search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka government"

    • மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் பேச உள்ளார்.
    • காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக இந்த ஆணையங்கள் அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார். அவர் இன்று மாலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து பேச உள்ளார்.

    காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காவிரியில் உரிய நீரை திறந்து விட, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது.
    • மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக இந்த ஆணையங்கள் அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது.

    ஆனால் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா கண்டுகொள்வதில்லை. உரிய நீர் திறந்து விடப்படாததால் இந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ,9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு கர்நாடகா அனுமதி கேட்டுள்ளது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் அழகாபுரியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், மத்திய நீர்வள ஆணையத்திடம் சில தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு இருந்தார்.

    அதற்கு நீர்வள ஆணையம் பதில் அனுப்பியுள்ளது. அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெங்களூருவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவிடம் இருந்து 15-3-2024 அன்று கடிதம் பெறப்பட்டது. அந்த கடிதத்துக்கு 3-5-2024 அன்று பதில் வழங்கப்பட்டது.

    காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எழுதிய கடிதத்தையும் நீர்வள ஆணையம் பெற்றது.

    ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் இன்று வரை எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.

    இவ்வாறு நீர்வள ஆணையம் பதில் தெரிவித்து உள்ளது.

    • விவசாயிகள் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது.
    • தமிழக விவசாய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசினுடைய மிக முக்கிய கடமையாகும்.

    தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது மட்டும் அல்லாமல், முறைப்படி நீதிமன்றத்தையும் அணுகி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் உரிய நேரத்தில் அரசு பெற்று தர வேண்டும் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் டெல்டா பகுதி முழுவதும் பாலைவனமாக மாறிவரும் நிலையில், விவசாயிகள் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது.

    எனவே கர்நாடக அரசு தர மறுக்கும் தண்ணீரை உடனடியாக தமிழகத்திற்கு பெற்று நமது தமிழக விவசாய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசினுடைய மிக முக்கிய கடமையாகும். எனவே நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியையும் கூட்டி தமிழக விவசாயிகள் நலனை காக்க மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்ற கூறியுள்ளார்.

    • கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது.
    • தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது.

    ஜூன் 24 வரை 7.236 டி.ம்.சி. தண்ணீரை திறந்துவிடவும், ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவும் காவிரி மேலாண்மை ஆணையத்தால் கர்நாடக அரசுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்திற்கே இன்னும் 5.376 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடாமல் காலம் தாழ்த்துகிறது கர்நாடக அரசு. இப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் திறந்து விடாததால் தமிழக விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகளும், பொது மக்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை தமிழக அரசு எக்கோணத்தில் பார்க்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடரக்கூடாது. எனவே ஜூன், ஜூலை மாதத்திற்கு கர்நாடக காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நீரை காலத்தே தமிழக அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இது இஸ்லாமிய சமூக மக்களை தவறாக சித்தரிக்கும் பிரச்சாரப் படமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • இந்த படத்தின்மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    ஹிந்தியில் அணு கபூர், மனோஜ் ஜோஷி, அஸ்வினி காலேக்கர் ஆகியோர் நடிப்பில் கமல் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹமாரே பாராஹ் (Hamare Baarah). ஆரம்பம் முதலே கடும் சர்ச்சைகளுக்கு உள்ளான இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    தனது தாயின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி வழங்குமாறு தந்தையை எதிர்த்து நீதிமன்றத்தில் மகள் வழக்கு தொடுகிறாள். இதை அடியொற்றி நகரும் கதை சர்ச்சையாவதற்கு முக்கிய காரணம், இது இஸ்லாமிய சமூக மக்களை தவறாக சித்தரிக்கும் பிரச்சாரப் படமாக உள்ளது என்ற குற்றச்சாட்டே ஆகும்.

     

    மேலதிக பிரச்சார தொனியில் படத்தின் கதை நகர்வது மக்களிடையே விரோதத்தை உருவாக்கி சமூக மோதல்களை ஏற்படுத்தும் என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவித்துவருகின்றனர். இந்த படத்தின்மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட மாநில அரசு தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் படத்தின் டிரைலர் சொல்லப் புகும் கருத்தை ஆராய்ந்தும், இந்த படம் சமூகங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதால் கர்நாடாக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964இன் படி 'ஹமாரே பாராஹ்' படத்தை திரையிட முதற்கட்டமாக 2 வாரங்களுக்கு தடைவிதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக 'காஸ்மீர் பைல்ஸ்', 'கேரளா ஸ்டோரி', 'பஸ்தர்-நக்சல் ஸ்டோரி' உள்ளிட்ட படங்களும் வரலாற்றைத் திரிக்கும் பிரச்சாரப் படங்கள் என்ற விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை.
    • அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான்.

    சென்னை:

    இன்று (மே 1-ந் தேதி) உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மே தின நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமை நிலைய செயலாளரான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், தொ.மு.க. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதிச் செயலாளர் மதன்மோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

     

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை. என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை. அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி ஒழுங்காற்று குழு தண்ணீரை திறந்து விடுமாறு கூறியும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

    ஆகையால் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். எனவே காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.
    • இச்சட்டம் காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநில சட்டசபையில் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.

    ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோவில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.

    இந்நிலையில், இந்தச் சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த பா.ஜ.க, முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக, கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசு தனது கஜானாவை நிரப்ப முயற்சிக்கிறது. மாநில அரசு ஏன் இந்துக் கோவில்களில் இருந்து வருமானம் ஈட்டப் பார்க்கிறது? தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்துக் கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது.
    • எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்,''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன், வனத்துறையிடமிருந்து எடுக்கப்படும் நிலத்திற்கு மாற்றாக வேறு நிலம் வழங்குவதற்கும், அணைக்கான நிலம் கையகப்படுத்தல் மற்றும் திட்டமிடல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்திருக்கிறார்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அளித்த அனுமதி தான் கர்நாடகத்தின் இந்த அத்துமீறல்கள் அனைத்துக்கும் அடிப்படை ஆகும். இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விரிவான திட்ட அறிக்கை குறித்து விவா திக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

    அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணை கட்டுவதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

    மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என கர்நாடகம் கூறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது.

    மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகதாது அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது.

    இதை தெரிந்து கொண்டும் அணைக்கான பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும்; எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல கிராமப்புறங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
    • வங்கிகளில் கட்டாய கன்னட மொழிக்கான அரசாணையை இன்னும் ஓரிரு தினங்களில் கொண்டு வர முடிவு.

    கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில்தான் சேவைகள் வழங்க வேண்டும் என அரசாணை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பல கிராமப்புறங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் வங்கிகளில் இந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட ஊழியர்கள் அதிகம் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே மொழி புரிவதில் தகராறு ஏற்படுகிறது.

    இதுதொடர்பாக, மக்கள் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து வங்கிகளில் கட்டாய கன்னட மொழிக்கான அரசாணையை இன்னும் ஓரிரு தினங்களில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வேளாண்துறை வருவாய்த்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அடுத்த 15 தினங்களுக்கு 5000 கன அடி வீதம் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    சம்பா சாகுபடியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    • நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் கொடுத்திருக்க வேண்டும்.
    • மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று உள்ளது.

    சென்னை:

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை டெல்லி செல்ல உள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்துவிடவில்லை. ஆகையால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் அவர்களுக்கு வலியுறுத்த சொல்ல, டெல்லி செல்கிறேன்.

    காவிரி நீரை ஒவ்வொரு மாதம் எவ்வளவு வழங்க வேண்டுமோ அதனை கர்நாடகம் வழங்க வேண்டும் என அம்மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். பருவமழை குறைவால் தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியது பற்றி கேட்கிறீர்கள். தண்ணீர் கொடுக்க முடியாத காரணத்தை அவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் வேண்டும் என்று நமது காரணத்தை தெரிவிக்கிறோம்.

    நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியது. 6.357 டி.எம்.சி தண்ணீர் நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுடன் கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். ஏன் அங்கு அணைகட்டக் கூடாது என்பதை காரணத்தோடு விளக்கம் கொடுப்போம்.

    மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று உள்ளது. ஆனால் அது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து கேட்டபோது, அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க மறுத்து ஆள விடுங்க... என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.

    • ராம்தேவ் மலையில் மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்பட உள்ளது.
    • குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராமநகரில் உள்ள ராமதேவரா மலையில் ராமர் கோவில் கட்ட கர்நாடக அரசு முன் வந்தது. இதையடுத்து ராமர் கோவில் கட்டப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த கோவிலை வடிவமைக்கும் வரைபடம் உருவாக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் மாநில உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தலைமையில் நடைபெற்று வருகிறது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டு, ராமநகரில் கோவில் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில், இந்த ராமர் கோவிலின் கட்டிடத்திற்கான வரைபடம் வீடியோவை மந்திரி அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ளார். 2 நிமிடம் ஓடும் வீடியோவில் கோவிலின் வளாகம், மண்டபங்கள், கோபுரம், கோவில் மைய பகுதி கட்டிடங்களின் வரைபடம் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் தென் இந்தியாவின் ராமர்கோவில் என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மலைக்கு ராமர் வந்து சென்றதாகவும், இதனால் இங்கு ராமர் கோவில் கட்டப்பட இருப்பதாகவும் அரசு தெரிவித்து உள்ளது.

    ராம்தேவ் மலையில் மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்பட உள்ளது. மலையில் சாலுமண்டபம், பிரமாண்ட கோபுரம், அனைத்து வசதிகளுடன் கூடிய படிக்கட்டு, சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், காட்சி கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அரசு முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. இந்த ராமர் கோவில் மூலம் மாவட்டத்தில் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

    ×