என் மலர்
நீங்கள் தேடியது "Kalakadu"
- உலகநாதன் மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் தேங்காய் உருளி அருவிக்கு குளிக்க சென்றார்.
- மர்ம நபர்கள் யாரோ மோட்டார்சைக்கிளை திருடி சென்று விட்டனர்
களக்காடு:
வீரவநல்லூர் அணைக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிதுரை மகன் உலகநாதன் (23). இவர் மனோ கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது சகோதரனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் களக்காடு பச்சையாறு அணை அருகே உள்ள தேங்காய் உருளி அருவிக்கு குளிக்க சென்றார். அருவிக்கு அருகே உள்ள பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குளித்துக் கொண்டிருந்தார்..
பின்னர் குளித்து முடித்து விட்டு வந்து பார்த்த போது, மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ அதனை திருடி சென்று விட்டனர் என்பதை அறிந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மோட்டார்சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- களக்காடு சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது28). தொழிலாளி.
- படுகாயம் அடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது28). தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக கணவன், மனை விக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று முன் தினம் செல்வம், தனது மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்தார். இதைப்பார்த்த ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த முப்பிடாதி (27) என்பவர் செல்வத்தை தட்டிக் கேட்டார்.
இதில் செல்வதிற்கும், முப்பிடாதிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். நேற்று இரவில் செல்வம் களக்காடு-சேரன்மகாதேவி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முப்பிடாதிக்கும், செல்வத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முப்புடாதி, செல்வத்தை கத்தியால் குத்தினார். பின்னர் தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முப்புடாதியை கைது செய்தனர்.
- களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவர்.
- வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவராக உள்ளார்.
பூல்பாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவி செல்வ அரசிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் செல்வ அரசி கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று வள்ளிக்கண்ணு கணேசன் என்பவருடன் பைக்கில் களக்காடு வந்து கொண்டிருந்தார். ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே வந்த போது அங்கு பூல்பாண்டி நின்று கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த வள்ளிக்கண்ணு, பூல்பாண்டியிடம் சென்று வேலைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாய்? எனக் கேட்டுள்ளார். அதற்கு பூல்பாண்டி மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளார். வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.
மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பூல்பாண்டியை தேடி வருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர்.
- பயிர் செய்யப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை காட்டு பன்றிகள் நாசம் செய்தன.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்தன.
இதனை பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் கூட்டம் நாலாபுறங்களிலும் இருந்து நுழைந்ததால் விவசாயிகள் திணறினர்.
மேலும் விவசாயிகளை நோக்கி ஓடி வந்ததால் உயிருக்கு பயந்து விவசாயிகள் பின்வாங்கினர். அதற்குள் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை நாசம் செய்தன.
இவைகள் மஞ்சுவிளையை சேர்ந்த சில்கிஸ், பிரேட் செல்வின், தங்கராஜ், பாக்கியராஜ், ராஜ், முத்துக்குடி, ஜேம்ஸ் சுந்தர், லுர்கின் ஐசக் உள்பட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி மஞ்சுவிளையை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் (காங்கிரஸ்) சிம்சோன் துரை கூறுகையில், 'பன்றிகள் அட்டகாசத்தால் தினசரி வாழைகள் நாசமாகி வருகிறது. விளைநிலங்களுக்குள் புகும் பன்றிகளை விரட்ட முடியாமலும், வாழைகளை பாதுகாக்க முடியாமலும் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர்.
காட்டு பன்றிகள் தொடர்ந்து வாழைகளை துவம்சம் செய்வதால் 24 மணி நேரம் உழைத்தும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
- களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன்
- மனைவி பிரிந்து சென்றதால் நம்பிராஜன் விரக்தி அடைந்து விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது30). இவர் விவசாயி. இவருக்கும், மருதமுத்தூரை சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நம்பிராஜன் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும், அவரது மனைவி இந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர் கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் நம்பிராஜன் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் கடந்த 2-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த நம்பிராஜன் விஷம் குடித்தார். இதனால் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி.
- தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி. மாவடியை சேர்ந்தவர்கள் சிவலிங்கம், அருண். இவர்கள் இருவரும் மாவடி-டோனாவூர் சாலையில் அதிக வேகத்தில் விபத்தை ஏற்படுத்துவது போல், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த ராஜாகுமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறீர்களே என தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவலிங்கமும், அருணும் சேர்ந்து ராஜாகுமாரை தாக்கினர். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.
- களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் மஞ்சுவிளை பகுதியில் ரோந்து சென்றனர்
- 60 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் மஞ்சுவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 3 பேர் சாக்கு பையுடன் நின்று கொண்டு, சிலருக்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மஞ்சுவிளை தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகன் வினித்பாபு (25), திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த நைனா முகம்மது (63) என்பதும், தப்பிஓடியது மஞ்சுவிளையை சேர்ந்த மரியதாஸ் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 60 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மரியதாசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி, பெருந்தெரு, அண்ணா சாலை கீழத்தெரு ஆகிய பகுதிகளில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்
- சாலை வசதி, கழிவுநீர் ஒடை அமைத்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டி பராமரித்தல், கால்வாய் பாலம் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல், வீட்டிற்கு அருகே அபாயகரமாக இருக்கும் பனை மரங்களை அப்புறப்படுத்துதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. களக்காடு ஒன்றியம், களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி, பெருந்தெரு, அண்ணா சாலை கீழத்தெரு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அங்கு சாலை வசதி, கழிவுநீர் ஒடை அமைத்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டி பராமரித்தல், கால்வாய் பாலம் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல், வீட்டிற்கு அருகே அபாயகரமாக இருக்கும் பனை மரங்களை அப்புறப்படுத்துதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். உடனடியாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அரசு அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர், மலையடி புதூர் பஞ்சாயத்து தலைவர் மாவடி ரமேஷ், மாநில மகிளா காங்கிரஸ் இணை செயலாளர் கமலா, களக்காடு தெற்கு மற்றும் மத்திய வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அலெக்ஸ், காளபெருமாள், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ்வில்சன், நகராட்சி சேர்மன் சாந்தி சுபாஷ், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நளன், களக்காடு தெற்கு, மத்தியம் வட்டார நிர்வாகிகள் தங்கராஜ், டேனியேல், செல்வராஜா, கணேசன் மற்றும் களக்காடு நகர காங்கிரஸ் கவுன்சிலர்கள் சிம்சோன்துரை, மீகா, ராஜா மற்றும் வார்டு தலைவர்கள் துரை, பாக்கியராஜ், அன்னபாண்டி, யோசுவா, மகளிரணி நிர்வாகி ஸ்ரீதேவி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மணக்கண்.
- அஜித்குமார், அவரது உறவினர்கள் அந்தோணி, நூர்து உள்பட 7 பேர் சேர்ந்து மணக்கன்னை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணக்கண் (வயது 53). விவசாயி. இவருக்கும் அவரது சகோதரர் மகாராஜனுக்கும் பூர்வீக வீட்டை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மணக்கண் தனது மனைவி கலை செல்வியுடன் மகாராஜன் வீட்டு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராஜன், அவரது மகன் அஜித்குமார், அவரது உறவினர்கள் அந்தோணி, நூர்து உள்பட 7 பேர் சேர்ந்து மணக்கன்னை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மகாராஜன் உள்பட 7 பேரும் சேர்ந்து மணக்கண்ணை கம்பால் தாக்கினர்.
மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி அவர் மூலைக் கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகாராஜன் உள்பட 7 பேரையும் தேடி வருகின்றனர்.
- ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
- கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி மீண்டும் மாயமானார்
களக்காடு:
ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாயமானர். இதுபற்றி பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தொழிலாளி தனது மகளை மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல அரியகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி மீண்டும் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
- வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு மற்றும் பணகுடி நாளை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது
வள்ளியூர்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களுக்கு நாளை (15-ந் தேதி) மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.மேலும் மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளை கள் போன்றவற்றை அகற்றி மின்பாதையினை பராமரிக்க ஒத்துழைப்பு தரும்படி பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் பணகுடி பகுதிக்குட் பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்ப வனம், குமந்தான்,காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை,கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.களக்காடு பகுதிக்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம்,கருவேலன்குளம்,கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள். இந்த தகவலை வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்தார்.
- களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். தொழிலாளி.
- இதில் அவருக்கு தலை, கை, விரல்கள், கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 40). தொழிலாளி.
இவருக்கும், பரப்பாடி அருகே உள்ள கழுவூரை சேர்ந்த ரெஜினா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் விவாகரத்தானது.
இதற்கு தோப்பூர் வடக்குத்தெருவை சேர்ந்த தீனதயாளனும், அவரது மனைவி செல்வியும் (51) தான் காரணம் என ஜெயசீலன் கருதினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இதற்கிடையே சம்பவத்தன்று செல்வி வீட்டில் இருந்த போது, ஜெயசீலன் அவரது வீட்டுக்குள் புகுந்து செல்வியை அவதூறாக பேசி, அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் அவருக்கு தலை, கை, விரல்கள், கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயசீலனை தேடி வருகின்றனர்.