என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kallacharayam"
- கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
- ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட எத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
இதற்கிடையே, மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 90க்கும் மேற்பட்டோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.
- முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம்.
- மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவிலில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாதத்திற்குரியது. காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு என்பதில் உறுதி யாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., கட்சிகள், கள்ளக்குறிச்சி மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறீர்களா அல்லது அந்த மரணத்தை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்களா என்பது தெரியவில்லை.
இந்த கட்சிகள் தங்களின் மது கொள்கையை வெளிப்படுத்த மறுக்கின்றன. இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் அந்த ஊரில் மது விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அழகிரி, ஸ்டாலினை வீழ்த்த மதுவை கையில் எடுத்திருக்கிறார்கள். முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம். பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்கள் மீது இல்லை. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.
தவறு செய்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்க வில்லை. குற்றத்தை நியாயப்படுத்தவில்லை. சரியான பாதையில் அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கருத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அழகிரி கூறினார்.
- சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய சாவுகள் தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவகைகள் தாராளமாக கிடைக்கும் போது விஷச் சாராயம் எப்படி கிடைக்கிறது? எனவே இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் வேதனையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார். பொறுப்புள்ள மந்திரி இதை அரசியல் ஆக்காமல் இனிவரும் காலங்களில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆலோசனை வழங்கலாம்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் புறக்கணித்துவிட்ட நிலை யில், ஏதாவது காரணங்களை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அது எடுபடாது.
நடிகர் கமல் மிதமாக குடித்து கொள்ளலாம் என்று தனது கருத்தை வெளியிட்டு உள்ளார். நாங்கள் காந்திய வாதிகள். முழு மதுவிலக்கைத்தான் விரும்புகிறோம்.
ஆபத்தில்லாமல் குடிக்கலாம் என்பது சமூகத்தில் மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். ஆரோக்கியமான வாழ்வுக்குத்தான் வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
- தலித்துகள் விஷ சாராயத்தால் பலியான போதிலும் ராகுல் இதுகுறித்து பேசாதது ஏன்?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சமபத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக , நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
நாளை அதிமுக சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். தமிழக பாஜக சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன், காங்கிரஸ் இந்த சம்பவத்துக்கு எதிராக குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது அதிர்ச்சியளிக்கிறது.
லைசன்சுடன் மாநில அரசால் டாஸ்மாக் நடத்தப்பட்டு வரும் நிலையில் காலக்குறிச்சி ஊருக்கு நடுவில் கெமிக்கல் விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? உயிரிழந்தவர்களில் 40 பேர் தலித்துகள் ஆவர், தலித்துகள் விஷ சாராயத்தால் பலியான போதிலும் ராகுல் இதுகுறித்து பேசாதது ஏன்? இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது.
- எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய விவாதத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் பேசிய வீடியோவை அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது என்றும் எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை" என்று சபாநாயகர் பேசுகிறார்.
ஏற்கனவே சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வீடியோவை முழுமையாக ஒளிபரப்புவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இப்போது சபாநாயகர் அவர்களே இப்படி பேசுவது ஜனநாயகமா என்று நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் சுமந்த சி ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
- நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசு நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதுடன் நேற்று பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது:-
கள்ளச் சாவு....க்கு எதுக்கு நல்ல சாவு (ரூ.10 லட்சம்)? என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டள்ள பதிவில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடு கட்டாது. இனி மரணங்கள் நிகழாத வண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து இயக்குனர்கள் பா.ரஞ்சித், மோகன்ஜி உள்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்.
- கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
- கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில், சாராயம் விற்பனை செய்த சின்னதுரை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாராய வியாபாரி சின்ன துரையை கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.
- புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
- மக்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுமா? இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர் குணமடைவார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதல் ஒவ்வொருவராக உயிரிழப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்.
கள்ளச்சாராயம் குடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்.
தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி வருகிறது. அதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சியில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பூத் வாரியாக அமைச்சர்களை நியமித்துள்ளனர். அந்த அக்கறையை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காட்டி இருக்கலாம்.
ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.
கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுர தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 35 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விஷச்சாராயத்தால் பலியான அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லாடி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.
எனவே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசு.
- அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்கா, அரசு விற்கும் மதுவினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொடுந்துயரம் நிகழ்ந்தது. விழுப்புரத்தில் திமுக நிர்வாகியே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதும், அவருக்கும் சேர்த்து திமுக அரசு நிவாரணத்தொகை அறிவித்த கொடுமைகளும் நடைபெற்றது.
அதன் பிறகாவது திமுக அரசு விழிப்புற்று கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது மீண்டும் 5 உயிர்கள் பலியான துயரங்கள் நிகழ்ந்திருக்காது. அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? கள்ளச்சாராயத்தால் கண்ணுக்குமுன் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகும்போது மட்டும், மக்களின் மனக்கொந்தளிப்பிற்கு அஞ்சி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் திமுக அரசு, மெல்ல மெல்ல பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் மலிவு விலை மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன்? ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற திமுகவின் கடந்தகால வாக்குறுதி என்னானது? சாராய ஆலைகளை நடத்தும் திமுகவினர் தங்கள் ஆலைகளை இதுவரை மூடாதது ஏன்? கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், அரசு நடத்தும் மதுக்கடைகளை இதுவரை மூடாதது ஏன்?
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையைத் தடுக்கத் தவறியதும், வீரன் மதுபானம், கோதுமை பீர் வகை என்று டாஸ்மாக் மதுவிற்பனையை அதிகப்படுத்தியதுமே முதன்மையான சாதனையாகும். மகளிருக்கு உதவித்தொகை தருவதாகப் பெருமை பேசும் திமுக அரசு, டாஸ்மாக் மது மற்றும் கள்ளச்சாராயத்தால் தந்தையையும், கணவரையும், பிள்ளைகளையும், உடன் பிறந்தாரையும் இழந்து தவிக்கும் பெண்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது? தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகவுள்ள போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுப்பதில் திமுக அரசு தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்? கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வினைவிட, திமுக அரசிற்கு மதுவிற்பனையால் வரும் பல்லாயிரம் கோடி வருமானமும், அதன் மூலம் நடைபெறும் ஆட்சி அதிகாரமும்தான் முக்கியமானதா? என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது.
ஆகவே, கள்ளச்சாராய விற்பனையை முற்று முழுதாக தடுக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடத்தும் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்