என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Journalist"

    • கோடாரி மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி சந்தோஷின் குடும்பத்தைத் அவர்கள் தாக்கினர்.
    • அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சத்தீஸ்கரில் இந்த வருட தொடக்கத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் சாலை கட்டுமான ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் ஒப்பந்ததாரரால் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் சத்தீஸ்கரின் சூரஜ்பூரை சேர்ந்த ஆஜ் தாக் பத்திரிகையாளர் சந்தோஷின் பெற்றோர் மற்றும் சகோதரர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சந்தோஷின் பெற்றோர்களான மகே டோப்போ (57) மற்றும் பசந்தி டோப்போ (55), அவரது சகோதரர் நரேஷ் டோப்போ (30) ஆகியோருடன் ஜகன்னாத்பூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய வந்தனர். இந்த நிலம் தொடர்பாக அவர்களது உறவினர்களுடன் தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில், அவர்களது உறவினர்கள் ஆறு முதல் ஏழு பேர் வந்து, கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதல் விரைவில் வன்முறையாக மாறியது. கோடாரி மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி சந்தோஷின் குடும்பத்தைத் அவர்கள் தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாசந்தி மற்றும் நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மாகே பலத்த காயமடைந்தார். அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

     

    சந்தோஷின் மற்றொரு சகோதரர், உமேஷ் டோப்போ, தப்பித்து, அருகில் உள்ள கிராம மக்களிடம் உதவியை நாடியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் முன்பு அந்த நிலத்தில் விவசாயம் செய்திருந்தனர்.

    ஆனால் நீதிமன்ற தீர்ப்பு சந்தோஷின் குடும்பத்திற்கு உரிமை வழங்கியதால் பகை வளர்ந்துள்ளது. சம்பவம் நடந்த உடனேயே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். வழக்குப்பதிவு செய்த போலீஸ் அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.  

    • எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார்
    • அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும்.

    இதில் கலந்துகொள்ள முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் என பலவகைப்பட்ட ஆன்மீக குருக்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் அசாதாரண செயல்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அப்படியொரு செயலைப் பற்றி கேள்வி கேட்கப்போய் பத்திரிகையாளர் ஒருவர் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    முள் பாபா என்று அறியப்படும் காண்டே வாலே பாபா கும்பமேளாவில் எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார். மேலும் அவர் சுமார் 50 ஆண்டுகளாக முட்களில்தான் படுத்திருப்பதாக கூறிக்கொண்டார்.

    முள் பாபாவை நெருங்கிய செய்தி நிருபர் ஒருவர், இந்த முட்கள் உண்மையானதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த முள் பாபா, அங்கிருந்து எழுந்து அந்த நிருபரை நெருங்கி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.

    "வா வந்து இதில் நீயே படுத்து, முட்கள் உண்மையா? இல்லையா? எனக் கண்டுபிடி" என்று அந்த நிருபரை ஒரு வழி செய்துள்ளார் முள் பாபா. ஆளை விட்டால் போதும் என அந்த நிருபர் அங்கிருந்து நழுவினார். இத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மஹோலி தாலுகாவில் அரசு நெல் கொள்முதல் மற்றும் நில பேரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்துசெய்தி வெளியிட்டார்.
    • கடந்த பத்து நாட்களாக ராகவேந்திராவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பத்திரிகையாளர் ராகவேந்திர பாஜ்பாய் (35) ஒரு முன்னணி இந்தி நாளிதழில் பிராந்திய நிருபராகப் பணியாற்றி வந்தார். நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் சீதாபூர் மாவட்டத்தின் இமாலியா சுல்தான்பூர் பகுதியில் சீதாபூர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அந்த பத்திரிகையாளர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர்.

    மர்ம நபர்கள் சுட்டதில் மூன்று தோட்டாக்கள் அவரது தோள்பட்டை மற்றும் மார்பில் பாய்ந்தன. உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.

    உள்ளூர் மக்களின் உதவியுடன், காவல்துறையினர் பத்திரிகையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    சமீபத்தில் மஹோலி தாலுகாவில் அரசு நெல் கொள்முதல் மற்றும் நில பேரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ராகவேந்திர பாஜ்பாய் செய்தி வெளியிட்ட நிலையில் 4 அரசு அதிகாரிகள் (லெக்பால்) இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கடந்த பத்து நாட்களாக ராகவேந்திராவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாகவும், மிரட்டல் வந்த செல்போன் கால்களை டிரேஸ் செய்து வருவதாகவும் சீதாபூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) பிரவீன் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக காட்சியின்கீழ் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் சமாஜ்வாடி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. 

    டேனி பென்ஸ்டா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
    நோபிடாவ் :

    ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் இணையதள பத்திரிகை ஒன்றில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமெரிக்க பத்திரிகையாளரான டேனி பென்ஸ்டா். 37 வயதான இவர் கடந்த மே மாதம் ராணுவ ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டார்.

    அவா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    இது தொடா்பான விசாரணையின் முடிவில், டேனி பென்ஸ்டருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 12-ந்தேதி மியான்மர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊடகத்தினர் மீது வன்முறை கட்டவிழத்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் மியான்மரில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதர் பில் ரிச்சர்ட்சன், பத்திரிகையாளர் டேனி பென்ஸ்டரை விடுவிப்பது குறித்து ராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

    இதில் டேனி பென்ஸ்டரை விடுதலை செய்ய மியான்மர் அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு டேனி பென்ஸ்டர் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் அமெரிக்கா செல்வதற்கும் மியான்மர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். 

    இந்நிலையில், மீனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவரது உடலை கைப்பற்றி, படுகொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
    சாலை விபத்தில் காயமடைந்த ஒரு பத்திரிகையாளரை தகுந்த நேரத்தில் காரில் அழைத்து சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற உதவிய ராகுல் காந்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது. #RahulGandhi #goodSamartian #injuredjournalist
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளரான ராஜேந்திர வியாஸ் என்பவர் இன்று மத்திய டெல்லிக்கு உட்பட்ட ஹுமாயூன் சாலையில் விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருப்பதை அவ்வழியாக காரில் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவனித்தார்.

    உடனடியாக காரை நிறுத்துமாறு கூறி காயமடைந்த பத்திரிகையாளரை உள்ளே ஏற்றிக்கொண்டு விரைவாக மருத்துவமனக்கு செல்லுமாறு டிரைவரிடம் கூறினார்.

    ராகுல் காந்தியின் கார் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலியால் துடித்த பத்திரிகையாளரின் நெற்றியில் உள்ள  காயத்தில் இருந்து வழியும் ரத்தத்தை துடைத்தவாறு அவர் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தும் காட்சியை முன்சீட்டில் அமர்ந்திருந்த ராகுலின் உதவியாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

    பரபரப்பான தேர்தல் பணிகளுக்கு இடையில் மனிதாபிமானத்தோடு செயல்பட்ட ராகுல் காந்தியின் ‘உரிய நேரத்து உதவிக்கு’ சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. #RahulGandhi #goodSamartian #injuredjournalist 
    பெண் பத்திரிகையாளர் பாலியல் புகாரின் அடிப்படையில் மத்திய முன்னாள் மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை டெல்லி நீதிமன்றம் நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #MJAkbar #journalistPriyaRamani
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.



    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என தெரிகிறது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani 
    பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஓராண்டையொட்டை, பல்வேறு பெயர்களில் செயல்படும் இந்து பயங்கரவாத அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டுமென எழுத்தாளர்கள் கவர்னரிடம் மனு அளித்தனர். #GauriLankesh
    பெங்களூரு:

    மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது. அவருடைய நினைவு நாளையொட்டி, கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு மவுரியா சர்க்கிளில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது.

    இந்த ஊர்வலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அந்த அறக்கட்டளை சார்பில் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.


    மூத்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த நபர் உள்பட பலரை கைது செய்து உள்ளன. இவர்கள் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் சனதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்புகளால் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுள்ளனர்.

    இவர்கள் தான் முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கலபுரகி ஆகியோரையும் படுகொலை செய்துள்ளனர். இந்த அமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருங்காலத்தில் மேலும் படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

    எனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். அத்துடன், அமைதி காப்பது, சகிப்புத்தன்மை, மரியாதை, அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பு ஆகியவை பற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில் விழிப்புணர்வை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #GauriLankesh
    கேரளாவில் மனோஜ் என்ற பத்திரிக்கையாளர் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அந்த பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். #StandWithKerala #KeralaRains #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு பருவமழையை விட இந்த ஆண்டு 3 மடங்கு பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

    நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகிவிட்டனர். 2.2 லட்சம் பேர் 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநில அரசுகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்,



    இந்நிலையில், கேரளாவில் பத்திரிகையாளர் மனோஜ் என்பவர் கன்னூரில் தனது மகளுக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அந்த பணத்தை முதல் மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது மகளின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கேரள மாநிலம் மிகப்பெரிய வெள்ளப்பாதிப்புகளை சந்தித்து வருவதால் நிச்சயதார்த்ததை ரத்து செய்து அதற்கான சேமிப்பை முதல் மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். மணமகன் வீட்டாரின் முழு சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் மீன் விற்பனை செய்து வரும் மாணவி ஹனன் ஹமித் என்பவர் வெள்ள நிவாரணமாக ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #StandWithKerala #KeralaRains #KeralaFloods
    மெக்சிகோ நாட்டில் பத்திரிகையாளர்களை குறிவைத்து மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JournalistKilled
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் உள்ள குயிண்டானா ரூ என்ற பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தவர் ரூபன் பாட். இவர் அதே பகுதியில் இணைய தள பத்திரிகையை நடத்தி வந்தார்.

    இந்நிலையில், ரூபன் பாட் நேற்று ரிசார்ட்டில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியல் ரூபனை சரமாரியாக சுட்டனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ரூபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கடந்த ஒரு மாத காலத்தில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே ரூபன் பாட்டுக்கு கொலை மிரட்டல்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. #JournalistKilled
    பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். #KadamburRaju #TNAssembly
    சென்னை:

    பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்தின் குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.

    தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

    பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கு, பணியாற்றிய காலத்துக்கு ஏற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டது. அந்த தொகை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

    பத்திரிகையாளர் 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாகவும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சம் ஆகவும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் ஆகவும், 20 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் ஆகவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப நிதி உயர்த்தி வழங்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்பசுவாமிக்கு நினைவுத்தூண் அமைக்கப்படும்.

    தியாகி சுப்பிரமணியசிவா கனவை நிறைவேற்றும் வகையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயம் அமைக்கப்படும்.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

    திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள மாவீரன் பூலித்தேவன் மாளிகை சீரமைக்கப்படும்.

    பெரியார், அண்ணா நினைவகம் (ஈரோடு), ராஜாஜி இல்லம் (கிருஷ்ணகிரி), பிஷப் கால்டுவெல் இல்லம், (திருநெல்வேலி), தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் (நாகப்பட்டினம்), கோபால் நாயக்கர் மணிமண்டபம் (திண்டுக்கல்),



    காமராஜர் இல்லம் (விருதுநகர்), முத்து மண்டபம் (வேலூர்) மற்றும் காந்தி நினைவு மண்டபம் (கன்னியாகுமரி) ஆகிய 8 மாவட்ட நினைவகங்களில் மொத்தமுள்ள 110 பழைய புகைப்படங்கள் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்படும்.

    அரசு பொருட்காட்சிகளில் நடத்தப்படும் விழிப்புணர்வு நாடகங்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

    முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது பதிலுரையில் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி பீடம் ஏறிய பிறகு, ஒரு நாள், திரைப்பட விருதுகள் தொடர்பான ஒரு கோப்பை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டம் செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது.

    வழக்கமாக விவரம் அறிந்து கொண்டு, கோப்பை தனது செயலாளரிடம் கொடுத்துவிட்டு போகச்சொல்வார். அன்றைக்கு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னை அறைக்கு உள்ளே அழைத்தார்.

    என்னிடமிருந்து கோப்பை பெற்றுக்கொண்ட ஜெயலலிதா, அதை பக்கத்திலிருந்த சிறிய மேஜை மீது வைத்துவிட்டு என்னை அழைத்து, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்புடன் கொண்டாட வேண்டும். ஏற்பாடுகளை உடனே ஆரம்பித்துவிடுங்கள் என்று சொன்னார்.

    ஜெயலலிதாவின் ஆன்மா மகிழும்படி, அவர் இருந்தால் எப்படி நடத்தியிருப்பாரோ அப்படி தமிழ்நாட்டில் இதுவரையில் எந்த தலைவருக்கும் இல்லாத வகையில், எம்.ஜி.ஆருக்கு அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பிரமாண்டமான அளவில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் விழா நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #KadamburRaju #TNAssembly
    ×