெயலலிதா மறைந்ததும் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கு எதிராகவே ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை தொடங்கினார்.
- அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிர வைத்தார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொள்ளாத ஓ.பி.எஸ். எப்படியாவது கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வியூகம் அமைத்து வருகிறார். சட்டரீதியாக தனி ஒருவராக நின்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சறுக்கலைத் தான் கொடுத்துள்ளது.
அவரது இன்னொரு முயற்சி சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரையும் அ.தி.மு.க.வுக்குள் இணைக்க வேண்டும் என்பது தான்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்து வரும் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படையாக கூறினார்.
சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க போவதாகவும் அறிவித்தார். ஓ.பி.எஸ்.சின் அழைப்பை தினகரனும் வரவேற்று உள்ளார்.
ஆனால் இப்போது ஓ.பி.எஸ். தொடங்கி தோற்றுப் போன தர்மயுத்தமே அவரது இந்த முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக மாறி இருக்கிறது.
அதாவது 2016-ல் ஜெயலலிதா மறைந்ததும் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கு எதிராகவே ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிர வைத்தார்.
அடுத்த சில மாதங்களில் காட்சிகள் மாறியது. சசிகலா சிறை சென்றார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கை கோர்த்தனர். துணை முதல்-அமைச்சராக இ.பி.எஸ்.-சுக்கு துணையாக இருந்தார்.
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷன் அறிக்கையும் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்ளிட்டோரின் மீது பங்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தமிழக அரசு தயாராகி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் அன்று வைத்த கோரிக்கை வலுப்பெற்று, பல வடிவங்களில் உருவெடுத்து இப்போது சசிகலாவையும் நெருக்கடிக்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
இதனால் ஓ.பி.எஸ். சசிகலா இணைவதற்கான வாய்ப்பும் மங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
- தமிழகத்தில் தி.மு.க. 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் ஆட்சியினை நடத்தி வருகிறது.
- தேர்தலின்போது மக்களிடம் என்னென்ன வாக்குறுதிகள் எடுத்து வைத்தோமோ, தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டு காட்டியிருந்தோமோ அவை அத்தனையும் நிறைவேறி விட்டது என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.
கோவை:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்தி ஸ்ரீநிதி-பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ. மதியழகன் மகன் கவுசிக்தேவ் ஆகியோரது திருமணம் கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-
இந்த திருமணத்தை பற்றி ஒரே வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், இந்த திருமணமானது சீர்திருத்த திருமணமாக நடந்தேறி இருக்கிறது. சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல. சுயமரியாதை உணர்வோடு நடந்த திருமணமாகவும், தமிழ்மொழியில் அரங்கேறிய திருமணமாகவும் இந்த திருமணம் உள்ளது.
இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால் அது சட்டப்படி செல்லுபடியாக கூடிய அங்கீகாரத்தை நாம் அன்றைக்கு பெற்றிருக்கவில்லை.
ஆனால் 1967-ல் தமிழகத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க.ஆட்சி அமைந்தது. அண்ணா முதல்-அமைச்சராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது முதல் தீர்மானமாக நிறைவேற்றி தந்த தீர்மானம் தான், சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தார். ஆகவே இன்று நடந்த இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி முறைப்படி செல்லும் என்ற அங்கீகாரத்தோடு நடந்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் ஆட்சியினை நடத்தி வருகிறது. தேர்தலின் போது மக்களிடம் என்னென்ன வாக்குறுதிகள் எடுத்து வைத்தோமோ, தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டு காட்டியிருந்தோமோ அவை அத்தனையும் நிறைவேறி விட்டது என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.
நிச்சயமாக உறுதியாக 70 சதவீதம் நிறைவேறி இருக்கிறது. மீதி 30 சதவீதமும் விரைவில் நிறைவேற்றுவோம். அதனை நிறைவேற்றி காட்டுவோம். அது உங்களுக்கும் தெரியும்.
மக்களும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இதை நான் குறிப்பிட்டு சொல்வதற்கு முக்கிய காரணம். 4 நாளுக்கு முன்பு தான் கோவை வந்தேன். விமான நிலையத்தில் இருந்து அரசு விடுதிக்கு 10 முதல் 15 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பை பெற்றுக்கொண்டு நான் செல்ல 2 மணி நேரம் ஆகியது. சாலையின் இருபுறங்களிலும் பெண்கள், ஆண்கள் என எல்லா தரப்பினரும் என்னை வாழ்த்தி கோஷம் எழுப்பி வரவேற்றனர். ஆங்காங்கே சிலர் மனுக்களையும் கொடுத்தனர்.
எப்பவும் சிலர் மனுக்களை கொடுக்கும்போது கொஞ்சம் ஏக்கம் வருத்தத்தோடு கொடுக்கும் பாணியை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னிடம் கொடுத்தபோது மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, நம்பிக்கையோடு மனு கொடுக்கின்றனர். மனு கொடுத்த உடனே நன்றி நன்றி என்று கூறுகின்றனர். ஏதோ முடிந்து விட்டது மாதிரி. மனு கொடுத்த உடனே இது முடிந்து விடும் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. அதுதான் நமது திராவிடமாடல் ஆட்சி.
தேர்தல் அறிக்கையில் முக்கியமானது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக நாம் சொல்லவில்லை. அவர்கள் கட்சியினரே சொன்னது. அந்த கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர். ஜெயலலிதா எப்போது எல்லாம் முதல்வர் பதவியில் இருந்து விலகும் நிலை உருவானதோ அப்போதெல்லாம் முதல்-அமைச்சராக பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம் தான்.
அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் கோபத்தோடும், ஆத்திரத்தோடும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று ஆவியோடு பேசுகிறேன் என்றார்.
அங்கு அமர்ந்து தியானம் பண்ணினார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. நீதி வேண்டும் என அவரே சொன்னார். அவரை சரி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு ஒப்புக்காக, ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷனை அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அந்த விசாரணை கமிஷன் எத்தனை நாட்கள் நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அது ஒப்புக்காக நடந்தது. அப்போது தான் சட்டமன்ற தேர்தலின் போது, நாம் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷனை முறையாக நடத்தி, அறிக்கை பெற்று முறையான நடவடிக்கை எடுப்போம் என உறுதிமொழி கூறினோம்.
4 நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை என்னிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் உள்ளது. அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். சட்டமன்றத்தில் வரும்.
சட்டமன்றத்தில் வைத்து, வெளிப்படையாக உரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாக நிறைவேற்றி காட்டுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன். அது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.
தூத்துக்குடியில் நடந்த சம்பவம் குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்படி சம்பவம் நடந்தது டி.வி.பார்த்து தெரிஞ்சுகிட்டேன் என்று சொன்னார். அது தொடர்பான விசாரணை அறிக்கையும் என்னிடம் வந்துள்ளது. அதுகுறித்தும் விவாதித்தோம். அந்த விவகாரங்கள் அனைத்தையும் சட்டமன்றத்தில் வைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, சாமிநாதன், முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், நாசர், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
- ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர், தலைமை செயலாளராக பணிபுரிந்த ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் பரிந்துரையை அடுத்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அதில் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன என்பதை சட்டசபையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 'சிறப்பு புலனாய்வு குழு' புதிதாக அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த குழு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு கீழ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த குழுவினரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள். இதன்மூலம் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் புதிய குழு விசாரணை நடத்தி அதுதொடர்பாக அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும். இதன் பிறகே ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
புதுக்கோட்டை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் தான் கூறினர். அவர்கள் தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.
தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு எடுத்து உண்மை தன்மையை அ.தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதனை மக்களுக்கும் அரசு விளக்க வேண்டும்.
கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதனை இலவசம் என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது தவறு. அந்த பொருட்களை கூட கொடுக்க முடியாத அளவுக்கு செல்ல காரணம் இந்த கையாலாக மோடி அரசுதான். உதவிகள் செய்வதை அலட்சியப்படுத்தும் வகையில் கூறுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்துக்கு அப்போலோ நிர்வாகம் முறையாக ஒத்துழைக்கவில்லை என சமீபத்தில் ஆணையம் குற்றம்சாட்டி இருந்தது.
மேலும், முறையாக ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல், இறந்த நாள் வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜராகி உள்ளனர். இதயநோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், தலைமை பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆஜராகி உள்ளனர். ஏற்கனவே சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அது எப்போது ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #JayalalithaaDeathProbe #ApolloHospitals
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதுபற்றி அறிந்தவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். சசிகலா தரப்பு வக்கீல் அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அருகில் இருந்து கவனித்து கொண்ட செவிலியர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்துள்ளது.
இந்த விசாரணைக்கு ஆஜராக வேண்டியவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தி.மு.க. சார்பில் வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணனும் இன்று ஆஜர் ஆனார். அவரிடமும் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் ஜோசப்பும் ஆஜரானார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #JayaDeathProbe #Deepa
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 80-க்கும் அதிகமான பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்களான இதயவியல் நிபுணர் நிதிஷ்நாயக், நுரையீரல் நிபுணர் கில்நானி, மயக்கவியல் நிபுணர் அஞ்சன் டிரிகா ஆகியோர் நேற்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டார்.
ஜெயலலிதா சுவாசிக்க மிகுந்த சிரமப்பட்டார். அவர் பெரும்பாலான நேரங்களில் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்தில் இருந்தார் என்றும் கூறி இருந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று எய்ம்ஸ் டாக்டர்கள் 2-வது நாளாக விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்த குறுக்கு விசாரணை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. #Jayadeathprobe
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.
இதில் இதுவரைக்கும் 40-க்கும் மேற்பட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது கடந்த 1 வாரமாக அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகளிடம் விசாரணை நடக்கிறது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியின் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். இவர் போயஸ் கார்டனுக்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதாவை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தவர்.
அன்றைய தினம் ஜெயலலிதா போயஸ் கார்டனில் எந்த நிலையில் இருந்தார் என்று இவர் ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த மற்றொரு செவிலியர் அனீஸ் நேற்று ஆணையத்தில் ஆஜராகி இருந்தார்.
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எந்த நிலையில் இருந்தார். அவருடன் வந்தது யார்? என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்தனர். இவர்கள் கொடுத்த விவரங்களும் அனைத்து வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. #Jayalalithaa #JayaDeathProbe
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரும் 18ம் தேதி பத்திரிகையாளர் குருமூர்த்தி ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 20ல் மறுகுறுக்கு விசாரணைக்கு ஆஜராக பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயனுக்கும், மறுவிசாரணைக்கு ஆஜராக ராமலிங்கம் ஐ.ஏ.எஸ்-க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #Jayalalithaa #ApolloHospital
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்