search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasimedu"

    • கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின.
    • காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின. இதனால் மீன்கள்வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக குவிந்து விற்பனை செய்யப்பட்டது. இறால், கடமா, நண்டுகள் வரத்து சற்று குறைவாகவே இருந்தது.

    மேலும் கொடுவா மீன்கள் வரத்து இல்லை. தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமானோர் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள். இதனால் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மீன்வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடந்த வாரத்தை விட சங்கரா மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் ரூ.200-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்து விற்கப்பட்டதால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி சென்றனர்.

    காசிமேட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.900

    வவ்வால் மீன் - ரூ.500

    சைனீஸ் வவ்வால் - ரூ.1300

    சங்கரா - ரூ.200

    ஷீலா - ரூ.200

    இறால் - ரூ.400

    கடமா - ரூ.400

    நண்டு - ரூ.300

    சிறிய மீன்கள் - ரூ.50 முதல் 100 வரை.

    • மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது.
    • மீன்களை மக்கள் போட்டிபோட்டு வாங்கிசென்றனர்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் 61 நாட்கள் அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

    கடந்த வாரம் மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை விசைப் படகு மீனவர்கள் அதிக அளவில் கரை திரும்பாததால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. மேலும் விலையும் குறையாமல் இருந்தது.

    இந்த நிலையில் தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு முதலே அதிக அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கினர்.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பியதால் கடந்த வாரத்தை விட பெரிய மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப் பட்டது. இதனால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.50 முதல் ரூ.200 வரை குறைவாக இருந்தது.

    கடந்த வாரத்தில் ரூ.1500 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ரூ.1200-க்கு விற்பனை ஆனது. இதே போல் மற்ற மீன்களில் விலையும் குறைந்து இருந்தது.

    இதனால் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மீன்களை போட்டிபோட்டு வாங்கிசென்றனர். காசி மேட்டில் மீன்வாங்க அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் நல்ல விற் பனை ஆனதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். கூடுதல் நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் அடுத்த வாரம் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே அடுத்தவாரம் இப்போதைய நிலையை விட கூடுதலாக பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், மேலும் விலையும் குறையும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். காசிமேட்டில் மீன்கள் விலை (கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.1200

    வெள்ளை வவ்வால் மீன்- ரூ.1200

    கருப்பு வவ்வால் மீன்- ரூ.700

    சங்கரா - ரூ.350

    ஷீலா - ரூ.250

    கிழங்கா - ரூ.300

    டைகர் இறால் - ரூ.1000

    இறால் - ரூ.300

    கடமா - ரூ.300

    நண்டு - ரூ.300

    • விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
    • கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது.

    ராயபுரம்:

    தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்வதில்லை. குறைந்த தூரத்தில் மட்டும் பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளது. பெரிய வகை மீன்கள் வருவதில்லை. இதனால் மீன்விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. வார இறுதி நாளான நேற்று காசிமேட்டில் மீன்விலை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.1400 வரையும், வவ்வால் மீன் ரூ. 750 வரையும் விற்கப்பட்டன. இதேபோல் சிறியவகை மீன்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. பெரியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வரவில்லை. எனினும் விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.

    கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரத்தில் ரூ.260 விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்து இருக்கிறது.

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை விபரம் வருமாறு:-

    வஞ்சரம் - ரூ.1400

    சங்கரா - ரூ.400

    வவ்வால் - ரூ.750

    கொடுவா - ரூ.600

    நண்டு - ரூ.350

    காணங்கத்தை - ரூ.200

    ஷீலா - ரூ.500

    இறால் - ரூ.400.

    மீன்விலை உயர்வு குறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகாலம் அடுத்தமாதம் 14-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்து அதிக அளவில் மீன்கள் வரும். தற்போது மழை எச்சரிக்கையால் அங்கும் மீன்பிடிப்பது பாதிக்கப்பட்டு உள்ளதால் மீன்கள் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் மீன்விலை உயர்ந்து உள்ளது. மீன்பிடி தடைகாலம் முடியும் வரை விலை உயர்வு இருக்கும் என்றார். 

    • வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
    • இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின.

    இதனால் கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. கடமா எப்போதும் விற்கப்படும் விலையை விட ரூ.200 வரை குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.

    இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் இன்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் இன்னும் 2 மாதத்திற்கு இதே நிலைதான் இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகால் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிவிட்டனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் இங்குள்ள மீன் விற்பனை கூடம் இனி 1 ½ மாதத்திற்கு வெறிச்சோடி கிடக்கும். அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்கள், பைபர் படகுகளுக்கு தடை இல்லை என்பதால் அவர்கள் கடற் கரை யோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகமாகும் என்றனர்.

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இயற்யை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.
    • தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும்போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின் போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதிநவீன தொலைத்தொடர்பு டிரான்ஸ்மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை மீனவர்களின் படகுகளில் பொருத்தும்போது அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்யை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.

    தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது. இந்த டிரான்ஸ்பாண்டர்கள் ஜிசாட்-6 செயற்கைகோள் மூலம் தகவல் தொடர்பு அளிக்கும்.

    இதனைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 600 மீனவர்களின் படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பா ண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஜிசாட்-6 செயற்கைகோள் வழியாக இயங்கும்.

    இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரோ இந்த தொழில்நுட்பத்தை வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 1,400 படகுகளில் இவை இணைக்கப்படும். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் குளச்சல் ஆகிய இடங்களில் இதுவரை 900 டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன.

    நாட்டிலேயே ஜிசாட்-6 மூலம் தகவல் தொடர்பு சாதனங்களைப் பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட வேண்டும் என்றால் அதனை இந்த சாதனம் மூலம் செய்யலாம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இயங்கக்கூடிய செலவு குறைந்ததாகும் என்றார்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது.
    ராயபுரம்:

    கடலோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை குழு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது. இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுனாமி தாக்கப்போவதாக ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

    இது சுனாமி ஒத்திகை என்பதை அறியாத அந்த பகுதி மக்களில் பலர் பதட்டம் அடைந்தனர். பின்னர் ஒத்திகை என்பதை தெரிந்து கொண்டதும் ஆர்வமுடன் அதை கவனித்தனர்.

    இந்த ஒத்திகையின்போது சுனாமி தாக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? உயிரை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீயணைப்பு படையினர், மருத்துவ குழு, போலீஸ், மின்வாரிய ஊழியர்கள், வருவாய் துறை உள்ளிட்ட 15 துறைகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் செய்து காட்டினார்கள்.

    பிளாஸ்டிக் படகு மூலம் மக்களை மீட்பது, காயம்பட்டவர்களை ஸ்ட்ரெக்சர் மூலம் தூக்கிச் செல்வது போன்றவற்றை நடித்து காட்டினார்கள். பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. காலை 9.30 மணிமுதல் மதியம் ஒரு மணி வரை இந்த ஒத்திகை நடந்தது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

    காசிமேட்டில் கப்பல் ஊழியரிடம் கத்திமுனையில் பணம்-செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெலஸ்டின் ஜோஷ்யன்.

    இவர் பாரிமுனையில் உள்ள கப்பல் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கம்பெனி வேலையாக எண்ணூர் சென்றார்.

    நள்ளிரவு 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் காசிமேடு எக்ஸ்யூஸ் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் அவரை வழி மறித்தது.

    ஜெலஸ்டின் நின்றதும் அவரிடம் கத்தியை காட்டி, பணம், செல்போன் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெலஸ்டினை கத்தியால் தாக்கி, அடித்து உதைத்தனர்.

    அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

    இதற்குள் வழிப்பறி கும்பலை சேர்ந்தவர்கள் ஜெலஸ்டின் மோட்டார் சைக்கிள் மீது கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த ஜெலஸ்டின் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறி கும்பலை தேடி வருகிறார்கள். இந்த பகுதியில் போலீசார் இரவு ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீட்டில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

    ராயபுரம்:

    காசிமேடு காசிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தேசப்பன். இவர் குண்டர் சட்டத்தில் 13 முறை ஜெயிலுக்கு சென்றவர்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த தேசப்பன், பின்னர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. போலீஸ் நிலையத்திற்கும் செல்ல வில்லை. கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ரவுடி தேசப்பன் காசிமேட்டில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் கண்ணப்பன் உத்தரவுப்படி ரவுடி தேசப்பனை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.

    காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் தலைமையில் துப்பாக்கியுடன் சென்ற போலீசார், தேசப்பன் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு தேசப்பனுடன் அவருடைய கூட்டாளிகள் 4 பேரும் இருந்தனர்.

    இதில் தேசப்பன், அவரது கூட்டாளிகள் கவுதம், வேலு மணி, சக்திவேல் ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விக்னேஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

    கைதான பிரபல ரவுடி தேசப்பன் 13 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு சென்றவர். இவர் மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல வழக்குகள் உள்ளன.

    கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே, நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. தப்பி ஓடிய விக்னேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    காசிமேட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு பகுதியில் காசிபுரம் ஏ பிளாக்கை சேர்ந்தவர் நண்டுகுமார். இவரது மனைவி தனலட்சுமி (48). வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே நேற்று இரவு காசிமேடு போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டனர் . அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலமாக்கி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தனலட்சுமி கைது செய்யப்பட்டார். மது பாட்டில்கள் விற்றதாக ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டவர் ஆவார். #tamilnews

    ×