search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kappalur Tollgate"

    • சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார்.
    • போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருமங்கலம்:

    கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருமங்கலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இன்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அது தோல்வியில் முடிந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் சுங்கச்சாவடி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு.
    • மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி நாளை முதல் மீண்டும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தையில், 2020 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ சுற்றுவட்டார மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம் என்றும், உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி நாளை திட்டமிட்டபடி பந்த் நடைபெறும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்துள்ளது.

    • கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • 2024ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), டோல் கேட்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,

    மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக் கோரி பலமுறை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.

    2024ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), டோல் கேட்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. எனவே அப்பகுதி மக்களுடன் இணைந்து கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்றும், மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்து போராடிய அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும், கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்பகுதி மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கைதுசெய்துள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுவிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • டோல்கேட்டை முற்றிலும் அகற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
    • கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

    மதுரை:

    தென்தமிழகத்தின் நுழைவுப் பகுதியான மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூரில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கப்பலூர் டோல்கேட்டை மூடக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    இதற்கிடையே கடந்த வாரம் உள்ளூர் பகுதி மக்களின் வாகனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பல்வேறு அமைப்புகள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் தொடர்ந்து சுங்கச்சாவடிக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று கப்பலூர் டோல்கேட்டில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டோல்கேட்டை மூட வலியுறுத்தியும், உள்ளூர் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், டாக்டர் சரவணன், மகேந்திரன், தமிழரசன், பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அ.தி.மு.க.வினரின் முற்றுகை போராட்டம் காரணமாக கன்னியாகுமரி முக்கிய நெடுஞ்சாலையான கப்பலூர் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் மூன்று ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார். நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.

    தற்போது உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் 50 சதவீத கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது. இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது.

    எனவே டோல்கேட்டை முற்றிலும் அகற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த அரசு மக்கள் பிரச்சனையில் அக்கறை செலுத்தவில்லை.

    மத்திய அரசு ஏற்கனவே 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டுகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள். அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும், ஆனால் அதை அரசு செய்யவில்லை. எடப்பாடியார் இருக்கும்பொழுது டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

    அதன் மூலம் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அந்த போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மக்களுக்கு சேவை செய்யாமல் லாப நோக்கத்துடன் தான் தற்போது இயங்கி வருகிறது.

    கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இந்த பிரச்சனையில் எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து போராடி வருகிறோம். அடக்குமுறைக்கு அஞ்சாமல் எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×