என் மலர்
நீங்கள் தேடியது "Kilambakkam Bus Stand"
- அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்கலாம்.
- கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகரப் பகுதியில் உள்ள பஸ் நிலையங்கள் புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 1200 பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. அதில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பஸ்கள் இனிமேல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 850 ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்குள் வராமல் கிளாம்பாக்கத்தோடு நின்றுவிடும்.
இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
கிளாம்பாக்கத்தில் இன்று புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டாலும் ஒரு சில வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. அதனால் உடனே ஆம்னிகளை அங்கிருந்து இயக்க இயலாது. அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பிறகு தான் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க முடியும்.
அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்கலாம். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு போகும். அதே போல தென் மாவட்ட பகுதியில் இருந்து வரும் பஸ்கள் கிளாம்பாக்கம் வந்து பின்னர் அங்கிருந்து கோயம்பேடு நிலையத்திற்கு வந்து சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகளை 28 மாதங்களில் முடிக்கப்பட்டது.
- நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து முனையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாவது:-
புதிய பேருந்து முனையம் திறப்பு, தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகள் 28 மாதங்களில் முடிக்கப்பட்டது.
ரூ.90 கோடி அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் 2,130 பேருந்துகளை இயக்கும் அளவுக்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையம்!
— M.K.Stalin (@mkstalin) December 30, 2023
வளர்ந்து கொண்டே இருக்கும் சென்னையின் தேவைகளை நிறைவேற்றும் உட்கட்டமைப்பு!
கிளாம்பாக்கத்தில் உருவாகியுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு...#KalaignarCentenaryBusTerminus pic.twitter.com/T2SIItn8Qv
- தினமும் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
வண்டலூர்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்தார்.
இப்பேருந்து முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்...
* கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் பேருந்து முனையம் திறப்பு.
* 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.
* 14 நடைமேடைகள், புற காவல்நிலையம், எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

* தினமும் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
* முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
* 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
* மருத்துவமனை, 4 உணவகங்கள் உள்ளிட்ட 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
* பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய் பால் ஊட்டும் அறை, ஏடிஎம் அறைகள், 540 கழிப்பறைகள், ஓட்டுநர், நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளன.
* 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
- பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று காலை முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து சென்னை வரும் எஸ்இடிசி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தற்போது கோயம்பேட்டில் இருந்தே இயங்குகிறது. பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இப்பேருந்துகள் புறப்படும்.
மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யாத பணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
- இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
- விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்.
சென்னை:
கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று காலை முதல் வந்துள்ளது.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்.
பெங்களூரு நெடுஞ்சாலை, ஈசிஆர் வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தென் மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்தவர்களுக்கு கிளாம்பாக்கம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
- அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்த பயணிகளிடம் சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் அதேபோன்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கும் பயணம் செய்வதற்காக பெறப்பட்ட கட்டணத்தில் தற்போது கிளாம்பாக்கம் வரை மட்டுமே அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுவதால் கட்டண வித்தியாசத்தொகை கண்டக்டர்கள் மூலம் பயணம் தொடங்கும்போது ரொக்கமாக திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்ப்பதற்காகவும், அதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறு நடைமுறைபடுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோக்கள், கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
- நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.
அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது.
பஸ் நிலையத்தின் உள்ளே நுழைய மாநகர பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் விரைவு பஸ்களுக்கு தனித்தனி வாயில்கள் உள்ளன. மேலும் இந்த 2 பஸ்களும் நிறுத்தும் இடங்களுக்கு இடையேயான தூரம் அதிகம் உள்ளதால் வெளியூர்களில் இருந்து அதிக உடைமைகளை கொண்டு வரும் பயணிகள் மாநகர பஸ்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தினருடன் எங்கே செல்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது.
பஸ் நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் பேட்டரி கார் வசதி உள்ள நிலையில் அவை அதிகாலை நேரத்தில் பயன்பாட்டில் இல்லை. இதனால் பயணிகள் அவதி அடையும் நிலை உள்ளது.
மேலும் சில பயணிகள் விரைவு பஸ்களில் ஏற்கனவே கோயம்பேடு வரை டிக்கெட் முன்பதிவு செய்து உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்படுவதால் அவர்கள் டிரைவர், கண்டக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலையில் 2-வது நாளாக சில பயணிகள் கண்டக்டரிடம் இதுபற்றி கேட்டு கேள்வி எழுப்பினர்.
இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கிய பயணிகள் ஓட்டேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி. சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் நடை மேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோக்கள், கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட வேண்டும். இல்லையெனில், பஸ் நிலையம் முழுமையாக செயல்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை ஏற்படும்.
இதேபோல் சர்வீஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைவதால் வரும் நாட்களில் அதிக அளவில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இதில் தேவையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த இடம் மற்றொரு பெருங்களத்தூர் சந்திப்பாக மாறிவிடும் என்று பயணி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு வரை செல்ல கவுண்டரில் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் பணம் பஸ்சிலேயே கண்ட க்டர் மூலம் திரும்ப வழங்கப்படும். 'ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தைத் திரும்பப்பெற சில நாட்கள் ஆகும் என்றார்.
பயணிகள் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலையம் போன்று கட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இங்குள்ள ஒரு சில உணவகங்களைத் தவிர பெரும்பாலான கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதனால் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு தவிக்கும் நிலை உள்ளது. குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வரவில்லை. புதிய பஸ் நிலையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில் தொடரும் குழப்பத்தால் பொதுமக்களும், பயணிகளும் தவித்து வருகிறார்கள். பஸ் நிலையத்தில் இறங்குபவர்கள் விரைந்து மாநகர பஸ்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்றனர்.
சி.எம்.டி.ஏ.அதிகாரி ஒருவர் கூறும்போது, பஸ் நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பஸ்கள் எளிதில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும். ஜி.எஸ்.டி. சாலையில் பயணிகள் சாலையைக் கடக்கவும், பஸ்நிலையத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக வந்து சேரவும் அப்பகுதியில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்படுவார். அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றார்.
- முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
- கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.430 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
- அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டது.
இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து அரசு விரைவு பஸ்களும் 31-ந்தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கிளாம்பாக்கத்திற்கு அரசு விரைவு பஸ்கள் மட்டும் முழு அளவில் மாற்றப்பட்டு இயக்கப்படுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிற போக்குவரத்துக்கழக பஸ்கள் இன்னும் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்து சென்னை வரும் பயணிகள் மட்டும் சிரமப்படுகின்றனர்.
அவர்கள் பல பஸ்கள் மாறி தங்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் தான் கோயம்பேடு வரை வர முடிகிறது.
அரசு பஸ்களில் பயணிப்பவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்களுக்கு மாறி வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில் அங்கிருந்து இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
850 ஆம்னி பஸ்கள் தென்மாவட்ட பகுதிகளுக்கு தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை பராமரிப்பதற்கு தேவையான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இது குறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு பார்க்கிங் பகுதி ஒதுக்கப்படவில்லை. இது தவிர பஞ்சர், வீல் அலைண்ட்மென்ட் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அங்கு வசதி இல்லை. அவற்றை செய்து கொடுத்தால்தான் ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியும்.

ஆம்னி பஸ்களை இயக்க தேவையான அடிப்படை வசதிகள் இருந்தால்தான் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடியும். இல்லையென்றால் கோயம்பேட்டிற்கு பஸ்களை கொண்டு வர வேண்டும்.
எனவே எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால்தான் மாற்ற முடியும். அது வரையில் கோயம்பேட்டில் இருந்துதான் பஸ்கள் செல்லும். இதுபற்றி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு உடனே மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆம்னி பஸ்களை மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தென்மாவட்டங்கள், சேலம், கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் இயக்கக்கூடிய எல்லா பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால்தான் போக்குவரத்து நெரிசல் குறையும். அரசு பஸ்களை மட்டும் மாற்றினால் போதாது.
மேலும் இதனால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். அனைத்து பஸ்களையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால் மட்டும்தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
- பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.
குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.

மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.
இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கூடுவாஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கம்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகிறது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. இதனால் சர்வீஸ் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை எனவும் சிரமம் ஏற்படுவதாகவும் பொதுக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கூடுவாஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரெயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.
- அடுத்தடுத்து ஆகும் செலவை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரெயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரெயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அடுத்தடுத்து ஆகும் செலவை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓராண்டுக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் இந்த வாரத்தில் ரெயில்வே வாரியம் டெண்டர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக ரெயில்வே திட்டங்களுக்கு ரெயில்வே துறை நிதி ஒதுக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கான தேவை என்பதால் சிஎம்டிஏ நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.